திருப்பத்தூர் அரசு அலுவலகங்களில் அனுமதியில்லாமல் வெட்டப்படும் மரங்கள்!

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள பழமை வாய்ந்த மரங்கள் உரிய அனுமதியில்லாமல் வெட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மரங்களை வெட்டும் முன்பு மாவட்ட பசுமைக்குழுவிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை அரசு அலுவலர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏலகிரி மலை, ஜவ்வாதுமலை தொடர்களில் மரக்கன்றுகளை நடும் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது. மாவட்ட வனத்துறை சார்பிலும், காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மட்டுமின்றி விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கும் பணிகளையும் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படி, மரக்கன்றுகளை நட்டு திருப்பத்தூர் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வரும் அதேநேரத்தில், அரசு அலுவலகங்கள், அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாக கம்பீரமாக நின்ற பழமையான மரங்களை வெட்டும் சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பசுமையான மாவட்டமாக மாற்றும் முயற்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வாணியம்பாடி நகரின் பிரதான பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பழமையான 2 மரங்கள் அனுமதியில்லாமல் வெட்டப் பட்டுள்ளன. இதைக் கண்ட பொதுமக்கள் நிழல் தரும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் வெட்டப்பட்ட மரங்கள் அங்கேயே போடப்பட்டன. அரசு அலுவலக வளாகத்தில் யாருடைய அனுமதியும் இல்லாமல் மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வடிவேல் சுப்பிரமணியன் என்பவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் மரங்களை வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட பசுமைக்குழுவிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். பசுமைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்த பிறகே மரங்களை வெட்ட அனுமதி அளிப்பார்கள். அப்படி ஒரு விதி நடைமுறையில் இருக்கும்போது, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே 2 மரங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முழுமையாக வெட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது, மழை காரணமாக ஒரு மரம் முறிந்து விழுந்ததாகவும், அந்த மரத்தை மட்டும்தான் வெட்டச்சொன்னோம் எனக்கூறினார்கள். ஆனால், அங்கு 2 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மேலும், மரங்களை வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட பசுமைக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விழிப்புணர்வே அரசு அலுவலர்களிடம் இல்லை.

அரசு அலுவலர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: மாவட்ட நிர்வாகம் இதனை சரிசெய்ய வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வாணியம்பாடி அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. தலைமை ஆசிரியர் கூறியதின் பேரில் மரங்களை வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளி இடங்களில் உள்ள மரங்களை காட்டிலும் அரசு அலுவலகங்களில் உள்ள மரங்களை வெட்டுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட பசுமைக்குழுவை பற்றி முதலில் அரசு அலுவலர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். மேலும், மரங்களை வெட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் திருப்பத்தூர் மாவட்டத்தில் மரங்களை வெட்டும் செயல் தடுக்கப்படும்’’ என்றார்.

இது தொடர்பாக வாணியம்பாடி வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, ‘‘சார் பதிவாளர் அலுவலகத்தில் மரங்கள் வெட்டியது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் ஆய்வு நடத்தி அதன் அறிக்கை வருவாய் கோட்டாட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு என்ன என்பது குறித்து பிறகு தெரியவரும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

23 days ago

மேலும்