சாமந்திப்பூ சாகுபடிக்கு கைகொடுக்கும் மின்னொளி பந்தல்: ராயக்கோட்டை விவசாயிகளின் புதிய முயற்சி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: குளிர் காலத்தில் மகசூல் பாதிப்பைத் தடுக்க ராயக்கோட்டை பகுதி வயல்களில் எல்இடி மின் விளக்கு பந்தல் அமைத்து சாமந்திப்பூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் மலர் மற்றும் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி: குறிப்பாக, சாமந்திப்பூ, ரோஜா உள்ளிட்ட பல வகையான மலர்களைச் சாகுபடி செய்து, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மாறி வரும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், விவசாயிகள் மலர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அதிக மகசூல் மூலம் வருவாய் தேடி வருகின்றனர். அதன்படி, ராயக்கோட்டை, சூளகிரி பகுதி மலர் விவசாயிகள் தற்போது, வயலில் எல்இடி பல்புகள் கொண்ட பந்தல் அமைத்து சாமந்திப்பூ சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மானியத்துக்குக் கோரிக்கை: இம்முறையில் உற்பத்தியாகும் பூக்கள் தரமாக இருப்பதால், சந்தையில் நல்ல விலை கிடைப்பதாகக் கூறும் விவசாயிகள், இதற்கு அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி இளங்கோ கூறியதாவது: குளிர் காலத்தில் மலர் செடிகளில் நோய்கள் தாக்கம் அதிகமாகி தரமற்ற மலர்கள் உற்பத்தியாகி மகசூல் குறையும். குளிர் காலத்தில் மலர் வயல்களில் எல்இடி மின்விளக்கு கொண்ட பந்தல் அமைத்து இரவில் ஒளிர விடுவதன் மூலம் மின் விளக்கு வெப்பத்தில் பூக்களின் தண்டு திடமாகவும், மொட்டுகள் கருகாமலும் பெரிய அளவில் பூக்கள் மலருகின்றன.

கிலோ ரூ.400-க்கு விற்பனை: இம்முறையை தேன்கனிக் கோட்டை, தளி பகுதியைத் தொடர்ந்து ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் அதிக விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். இம்முறையில் சாகுபடி செய்யப்படும் சாமந்திப்பூவுக்குச் சந்தையில் கிலோ ரூ.400 வரை விலை கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு 150 எல்இடி பல்புகள் தேவைப் படுகின்றன.

மின் கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. எனவே, அரசு சார்பில் முழு மானியத்தில் எல்இடி பல்புகளும், மின் கட்டண சலுகையும் வழங்கி இதை ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், மின் கட்டணத்தில் சலுகை கோரி, மின்வாரிய அலுவலகத்தில் மனுக்கள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அரசுக்கு முன்மொழிவு: இது தொடர்பாக தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் கூறும்போது, “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் எல்இடி பல்புகள் பந்தல் அமைத்து மின்னொளியில் விவசாயிகள் மலர்கள் சாகுபடி செய்கின்றனர். இம்முறையில் தரமான பூக்கள் கிடைக்கிறது. விவசாயிகள் கோரிக்கை குறித்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE