வாணியம்பாடி: வாணியம்பாடியில் கடந்த 120 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பாலாற்று நீர்வள ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பாலாற்றில் கடந்த 1874, 1884, 1898-ம் ஆண்டில் பெய்த கனமழையால் பாலாறு பகுதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டாலும், துயரமான சம்பவம் கடந்த 1903-ம் ஆண்டு நிகழ்ந்தது. 1903-ம் ஆண்டு பாலாறு நீர்பிடிப்பு பகுதியான சிக்பெல்லாபூர் மற்றும் கோலார் மாவட்டங்களில் கனமழையானது விடாமல் கொட்டி தீர்த்தது. 1903-ம் ஆண்டு நவ. 12-ம் தேதி அதிகாலை பெய்த கனமழையால் பேத்தமங்கலம் ஏரியின் பலமிக்க கரைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்தன.
அதிலிருந்து வெளியேறிய வெள்ளம் தமிழக எல்லையான வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமம் அருகே வாணியம்பாடி நகரத்தைச் சுற்றிவளைத்தது. அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் உறங்கியவர்கள் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டனர். ஒரேநாள் இரவில் வீடுகளையும், உறவுகளையும், வாழ்வாதாரத்தையும் வாணியம்பாடி மக்கள் இழந்தனர். வாணியம்பாடி பெரு வெள்ளத்தில் 200 பேர் உயிரிழந்ததாக 1903-ம் ஆண்டு நவ. 24-ம் தேதி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த நாளிதழ்கள் முதல் பக்கத்தில் இந்த துயர செய்தியை வெளியிட்டன.
இந்த துயர செய்தியில், ‘இந்திய வைஸ்ராய் கர்சன் பிரபுவிடம் இருந்து அவசர தந்தி ஒன்று லண்டனுக்கு சென்றுள்ளது. மெட்ராஸில் இருந்து கிடைத்த தகவல்படி, சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட பாலாற்றில் நவம்பர் 12-ம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் வாணியம்பாடியின் பாதி நகரம் அழிந்தது. இதில், 200 பேர் உயிரிழந்தனர்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை இன்றும் வாணியம்பாடி நகரில் பார்க்க முடிகிறது. மழை வெள்ளத்தால் உயிரிழந்த மக்களின் நினைவாக வாணியம்பாடி சந்தைமேடு பகுதியில் ஆங்கிலேயர்கள் வைத்துள்ள நினைவு தூணுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவ. 12-ம் தேதி வாணியம்பாடி மக்கள் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, பெருவெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதில், பாலாற்று நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், வேர்கள் அறக்கட்டளையின் தலைவர் வடிவேல், சமூக ஆர்வலர் கிரிசமுத்திரம் ஹரிகிருஷ்ணன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பசுமை அறக்கட்டளையின் தலைவர் சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து பாலாற்று நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘கடந்த 1903-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் வாணியம்பாடியைச் சேர்ந்த 200 பேர் உயிரிழந்தனர். அதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் நவ.12-ம் தேதி நினைவு தூணுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறோம். இந்த நினைவு தூணை வேறு இடத்துக்கு மாற்றவும் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இந்த ஆண்டு நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். அவரிடம், ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். அவை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் வலியுறுத்தியுள்ளோம். அதாவது, மற்றொரு பெரு வெள்ளம் வந்தால் வாணியம்பாடி மக்கள் பாதிக்காமல் இருக்க பாலாற்றில் ஒரு சில இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் கனமழை பெய்தால் வாணியம்பாடி ஒட்டியுள்ள பாலாற்றில் தான் பெருவெள்ளம் வரும். எனவே, கொடையாஞ்சி பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். அம்பலூர் மற்றும் ஆவாரங்குப்பம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு, திருச்சி கல்லணையை போல உயர்மட்ட மேம்பாலம் கீழே தண்ணீரை செல்லும் வகையில் தடுப்பணையை கட்டித்தர வேண்டும். அதற்கான முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ள வேண்டும். பாலாற்றை பாதுகாக்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறவும், பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பாலாறு பகுதியில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
4 hours ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
22 days ago