சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் புத்துயிர் பெற்ற குப்பை கிணறு!

By எஸ்.கோபு


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே குப்பை குவிந்து கிடந்த கிணற்றை தூர்வாரி புனரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் உள்ள 7-வது வார்டு விஜய கணபதி நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்து கைவிடப் பட்ட திறந்தவெளி கிணறு உள்ளது. சுமார் 40 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தும், மக்கள் உபயோகத்தில் இல்லாமல் இருந்தது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பையை கிணற்றில் வீசிச் செல்ல தொடங்கினர். இதனால் கிணற்று நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசியது. வார்டு உறுப்பினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொது நிதி மூலம் சில வாரங்களுக்கு முன்பு கிணறு தூர்வாரப்பட்டது. கிணற்றில் இருந்து காலி மதுபாட்டில், குப்பைகள் அகற்றப்பட்டன. கிணற்றை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதையடுத்து, கைவிடப்பட்ட கிணறு மீண்டும் மக்கள் பயன்படுத்தும் வகையில் புதுப் பொலிவு பெற்றது. தூர்வாரப்பட்ட பின்னர் கிணற்று நீர் தூய்மையாக இருந்ததால், 7-வது வார்டு பகுதியில் முதற்கட்டமாக 50 பொதுக்குழாய் அமைக்கப்பட்டு தினமும் 2 மணி நேரம் பொதுமக்களுக்கு கிணற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “விஜய கணபதி நகரில் இருந்த திறந்த வெளி கிணறு ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தும் குப்பைகொட்டும் இடமாக மாறியிருந்தது.

கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நேரத்தில் இந்த கிணற்று நீரை பயன்படுத்த முடியவில்லை. பேரூராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டாலும், பிற தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தது. வற்றாத இந்த கிணற்றை சுத்தப்படுத்தினால் பேரூராட்சியின் 7 மற்றும் 8-வது வார்டுகளின் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தோம். தற்போது கிணறு தூர்வாரப்பட்டு தெருவில் உள்ள பொதுக்குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது” என்றனர். 7-வது வார்டு உறுப்பினர் காஜா மற்றும் 8-வது வார்டு உறுப்பினர் புஸ்ரா ஜெயினுதீன் கூறும்போது,‘‘கடந்த 30 ஆண்டுகளாக வற்றாத கிணறாக இந்த ‘ஆறாகவுண்டர்’ கிணறு உள்ளது. மக்கள் பயன்பாட்டில் இல்லாததால் சேறும் சகதியுமாக குப்பை சேர்ந்து துர்நாற்றம் வீசியது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் கிணற்றை தூர்வாரியது.

சுமார் 25 நாட்கள் கிணற்றை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மோட்டார் வைத்து இரவு பகலாக இறைக்க இறைக்க தண்ணீர் வற்றாமல் இருந்தது. தூர்வாரி சுத்தம் செய்த பின்னர் மீண்டும் கிணற்றில் குப்பை கொட்டாமல் இருக்க கம்பி வேலி அமைத்தோம். மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு 7-வது வார்டில் பொதுக்குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

விரைவில் இது 8-வது வார்டுக்கும் விரிவுபடுத்தப்படும். இதுபோல் கைவிடப்பட்ட நீர்நிலைகளை கண்டறிந்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றனர். உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் திட்டங்களை மட்டுமே நம்பி இருக்காமல் உள்ளூர் நீராதாரங்களை புனரமைத்து அவற்றுக்கு புத்துயிர் கொடுத்தால் கோடையில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்பதற்கு சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி நிர்வாகம் முன்னுதாரணமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்