ஓசூர் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் வேதனை

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு மீண்டும் யானைகள் வந்துள்ளதால், இரவு நேரத்தில் யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா வனப்பகுதியிலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 100-க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி தேன்கனிக்கோட்டை அதன் அருகே உள்ள வனப்பகுதிகளில் தனித்தனி குழுவாக பிரிந்து சென்றன. இதிலிருந்து 60-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிந்து சானமாவு வனப் பகுதிக்கு இடம் பெயர்ந்தன. அருகே உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.

இதனால் வனத்துறையினர் யானைகளை ராயக்கோட்டை வனச்சரகம் ஊடேதுர்கம் வனப் பகுதிக்கு விரட்டினர். ஆனால் யானைகள் அங்கு செல்லாமல் கெலமங்கலம் பெரிய நாகதுணை ரயில்வே தண்டவாளத்தை கடந்து, இருதாளம், ஒன்னுகுறுக்கி, சினிகிரி வழியாக மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. அப்போது வழியில் உள்ள ராகி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.

மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு யானைகள் கூட்டம் இடம் பெயர்ந்துள்ளதால், சானமாவு, போடூர்பள்ளம் உள்ளிட்ட 15- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம், வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் திரும்பிச் செல்லாமல் தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பன்னர் கட்டா வனப்பகுதியி லிருந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதம் யானைகள் ஓசூர் வனச்சரகத்திற்கு வலசை வருவது வழக்கம், அதே போல் தற்போது 100-க்கும் மேற்பட்ட யானைகள் வலசை வந்துள்ளன. அந்த யானைகள் வழக்கமாக தேன்கனிக்கோட்டை, சானமாவு வழியாக போடூர் பள்ளம் வழியாக வந்து செல்வது வழக்கம். அதே போலத்தான் அந்த யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

அவற்றுக்கு தேவையான உணவு எங்கு கிடைக்கிறதோ அங்கே தான் மீண்டும் வரும். இதனால் தான் தொடர்ந்து விரட்டினாலும் மீண்டும் சானமாவுக்கு திரும்பி வந்து விடுகின்றன. முதல் முறை வரும் போது, 30 யானைகள் மட்டும் வந்தன. பின்னர் விரட்டிய பிறகு அவற்றுடன் 60-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக திரும்பி வந்துள்ளன. சானமாவு பகுதியில் உள்ள யானைகளை விரட்டும் பணியில் 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூலம் சில நாட்களில் அனைத்து யானைகளையும் கர்நாடக மாநிலத்துக்குள் விரட்ட வாய்ப்புள்ளது, எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE