சுற்றுச்சூழல் பூங்காவாகுமா பெரும்பாக்கம் ஏரி? - குப்பை கொட்டும் இடமாக மாறும் சுற்றுப்பகுதி

By கி.கணேஷ்

சென்னை: சென்னை புறநகரில் உள்ள பெரும்பாக்கம் ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணிகள் பாதியில் நிற்கும் நிலையில், ஆக்கிரமிப்பாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி பொலிவிழந்து வருகிறது. வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்கு நடுவில் இன்றும் பரந்து விரிந்து காணப்படுகிறது பெரும்பாக்கம் ஏரி.

இந்த ஏரியின் பரப்பு 1960-ம் ஆண்டு 450 ஏக்கராக இருந்துள்ளது. ஆனால், வேங்கைவாசல், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் என 3 பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதால், 2015-ல் ஏரியின் மொத்த பரப்பு 258 ஏக்கராக சுருங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை பழைய பரப்பளவுக்கு கொண்டு வருவதற்கு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அதற்கான பணிகள் இன்றளவும் மந்தமாகவே உள்ளது. இதுதவிர ஏரியின் கரைப்பகுதியை சுற்றிலும் வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம் என அனைத்து பகுதிகளிலும் தனியார் ஏராளமான ஆழ்துளை கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி 16 ஆயிரம், 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள லாரிகளில் அனுப்பி வருகின்றனர்.

கழிவுநீர் கலப்பு: இவை மட்டுமின்றி, மாம்பாக்கம் சாலையில், ஏரியின் ஒரு பகுதியில் முழுமையாக வேலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வேலியின் அருகில் சாலையில் மரக்கன்றுகள் நட்டும் பராமரித்தும் வருகின்றனர். ஆனால், இங்கும் ஒரு பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் ஏரியை ஒட்டி சாலையோரம் காய்கறி, பழம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனையும் நடைபெறுகிறது.

இந்த கழிவுகள் அனைத்தும் ஏரியிலேயே கொட்டப்பட்டுகின்றன. இதுதவிர, ஏரியின் மேற்கு பகுதியில் மாம்பாக்கம் பிரதான சாலையில் ஒருபுறம் வேங்கை வாசல் ஊராட்சி சார்பில் குப்பை கொட்டும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் சேர்கிறது. அதேபோல், சமீபகாலமாக பெரும்பாக்கம் ஊராட்சியும் தன் பங்குக்கு, ஏரியின் மறு கரையில், கலங்கல் அமைந்துள்ள இடத்தின் அருகில் குப்பை கொட்டி வருகிறது. இதன் மூலம் ஏரி நீர் மாசடைந்து வருகிறது. இதற்கிடையில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தல்படி, பெரும்பாக்கம் ஏரியில் உள்ள இயற்கையான வளத்தை அடிப்படையாக கொண்டு ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற அரசு முடிவெடுத்து ரூ.3.40 கோடி ஒதுக்கியது. இந்த நிதியில்தான், ஏரியை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.

இதுதவிர, ஏரிக்கரைகளில் நடைபயிற்சி தளமும், பறவைகள் அமர்வதற்கு வசதியாக 2 பெரிய மண் திட்டுகள் அமைத்து, அதில் பறவைகள் தங்க ஏற்ற சூழல் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏரியை மழைநீர் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாக புனரமைக்கும் பணியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாம்பாக்கம் சாலையோரத்தில் ஏரியை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. அதேபோல், மணல் திட்டுகள் உருவாக்கப்பட்டன. பெரும்பாக்கம் பகுதியில் சுற்றுச்சுவர், நடைபாதை போன்றவை அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது ஏரியில் அதிகளவில் ஆகாயத்தாமரை நிறைந்துள்ளது. நடைபாதையும் பெயர்ந்து, அப்பகுதியில் புதர்மண்டி உள்ளதால் அதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

என்.கே.ராஜா

இதுகுறித்து நேசமணி நகர் குடியிருப்போர் சங்க தலைவர் என்.கே.ராஜா கூறும்போது, ‘‘பெரும்பாக்கம் ஏரியில் தற்போது ஆகாயத்தாமரை மிகவும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், நீர்வளத்துறைக்கும் தெரிவித்துள்ளோம். பல பகுதிகளில் இருந்து கழிவுநீரும் இந்த ஏரியில் கலக்கிறது. இதை நீர்வளத்துறையிடம் தெரிவித்தோம். ஏரிக்கரையில் பெரும்பாக்கம் வரதாபுரம் முதல் நூக்கம்பாளையம் சாலை வரை நடைபாதை அமைத்தனர். ஆனால், அமருவதற்கு இருக்கைகளோ, மின்விளக்கு வசதியோ செய்யப்படவில்லை.

ஏரிக்கரையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’’ என்றார்.பெரும்பாக்கம், வரதாநகர் பகுதியைச் சேர்ந்த கீதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘பெரும்பாக்கம் சித்தேரியில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் இரு ஏரிகளிடையே நீரோட்டம் தடைபட்டுள்ளது. மேலும், பள்ளிக்கரணையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டதுபோல், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரிக்கரையிலும் பூங்கா அமைக்க நடைபாதை போடப்பட்டது.

ஆனால், அதற்குப்பின் பணிகள் நடைபெறவில்லை. நடைபாதை கற்கள் பெயர்ந்து வருகின்றன. கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெறவில்லை. மேலும் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். கரையில் வாகனங்கள் செல்வதை தடை செய்ய வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையில், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள 10 ஏரிகளை புதுப்பிக்க சிஎம்டிஏ, நீர்வள மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து ரூ.100 கோடியில் திட்டம் உருவாக்கியுள்ளன. இதில் பெரும்பாக்கம் ஏரியும் அடங்கும். பெரும்பாக்கம் ஏரியில் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:பெரும்பாக்கம் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது நடைபெறவில்லை.

அதே நேரம் மழையின்போது திடீரென அதிகப்படியான நீரை வெளியேற்றும் நிலையை தவிர்க்க, தற்போது ரூ.98 லட்சத்தில் கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இதன் அருகில் உள்ள கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. அந்த கலங்கலைவிட இரண்டரை அடி ஆழமாக இந்த வெள்ள ஒழுங்கி அமைக்கப்பட்டுள்ளதால், கூடுதல் நீரை வெளியேற்ற முடியும்.

இதனால், அதிகமாக ஏரிக்கு தண்ணீர் வரும்போது ஏரி சேதமடையாமல் இருக்கவும் வெள்ளப்பெருக்கை தடுக்கவும் முடியும். மேலும் ஏரியின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு வராமல் இருக்க, மழைக்கு முன்பாக ஏரியின் உயரத்தில் 4 அடி தண்ணீர் வெள்ள ஒழுங்கி மூலம் குறைக்கப்படும். மழை நின்றவுடன் கதவணை மூடப்படும். ஏரிக்கரையில் குப்பை கொட்டுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

17 hours ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

மேலும்