மேட்டூர் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைகளால் மக்கள் அச்சம்: செல்ஃபி எடுத்த மாணவர் காயம்

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி மாணவரை யானை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டி ஊராட்சி கோட்டியான் தெரு, சித்திகுள்ளானூர் கிராமத்தில் நேற்றிரவு 2 யானைகள் சுற்றி வந்தன. இன்று அதிகாலை விவசாய நிலத்தில் புகுந்து ராகி, சோளம் பயிர்களை சேதப்படுத்தியது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் வனத்துறையினர் யானை இருக்கும் பகுதி கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர்.

அப்போது, கோட்டியான் தெரு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் தீபக் (20) மற்றும் சக நண்பர்கள் யானையை பார்க்க சென்றனர். யானையுடன் செல்ஃபி எடுத்தபோது, தீபக்கை யானை தாக்கியதில் காயமடைந்தார். பின்னர், அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கிராமத்தில் முகாமிட்டுள்ள யானைகளை பார்க்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

யானைகள் ஆக்ரோஷமாக இருப்பதால் அப்பகுதியை சுற்றி குடியிருக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், யானையை வேடிக்கை பார்க்க பொதுமக்களும் யானை இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வருவாய்த் துறையினர் மூலமாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

சேலம் மாவட்ட வன அலுவலர் கஷாயப் ஷஷாங் ரவி உத்தரவின் பேரில், மேட்டூர் வனச்சரக்க வன அலுவலர் மாதவி யாதவ் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் யானைகளை தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட தருமபுரி மாவட்ட வனத்துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க 2 கிமீ தூரத்துக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது.

மேலும், 10-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் தயார் செய்தனர். யானைகள் விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி, கோட்டாச்சியர் (பொ) லோகநாயகி, வட்டாட்சியர் விஜி, டிஎஸ்பி மரியமுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.

இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், “தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து தொப்பையாறு வழியாக யானைகள் வழி தவறி இடம்பெயர்ந்து மேச்சேரிக்கு வந்திருக்கலாம். யானைகள் ஆக்ரோஷமாக இருப்பதால் உடனடியாக வனப்பகுதிக்கு விரட்டுவது சில சிக்கல்கள் உள்ளது.தொடர்ந்து, யானைகளை கண்காணித்து வருகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE