குப்பை கிடங்காக மாறி வரும் கோவை - கொடிசியா சுற்றுப்புற பகுதி!

By இல.ராஜகோபால்

கோவை: கோவை அவிநாசி சாலையில் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகளில் திறந்த வெளியில் பல வித கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவிநாசி சாலையில் இருந்து சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் மறுபுறம் அவிநாசி சாலை, திருச்சி சாலை சென்றடையவும் உதவி வருகிறது கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் அருகே அமைக்கப்பட்டுள்ள சாலை. கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை இச்சாலையில் அமைந்துள்ளன. கொடிசியா அருகே தண்ணீர்பந்தல் செல்ல உதவும் மாற்றுச் சாலையும் அமைந்துள்ளது.

அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் கொடிசியா சாலையோரம் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. அவிநாசி சாலை சந்திப்பு பகுதியில் தொடங்கி சாலையோரம் பல தள்ளுவண்டி உணவகங்கள் செயல்படுகின்றன. கொடிசியா சுற்றுப்புற பகுதிகளில் திறந்தவெளி பகுதி அதிகளவு உள்ளதால் பல விதமான கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருப்பதி வெங்கடாசலபதி நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பக்தவத்சலம் கூறியதாவது: கொடிசியா அருகே அமைந்துள்ள அரசு நிலத்தில் ஹவுசிங் போர்டு சார்பில் 36 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 521 சைட் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலுக்கு முன் சாலை, சாக்கடை கால்வாய், சிறிய பாலம், நான்கு பெரிய தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப் பட்டன. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தால் 2017 முதல் மேம்பாட்டு பணிகள் நிறுத்தப்பட்டன.

கடந்த 2023 செப்டம்பர் 7-ம் தேதி நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில், சாலையோரம் உள்ள திறந்த வெளி பகுதிகளில் இறைச்சிக் கழிவுகள், இளநீர் கழிவுகள், கரும்பு சக்கை, துணிகள், சுடுகாட்டில் போடப்படும் மெத்தை, படுக்கை விரிப்புகள், கட்டிடக் கழிவுகள், வார்ப்பட தொழிற்சாலை கழவுகள் என பல விதமான கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. கொடிசியா வளாகம் அருகே மேற்கு புறத்திலும் இதே போன்று பல விதமான கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளன.

பெரும்பாலும் இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் தான் இது போன்ற அத்துமீறல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் சுற்றுப் புற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைக் கிடங்காக மாறிவரும் இப்பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE