கோவை: பாம்பு என்றாலே உள்ளூற பயம்எழுவது இயற்கைதான். உலகளவில் சுமார் 2,968 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. இந்திய அளவில் ராஜநாகம் மட்டுமே அதீத விஷத்தன்மை கொண்டது. தமிழகத்தில் சாரைப்பாம்பு, நீர்சாரை, வெள்ளிக்கோல் வரையன், பச்சைப்பாம்பு, கொம்பேறிமூக்கன், மண்ணுளி பாம்பு, பவளப்பாம்பு, அழகுபாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான் குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு உள்ளிட்ட சிலவகைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதில், நல்லபாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் வகை பாம்புகள் மட்டும் விஷமுள்ளவை.
காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும், உணவுச்சங்கிலி உடைபட்டதாலும் பாம்பு இனங்கள் அழிவை நோக்கி வேகமாக பயணித்து வருகின்றன. உணவுதேடி வனத்தையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகும் பாம்புகள் பெரும்பாலும் கொல்லப்படுகின்றன. வனஉயிரின பாதுகாப்புச்சட்டம் 1972-ன்படி பாம்புகளை அடித்துக் கொன்றால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்ற சட்டம் இருந்தும் பாம்புகள் கொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. பாம்புகளை அழிவில் இருந்து மீட்கவும், அவற்றை காப்பதன் அவசியம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு கால்நடை மருத்துவர் கே.அசோகன்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‘யானை’ டாக்டர்என அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தியின் சிஷ்யன்நான். கடந்த 1996-ம் ஆண்டுமுதல் 2000-வது ஆண்டு வரை முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனக்கால்நடை மருத்துவ அலுவலராகவும், 2011-ம் ஆண்டுமுதல் 2014-ம் ஆண்டு வரை கோவை வஉசி உயிரியல் பூங்காவின் இயக்குநராகவும் நான் பணியாற்றியுள்ளேன். என் பணிக்காலத்தில் சுட்டித்தனமான யானைகளான சின்னதம்பி, விநாயகன், உதகை சங்கர், மக்னா மூர்த்தி ஆகியவற்றை வனக்குழுவுடன் இணைந்து, நான் பாதுகாப்பாக பிடித்தேன். 300 யானைகளுக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டுள்ளேன். சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, என்னால் சிகிச்சையளிக்கப்பட்டு ‘அம்மு’ என பெயரிடப்பட்ட யானைதான், தற்போது ஆஸ்கர் விருதை வென்ற ‘பொம்மி’.
விழிப்புணர்வு தேவை: விவசாயப் பயிர்களை அழிக்கும் எலிகள், பூச்சிகள், பறவைகளை பாம்புகள் உண்டு உயிர்வாழ்வதால், அவற்றை விவசாயிகளின் நண்பன் என்பார்கள். போதிய விழிப்புணர்வு இல்லாததால், விவசாய நிலங்களுக்குள் புகும் பாம்புகளை விவசாயிகளே அடித்துக் கொன்றுவிடுகின்றனர். சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு, காடுகள் அழிப்பு, உணவுச்சங்கிலி பறிபோனது போன்ற பலகாரணங்களால் 14 வகையான பாம்பு இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது தொடர்பாகவும், அவற்றை கொல்வதால் ஏற்படும் அபாயம் குறித்தும்விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
» “செய்யாறு விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை... ஜனநாயகத்துக்கு முரணானது” - தினகரன்
» திருப்பத்தூரில் இருந்து நாட்றாம்பள்ளி பகுதிக்கு அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குக!
வனத்துறையில் பணியாற்றியபோது மலைப்பாம்பு, கண்ணாடிவிரியன் என 100-க்கும் மேற்பட்ட பாம்புகளையும், ஆந்தைகள், முயல்கள், மயில்கள் போன்ற வனஉயிர்களையும் காயத்தில் இருந்தும், நோயில் இருந்தும் மீட்டுள்ளேன். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கராச்சிக்கொரை வனக்கால்நடை மருத்துவமனையில் 14 மலைப்பாம்புகளின் இயல்பை கண்டறிய அறுவை சிகிச்சையின் மூலம் டிரான்ஸ்மீட்டர் பொருத்தினேன். இது இந்தியாவிலேயே முதல்முறையாகும்.
நாகப்பாம்புக்கு புற்றுநோய்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவை மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நாகப்பாம்பின் வயிற்றுப்பகுதியில் சற்று உப்பலாக சில கட்டிகள் இருந்ததைக்கண்ட பூங்கா ஊழியர்கள், எனக்கு தகவல் தெரிவித்தனர். பாம்பை பரிசோதித்தபோது, அவை புற்றுநோய் கட்டிகள் என தெரியவந்தது. உடனடியாக பாம்புக்கு நான் அறுவை சிகிச்சை செய்து, புற்றுநோயில் இருந்து மீட்டேன். இந்தியாவிலேயே விஷப்பாம்புக்கு செய்யப்பட்ட முதல் புற்றுநோய் அறுவை சிகிச்சை இதுதான். இதேபோல கோவை உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்ட சாரைப்பாம்புக்கு ‘ப்ரோட்டஸ்’ இனக் கிருமிகள் பாதிப்பால் 3 கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்.
உக்கடம் வாலாங்குளத்தில் மீன் பிடிக்கும் தூண்டில் கொக்கி தொண்டையில் சிக்கிய நிலையில் தண்ணீர் பாம்பு உயிருக்கு போராடியது. அதை பாம்புகள் பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் மீட்டு, என்னிடம் கொண்டு வந்தனர். பாம்புக்கு தொண்டைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து பாதுகாப்பாக கொக்கியை அகற்றி, கரைந்து போகக்கூடிய நரம்பு கொண்டு தையல்போடப்பட்டது. அதன்பின் தீவிர கண்காணிப்பில், பாம்பு நலம்பெற்றது. இதுபோல, கட்டிட இடிபாடுகளிலும், விபத்திலும், உணவு கிடைக்காததாலும் உயிருக்கு போராடிய பல பாம்புகளை மீட்டுள்ளேன். அறுவை சிகிச்சைக்குப்பின் பாம்புகளை வெதுவெதுப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எறும்புகள்கூட பாம்புகளுக்கு எமனாகிவிடும்.
அடைகாக்கும் ஆண் பாம்புகள்: பொதுவாக தங்கள் இனங்களிலேயே தங்களுக்கான இணையை பாம்புகள் தேடிக்கொள்ளும். முட்டையிடும் உயிரினங்களில் பெண் இனங்களே அடைகாக்கும். ஆனால் பாம்பு இனங்களில் பெரும்பாலும் ஆண் பாம்புகள்தான் முட்டையை அடைகாக்கும். கட்டுவிரியன், பச்சைப்பாம்பு, மண்ணுளி பாம்பு ஆகியவை கருமுட்டையை வயிற்றில் சுமந்து, குட்டி போடுகின்றன. பெரும்பாலும் முட்டைகளுக்கு பாம்புகள் அதிக பாதுகாப்பு தருவதில்லை. இதனால் விவசாய நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும்கிடைக்கும் பாம்பு முட்டைகளை, பொதுமக்களும், விவசாயிகளும், வன ஆர்வலர்களும் என்னிடம் கொடுத்தனர்.அவற்றை செயற்கை முறையில் குஞ்சு பொரிக்கச்செய்துகாடுகளில் விட்டுள்ளேன். இவ்வாறு, நாகப்பாம்பு 50, சாரைமற்றும் தண்ணீர் பாம்பு 70, கண்ணாடிவிரியன் 42, பச்சைப்பாம்பு 62, மண்ணுளிப்பாம்பு 60 குட்டிகளை சத்தியமங்கலம், முதுமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் விடுவித்துள்ளேன், என்றார்.
பாம்புகளை கொல்லாதீர்: பாம்புகளுக்கு நாக்கும் கிடையாது, காதும் கிடையாது. உதடு, கண் இமை, முடி, வியர்வை சுரப்பியும் பாம்புக்கு இல்லை. நாக்குபோல நுனிபிளந்து காணப்படுவது உண்மையில் நாக்கல்ல. அது இரையையும், வாசனையையும் கண்டறியும் உணர்கொம்புகளாகும். குளம், குட்டைகள் மாயமானதாலும், உணவுச்சங்கிலி உடைபட்டதாலும்தான் பாம்புகள் நகரப்பகுதிக்குள் வருகின்றன. பாம்புகளை கண்டதும் தடியையும், தாக்கும் ஆயுதத்தையும் தேடுவதை மக்கள் நிறுத்த வேண்டும். பாம்புகளை பாதுகாப்பாக மீட்க வனத்துறையிலும், தீயணைப்புத் துறையிலும் பலர் உள்ளனர். எனவே அவர்களுக்கு தகவல் அளித்தால் பாம்புகளை மீட்டு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்துவிடுவர்.
உறுதிமொழி ஏற்போம்: பாம்புகள் தீண்டினால் பயம் கொள்ளாமல் சாதாரண மனநிலையுடன் இருக்கவேண்டும். பதற்றம் கொண்டால் உயிரிழப்பு ஏற்படும். சினிமாவில் காட்டுவதைப்போல,பாம்பு தீண்டிய இடத்தை அறுத்தோ, ரத்தம் உறிஞ்சியோ காப்பாற்ற முடியாது. உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற் கொள்ள வேண்டும். பாம்புகளை பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவற்றுக்கு தொந்தரவுகொடுக்கமாட்டோம், குடியிருப்புப் பகுதிகளில் தென்படும், பிடிபடும் பாம்புகளை கொல்லாமல், வனத்துறை உதவியுடன் வனப்பகுதிகளில் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டால், பாம்புகளின் உயிர்ச்சங்கிலி உடைபடாமல் உறுதியாகும்.
இணை சேராமல் கருவுறும் பாம்பு: ரீனல் பாம்பு வகைகள் தரையில் இலைகளைக் கொண்டு கூடுகட்டி அதில் முட்டையிடுகின்றன. குருட்டுப்பாம்பு அல்லது புழுப்பாம்பு வகை பாம்புகள் ஆணில்லாமலேயே கருவடையும் தன்மை கொண்டவை. இதில் பெண் இனம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்காணும் இரண்டு வகைகளுமே அழிந்துவிட்டன. உயிருள்ள பறவைகள், எலிகள், பூச்சிகளை மட்டுமே பாம்புகள் பிடித்து உண்ணும். விவசாய நிலங்களிலும், வீடுகளிலும் எலிகளையும், பூச்சிகளையும் மருந்து வைத்து கொன்றுவிடுகிறோம். இதனால் பாம்புகளின் உணவுச்சங்கிலி உடைபட்டு, பாம்பு இனங்கள் அழிவை நோக்கி வேகமாக பயணித்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
20 days ago