பிக்கிலி அருகே ஆடுகளை கொன்றது சிறுத்தையா? - வனத்துறை ஆய்வு; மக்களுக்கு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பிக்கிலி அருகே புதுக்கரம்பு கிராமத்தில் ஆடுகளை கடித்த மர்ம விலங்கு குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி அருகே உள்ளது புதுக்கரம்பு கிராமம். இங்கு கடந்த 4-ம் தேதி இரவு விவசாயி சின்னசாமி என்பவர் வளர்த்து வந்த 5 செம்மறியாடுகளை மர்ம விலங்கு கடித்ததால் ஆடுகள் உயிரிழந்தன. இந்நிலையில், ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தையாக இருக்கலாம் என தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, வனத்துறையினர் ஆடுகளை கடித்த விலங்கு குறித்து அறிய ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்த கால்நடை மருத்துவரால், ஆடுகளை கடித்துச் சென்ற விலங்கு எதுவென தீர்மானமாகக் கண்டறிய முடியவில்லை. மேலும், அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களைக் கொண்டும் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், அப்பகுதியில் வனத்துறையினர் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, பாலக்கோடு வனச் சரகத்துக்கு உட்பட்ட சாமனூர், ஜனப்பனூர், பி.செட்டிஅள்ளி, செங்கன் பசுவந்தலாவ், வட்டகானம்பட்டி, ரங்கம்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தொடர்ந்து வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது புதுக்கரம்பு, வாரக்கொல்லை உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து, பாலக்கோடு வனச்சரகர் நடராஜிடம் கேட்டபோது, ‘புதுக்கரம்பு பகுதியில் செந் நாய், நரி, சிறுத்தை இவைகளில் ஏதேனும் ஒரு விலங்கு ஆடுகளை கடித்துக் கொன்றிருக்கலாம். அப்பகுதியில் பதிந்துள்ள கால்தடங்கள் மூலம் எவ்வகை விலங்கு என உறுதியாக கண்டறிய முடியவில்லை. இருப்பினும், அப்பகுதியில் தொடர்ந்து வனத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எவ்வகை விலங்கு என தெரிய வந்தால் அதற்கேற்ப அந்த விலங்கை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, அப்பகுதி கிராம மக்களும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இரவில் வெளியில் தனியாக நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE