20 சதவீதம் கூடுதல் வருவாய் | கொப்பரை உற்பத்தியில் ஆர்வம் காட்டும் தென்னை விவசாயிகள்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேங்காயைவிட கொப்பரையாக மாற்றி விற்பனை செய்வதில் 20 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைப்பதால், கொப்பரை தயாரிப்பில் தென்னை விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளான காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், அரசம்பட்டி, பாரூர், மருதேரி, போச்சம்பள்ளி, பர்கூர், வரட்டணப்பள்ளி, கிருஷ்ணகிரி பகுதிகளில் சுமார் 20 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.இங்கு விளையும் தேங்காய்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

தேங்காய் விளைச்சல் அதிகரிக்கும்போது, விலை குறையும். அப்போது, தேங்காயை உடைத்து, காய வைத்து, கொப்பரையாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் இழப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடிவதால், விவசாயிகள் பலரும் கொப்பரை தயாரிப்பில் ஆர்வம்காட்டி வருகின்றனர். கொட்டங்குச்சியிலும் வருவாய் இதுகுறித்து தென்னை ஆராய்ச்சியாளர் கென்னடி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:

தேங்காய் விலை தற்போது ஏறுமுகமாக உள்ளது. இருப்பினும் விவசாயிகள் பலர் தேங்காயை கொப்பரையாக்கி விற்பனை செய்வதில் ஆர்வமாக உள்ளனர். 100 தேங்காயில் 14 கிலோ கொப்பரை கிடைக்கும். இதன் விலை ரூ.14 ஆயிரம். இதேபோல, கொப்பரை எடுக்கப்பட்ட கொட்டாங்குச்சி ஒரு டன் ரூ.12 ஆயிரத்துக்கு விலை போகிறது. தற்போது ஒரு தேங்காய் ரூ.12-க்கு விற்கப்படுகிறது. இதையே கொப்பரையாக மாற்றி விற்பனை செய்தால் 20 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

எனவே, விவசாயிகள் பலர் தேங்காய் விற்பனையில் ஆர்வம்காட்டாமல், அதை உடைத்து, காய வைத்து, மதிப்பு கூட்டப்பட்ட கொப்பரையாக மாற்றி விற்கின்றனர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கொப்பரைகளை கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டுசென்று, இ-நாம் முறையில் விற்பனை செய்கின்றனர். சிலர் நேரடியாக விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதல் செய்து, அரவை ஆலைகளுக்கு தேங்காய் எண்ணெய் தயாரிக்க அனுப்பி வைக்கின்றனர்.

அரவை ஆலைகளில் கொப்பரை வரத்து அதிகரிப்பால், தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மேலும், வேளாண்மை துறை நிர்வாகத்தின் கீழ் இருந்த தென்னை விவசாயம் தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், தென்னை விவசாயம் தனி கவனம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE