திருச்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 1 லட்சம் மரக்கன்றுகள் - ஏனோதானோவென்று நடுதல் தகுமோ?

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருச்சியில் பசுமைப் பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில், திருச்சி மாநகராட்சி, வனத்துறை, தனியார் பங்களிப்பு என கூட்டு முயற்சியாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை ஏனோ தானோவென்று செய்யாமல், முறையாக மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, வனத்துறை உள்ளிட்ட நிர்வாகங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் திருச்சி மாநகராட்சி முழுவதும் ஒரு மண்டலத்துக்கு 20 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம், 5 மண்டலங்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம் அவசரகதியில், போதிய திட்டமிடல் இல்லாமல் இப்பணியை மேற்கொள்வதாக கவலை தெரிவிக்கும் இயற்கை ஆர்வலர்கள், இத்திட்டம் உரிய பயனளிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியது: திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் போதிய இடைவெளியின்றியும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அதை அங்கீகரிப்பது போல மரக்கன்றுகள் நடப்படுகின்றன. சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில்தெருவிளக்கு கம்பங்களையொட்டி மரக்கன்றுகள் வைப்பதால், அவை வளர்ந்த பிறகு இரவு நேரங்களில் வெளிச்சம் கிடைக்காமல் போகும். அப்போது அந்த மரம் அகற்றப்படும் நிலை ஏற்படும். புதை வடிகால், குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடங்களையொட்டி மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

திருச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே சுற்றுச்சுவரையொட்டி போதிய இடைவெளி
இல்லாமல் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள்.

இதனால் புதை வடிகால், குடிநீர் குழாய் பாதிக்கப்படும். பெரும்பாலும் புங்கை, வேம்பு போன்ற நிழல் தரும் மரங்களே வைக்கின்றனர். பழம் தரும் மரங்கள் வைத்தால் பறவையினங்கள் பெருகும். காஜாமலை, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு கூண்டுகள் இல்லை. பிரதான சாலைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் வார்டுகளுக்குள் இருக்கும் சிறிய சாலைகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து நகர பொறியாளர் சிவபாதம் கூறியது: ‘‘பறவைகள் அதிகம் நாடி வரக்கூடிய அத்தி, இச்சி, நாவல் போன்ற பழம் தரும் மரங்களும் அதிகளவு நடப்படுகின்றன. ஏழிலை பாலை, பாதம், உயரமாக வளரக்கூடிய மகோகனி, நெல்லி போன்ற மரங்களும் நடப்படுகின்றன. மின் கம்பிகள் செல்லும் வழித்தடங்களின் கீழ் உயரம் குறைவான அல்லது மெதுவாக வளரக்கூடிய மகிழம் போன்ற மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

இந்த மரங்கள் நன்கு வளர 10 ஆண்டுகள் ஆகும். அதன்பின் கிளைகளை கழித்தால் மீண்டும் நன்கு வளர 3 ஆண்டுகள் ஆகும். இதனால் மின்தடங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. 2 ஆண்டுகள் வளர்ந்த மரக்கன்றுகள் வைப்பதால் விரைந்து வளர்ந்துவிடும்’’ என்றார்.

திருச்சி ராஜா காலனியில் மின்கம்பத்துக்கு அருகில்
நடப்பட்டுள்ள மரக்கன்று.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் கூறியது: ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் இதுவரை 50 சதவீதம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டபோது, அவர்கள் மரக்கன்றுகள் நட ஆர்வம்காட்டவில்லை. மாநகராட்சியில் 8 இடங்களில் மியாவாக்கி குறுங்காடுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சாலை, தெருக்களை கவனத்தில் கொண்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதனால் மாநகரின் பசுமைப் பரப்பு அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும், ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். பெரிய அளவில் ஒரு திட்டம் செயல்படுத்தும்போது சிறு குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை முடிந்தளவுக்கு சரி செய்ய முயற்சிக்கிறோம்.

சாலையோரம் நடும் மரங்கள் 10 முதல் 15 அடி இடைவெளியில் தான் வைக்கப்படுகின்றன. நன்கு வளர்ந்த மரக்கன்றுகளை மழைக்காலத்தில் நடுவதால் அவை விரைந்து வளர்ந்துவிடும். இதனால் மரக்கன்றுகளை கால்நடைகள் கடித்துவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை. ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இத்திட்டத்தில் சமூக ஆர்வலர்கள் தவிர்த்துவிட்டு, வியாபார ரீதியில் செயல்படும் சிலரை வைத்துக்கொண்டு செயல்படுத்துவதாகவும், அவர்கள் பலரிடமும் பணம் வசூல் செய்து மரக்கன்றுகளை வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் கூறியது: உன்னதமான திட்டத்தை செயல்படுத்தம் மாநகராட்சி நிர்வாகம், சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்களை ஊக்கப்படுத்தி இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது, எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE