கழிவு நீரிலிருந்து மாசுக்களை அகற்றும் திடப்பொருள்: சென்னை ஐஐடி சாதனை

By செய்திப்பிரிவு

சென்னை: ஜவுளி உற்பத்தி துறைகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து, கழிவு நீர் மாசுக்கள் அதிகளவு வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த கழிவு நீரில் இருந்து மாசுக்களை அகற்றுவதற்கான அதிநவீன கருவிகளை கண்டறியும் முயற்சியில், சென்னைஐஐடி மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வந்தன.

ஆராய்ச்சிக்கு சென்னை ஐஐடி பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தலைமை வகித்தார். இக்குழுவில் சென்னை ஐஐடி வேதிப் பொறியியல் துறையை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுபாஷ்குமார் சர்மா, பி.ரஞ்சனி மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹடாஸ் மாமனே ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த குழு கழிவுநீரில் இருந்து மாசுக்களை அகற்றும் ‘ஏரோஜெல்’ எனும் திடப்பொருளை கண்டறிந்து சாதனைபடைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் கழிவு நீரில் இருந்து 76சதவீத மாசுக்களை அகற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் கூறியதாவது: மருந்துகள்உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் இருந்து மாசுக்களை அகற்றுவது என்பது கடினமான காரியம். இதை சமாளிக்க அதிநவீன ஏரோஜெல் திடப்பொருளை தற்போது கண்டறிந்துள்ளோம். இதன்மூலம், கழிவு நீர் மாசு உறிஞ்சுதல் முறை ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், 76 சதவீத மாசுக்கள் அகற்றப்பட்டன. இது மிகப்பெரிய சாதனையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE