COP28 துபாய் மாநாடு... வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் உலகத் துயர் துடைக்க உதவுமா?

By Guest Author

COP28 எனும் பருவநிலை மாற்றம் குறித்த 28-வது உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த சிறப்புக் கட்டுரை இது...

உலகம் தோன்றி பல நூறுகோடி ஆண்டுகள் ஆயினும், இப்பூமிப்பந்து இடையிடையே பல இயற்கைச் சீற்றங்களுக்கு உட்படினும், அழிவுக்கு ஆளாகாமல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டுள்ளது. இவ்வுலகத்தினுடைய மேற்பரப்பு முழுமையும் தாவரங்களாலேயே போர்த்தப்பட்டிருந்த காலமுண்டு. அதன் பின் ஓருயிர், ஈருயிர் என பல்லுயிராகப் பெருகி மனித இனம் தோன்றியது.

உலகத்தினுடைய வெப்பநிலை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மாறாமலேயே இருந்திருக்கிறது. பல நூறுகோடி ஆண்டுகள் தாக்குப்பிடித்த இவ்வுலகம், கடந்த 100 முதல் 200 ஆண்டுகளில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மாற்றங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறது. பூமியில் அதிகரித்துவரும் வெப்பநிலையால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களைப் பற்றி உணராமல் இருக்கிறோம்.

துபாயில் COP-28 என்ற உலகத் தலைவர்கள் சங்கமிக்கும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குண்டான மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. 2050-ல் இப்போது இருக்கக்கூடிய வெப்பநிலை 1.5° Centigrade-க்கு மேல் உயராமல் தடுப்பதற்காக உலகத் தலைவர்களே ஒன்றுகூட வேண்டியிருக்கிறதென்றால் இதனுடைய முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்தே ஆக வேண்டும்.

கரியமில மற்றும் மீத்தேன் வாயுக்களை உமிழ்வதை முற்றாகத் தடுத்திடும் Net Zero என்ற இலக்குடன் அடுத்த 27 ஆண்டுகள் போராடினால் மட்டுமே 1.5° Centigrade வெப்பநிலை உயராமல் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகளும் இயற்கை ஆர்வலர்களும் கருதுகிறார்கள். 2° Centigrade-க்கும் மேல் வெப்பநிலை உயர்ந்துவிட்டால், அதற்குப் பிறகு அந்த வெப்பநிலையைக் குறைக்க முடியாது; அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க முடியாது; நம்மால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்குக் கூட அதனுடைய பாதிப்புகள் இருக்குமென்று தட்பவெப்ப அறிவியலாளர்கள் கணிக்கிறார்கள்.

கடந்த 100 ஆண்டுகளில் அதிகரித்த மக்கள்தொகை, மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரிக்கும் உணவு உற்பத்திகள், மாமிசம், பால் வகைகள் மற்றும் இராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் வாகன உற்பத்திகள், அவற்றை இயக்க பயன்படும் எரிபொருட்களான பெட்ரோல், டீசல், நிலக்கரி ஆகியவற்றால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு பருவநிலைகளை மாற்றியமைக்கிறது.

தீபாவளிக்கு 6000 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை, 500 கோடி ரூபாய்க்கு மது விற்பனை, பல இலட்சம் கோடிக்கு ஒட்டுமொத்த வியாபாரம் என்றெல்லாம் நாம் அகமகிழ்ந்து கொள்கிறோம். ஆனால், ஒருநாள் கொண்டாடப்பட்ட அப்பண்டிகையால் ஏற்பட்ட காற்று மாசு, வெப்பநிலை உயர்வு ஆகியவற்றால், உடனடிப் பாதிப்பாக கடந்த 2 வாரங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் முதல் முதியவர் வரை சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகி, மருந்துகளுக்காக அதைவிட பன்மடங்கு ரூபாய் செலவிட வேண்டியது பற்றி யாருமே சிந்திக்கவில்லை.

காலநிலை அடிக்கடி புயல் சின்னங்களை உருவாக்குவதும், கடற்கரையோரப் பகுதிகளான சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், ஓரிரு மணி நேரங்களில் 20 செண்டிமீட்டர் அளவு மழைப் பொழிவதும் வேகமாக அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்பட்ட மாற்றங்கள் தான் என்பதை உணராமல் இருக்கிறோம். கற்றறிந்தோரும் சில மணிநேர பட்டாசு வெடிப்பு உள்ளிட்டக் களிப்பை மட்டுமே மனதில் கொள்கிறார்களே தவிர, உடனடி மற்றும் நீண்டகாலப் பாதிப்புகளை கணக்கிலே கொள்ளத் தவறுகிறார்கள்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை மாற்றத்திற்காக முதல் சர்வதேச மாநாடு பாரிசில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் உலகின் பெரும்பான்மையான நாடுகளின் தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள். அதில், ’அமெரிக்காவும் வளர்ந்த மேலை நாடுகளும் அதிகமான கரியமில வாயுக்களை வெளியில் உமிழ்கிறார்கள்; குறிப்பாக படிம எரிபொருட்கள் (Fossil Fuel) என்று அழைக்கப்படக்கூடிய பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றை வாகன மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு மிதமிஞ்சிப் பயன்படுத்துவதால்தான் நாளுக்குநாள் புவி வெப்பம் அதிகரித்து வருகிறது.

உலக அளவிலான புவி வெப்பம் குறைக்கப்படவேண்டுமெனில், பொருளாதாரத்தில் வளர்ந்த மற்றும் வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய நாடுகள் தான் முதலில், அவரவர் நாடுகளில் அதற்கான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும்; பெரும்பாலான இலத்தீன் நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும், ஆசியாவின் பல நாடுகளிலும் இப்பொழுதுதான் முதல் தலைமுறைகளே வாகனங்களைக் கண்ணிலே காண்கிறார்கள். எனவே ஊருக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு, முதலில் அமெரிக்கா மற்றும் வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் புவிவெப்பத்தை குறைப்பதற்குண்டான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

இந்தப் புவி வெப்பத்தால் ஏற்கெனவே பல நாடுகள் பாதிப்புகளுக்கு ஆளாகிவிட்டன; பல நாடுகள் வளர முடியாமல் திண்டாடுகிறார்கள். மிதமிஞ்சிய வெப்பநிலை மாற்றத்தால் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் காடுகளும் எரிந்தன. பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்தியாவில் இமயமலைப் பகுதியில் மேக வெடிப்புகள் ஏற்பட்டு மிகப்பெரிய அளவு மழைப்பொழிவு ஏற்படுகிறது. அண்டார்டிகா பனிப்பாறை 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நகர ஆரம்பித்திருக்கிறது. மிதமிஞ்சிய வெப்பத்தால் பனிப்பறைகள் உருகி கடல் மட்டங்கள் உயரும்; அதில் பல தீவுகளும் பல நாடுகளும் காணாமலே போகும். எனவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து எந்த நாடுகளும் தப்பிக்க முடியாது.

மிதமிஞ்சிய வாகனங்களைப் பயன்படுத்துவதால், தட்பவெப்ப நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு, வறட்சி அல்லது கடும் மழை அல்லது பெரும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால், பருவக்காலங்களில் விதைக்கமுடிவதில்லை; பயிர் முளைத்த பிறகு போதிய மழைப்பொழிவு கிடைப்பதில்லை; விளைந்த பயிர்கள் அறுவடைக்கு வரும்போது அதிக மழைப் பெய்து பெரும் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகளும், ஏழை, எளிய மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடுகிறது; மேலும் காய்கறிகள், பழங்கள் எல்லாம் அழுகி மிகப்பெரிய அளவிற்கு உணவுப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. மாட்டுப்பண்ணைகள், கோழிப்பண்ணைகளிலிருந்து வெளியாகும் மீத்தேன்களால் ஏற்படும் பாதிப்புகள் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது.

கோடானகோடி கால்நடைகள் விடும் ஏப்பங்களில் வெளியாகும் மீத்தேன்களுடைய பாதிப்புகள் இலட்சக்கணக்கான வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் ஏற்படும் பாதிப்புகளைவிட அதிகமாக இருக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகத்தின் ஏதோ ஒரு பகுதியில் அதிகரிக்கக்கூடிய வெப்பநிலை, வேறு எங்கோ இருக்கக்கூடிய இன்னொரு நாட்டின் பருவநிலையைப் பாதிக்கிறது.

இந்தப் பூமிப்பந்தில் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு நாம் வாங்கிக் கொடுக்கும் நிலங்களும், வீடுகளும், கல்விக் கூடங்களும், தொழிற்சாலைகளும் பயனளிப்பதை விட, இந்தப் பூமிப்பந்தை வெப்பம் மிகுதியாகாமல் பாதுகாத்துக் கொடுத்தலே நம்முடைய வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்கிற மிகப்பெரிய சொத்து ஆகும். இப்பொழுதெல்லாம் திருமணம், காதணி, பூப்பு விழாக்களே பல கோடிகள் செலவழித்து நடத்தப்படுகின்றன. அதில் பரிமாறப்படும் உணவுகளாலும் அவை வீணடிக்கப்படுவதாலும் இப்பூப்பந்தின் உஷ்ணம் அதிகரிக்கிறது என்பதைக் கற்றறிந்தோரும் உணர்வதில்லை.

உயரத்திற்கும் வயதிற்கும் ஏற்றபடி எடை இருக்க வேண்டுமென்பதே நியதி. ஆனால் குழந்தைப்பருவத்திலிருந்தே மிதமிஞ்சிய சாக்லேட்டுகள், பால்பொருட்கள், இனிப்பு வகைகள், நொறுக்குத் தீணிகள், பீஸா-பர்கர், KFC, Subway சிக்கன்கள், அண்மைக்காலமாக வீதிக்கு வீதி புற்றீசல் போல விடியவிடிய விற்பனை செய்யப்படும் பிரியாணி மற்றும் பரோட்டாக் கடைகள் ஆகியவற்றால் இருபாலரும் தங்களுடைய உயரத்திற்கும் வயதிற்கும் ஏற்ற எடையை மீறிப் பருமனாகிறார்கள். இதுவும் பூமியின் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை.

டாக்டர் கிருஷ்ணசாமி

அளவுக்கு அதிகமான கலோரிகளை உட்கொள்ளும்பொழுது, அது உடம்பில் செரிக்கப்பட்டவுடன் உடம்பில் சேமிக்கப்பட்டது போக மீதி எங்கே போகும்? சுற்றுபுறச் சூழலின் வெப்பமாகத்தானே அது வெளியே வரும். ஒரு காலத்தில் ஒரு சாண் வயிற்றை நிரப்புவதற்காக பல மையில் தூரம் நடந்து சென்று பணி புரிந்தார்கள். ஆனால் தற்போது சிக்கன், மட்டன், முட்டை, ஐஸ்கிரீம் எனப் பலதரப்பட்ட சரக்குகளை உள்ளே தள்ளிவிட்டு, அது ஜீரணமாவதற்கு நடைபயிற்சிகளைக் கூடத் தவிர்த்து விடுவதால், அவர்களுடைய மூச்சுக் காற்று உட்பட பல வழிகளில் உஷ்ணத்தை அதிகமாக வெளிப்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, மது இன்னும் கூடுதலாக வெப்பத்தை வெளிப்படுத்துகிறது.

ஒட்டுமொத்தத்தில் வளர்ந்த நாடுகள் குளிர்சாதனங்கள் மற்றும் வாகனங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதாலும், இந்தியாவைப் போன்ற அதிகளவில் மக்களைக் கொண்டிருக்கக்கூடிய வளரும் நாடுகளும் மேலை நாடுகளுக்கு இணையாகப் போட்டிபோட்டு வளர எண்ணி, வாழ்க்கைப் பயணங்களை மேற்கொள்வதாலும் நாமும் ஏதாவது ஒரு வழியில் வெப்பநிலை உயர்வதற்கான காரணிகள் ஆகின்றோம். எனவே அமெரிக்கா மற்றும் வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் மீது மட்டும் பழியைத் தூக்கிப்போட்டுவிட்டுத் தப்பிக்க முடியாது.

2050-ல் நம்முடைய குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் நல்லதொரு சுகாதாரமான முறையில் இந்த மண்ணில் வாழவேண்டுமென்றால், 2050-ல் பூமியின் வெப்பம் 1.5° Centigrade-க்கு மேல் அதிகரிக்காமல் இருப்பதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, வீடுகளில் தேவையில்லாமலும், தேவைக்கு அதிகமாகவும் மின்சாரம் மற்றும் குளிர்சாதனங்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். தேவைக்கு அதிகமாக ஒரு பிடி உணவைக்கூட உண்ணுவதில்லை என்று முடிவுக்கு வர வேண்டும். நாம் நடத்துகின்ற நம்முடைய குடும்ப விழாக்களில் கண்ணெதிரே எவ்வளவு உணவுப் பொருட்கள் வீணாகின்றன என்பதைப் பார்த்திருப்போம். நாம் பெருமைக்காக அல்லது கவுரவத்திற்காக செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும், அது அடுத்த தலைமுறையைப் பாதிக்கிறது என்ற உணர்வோடு, எந்தவொரு உணவுப் பொருளும் வீணாகாத வகையில் நாம் பரிமாறும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து மின்னணு வாகனங்களுக்கு (E-Vehicle) மாற வேண்டும். மாமிச உணவுகளும் பால் பொருட்களும் மீத்தேன் வாயுவை உமிழ்வதில் பெரும்பங்காற்றுவதால், அவற்றை எந்தவகையில் குறைக்க முடியுமோ அதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்; வாகனப் பயணங்களை முடிந்தளவிற்குத் தவிர்க்கலாம். மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்கின்ற பொழுது பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதால் காடுகள் தீப்பற்றி மலைகளும் காடுகளும் அழிந்து புவி வெப்பத்தையும் கூட்டுகின்றன. எனவே அவையெல்லாம் நம்மை அழிக்கக்கூடிய செயல் என்ற உணர்வோடு அதுபோன்று செயல்படக்கூடியவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். இத்துடன் வீட்டுகொரு மரம் வளர்ப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

உலகத்தலைவர்கள் ஒன்றுகூடும் மாநாடுகள் பல நேரங்களில் ஒரு நல்ல முடிவுக்கு வராமலேயே போய்விடுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக, வசதியான நாடுகள் தங்களுடைய மிதமிஞ்சிய வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதற்கு முன்வருவதில்லை. வசதிபடைத்த நாடுகளுடைய மனநிலை, மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத நிலையாகவே இருக்கும். 2050-ல் 160 கோடிக்கு மேல் மக்கள்தொகை இருக்கக்கூடிய இந்திய மக்கள் அவ்வாறு கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. நாம் எதை விட்டுச் செல்கிறோமோ இல்லையோ இன்றிருக்கக்கூடிய சீதோஷண நிலையை மட்டும் கெடுக்காமல் சென்றாலே, அதுவே நம்முடைய அடுத்த தலைமுறைகளுக்கு கோடிகோடி புண்ணியமாக இருக்கும்.

எனவே புவி வெப்பத்தைக் குறைப்பதற்கு அவர் செய்யட்டும், இவர் செய்யட்டும், ஆட்சியாளர்கள் செய்யட்டும், அரசு நிர்வாகம் செய்யட்டும் என்றில்லாமல், ஒவ்வொரு குடிமகனும் நாமே நம்முடைய வீட்டிலிருந்து இந்தக் கடமையைச் செய்யத் தொடங்குவோம். பள்ளிக்குழந்தைகள், படித்த இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் புவி வெப்பத்தைக் குறைப்பதில் நம்முடையக் கடமையை உணர்ந்து, பூமியைப் பாதுகாப்பதில் நம்முடைய பங்கை சிறப்பாகச் செய்திடுவோம் என சூளுரைப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுச்சூழல்

23 hours ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

மேலும்