கானகத்தை காக்கும் ‘ஹைனா’ - ‘லியோ’ சித்தரிப்பும், கழுதைப்புலி பண்புகளும்!

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படத்தில், ஒரு கதாபாத்திரமாக ஆரம்பம் மற்றும் இறுதிக்காட்சிகளில் ‘ஹைனா’ எனப்படும் கழுதைப்புலி சித்தரிக்கப்பட்டிருக்கும். அது, குழந்தைகள் தொடங்கி அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். இந்நிலையில், கழுதைப் புலி குறித்து காடுகளில் ஆய்வு மேற்கொண்டு, ‘கழுதைப்புலி - ஒரு கானக தூய்மையாளன்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் கோவை சதாசிவம்.

இது தொடர்பாக திருப்பூர் வீரபாண்டியில் வசித்து வரும் கோவை சதாசிவம் கூறியது: உலகில் 4 வகை கழுதைப்புலிகள் இருந்தாலும், தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் வரிக்கழுதை புலிகள் மட்டுமே உள்ளன. ஆப்பிரிக்கா நாடுகள்தான் இதன் தாயகம். இவை புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடிகள் விட்டுச்செல்லும் கடினமான இறைச்சி பகுதிகளை உணவாக எடுத்துக் கொள்ளும். காட்டு மாட்டின் குளம்புள்ள கால் ஒன்றையோ, கடமானின் கொம்புள்ள ஒரு தலையையோ தூக்கிக்கொண்டு, வெகு தொலைவு போகும் அளவுக்கு கழுதைப்புலியின் தாடை வலுவானது. தன்னைவிடவும் 2 மடங்கு வலிமையான விலங்கை, தாடையால் வீழ்த்தக்கூடியது.

கழுதைப்புலிகளும், சிறுத்தைகளும் அருகருகே வாழும் வாழ்வியல் சூழலை கொண்டாலும், சிறுத்தை குட்டிகளை கழுதைப்புலிகள் வேட்டையாடி தின்றுவிடும். அதேபோல, கழுதைப்புலி குட்டிகளை சிறுத்தைகள் வேட்டையாடிவிடும். இதனால், காடுகளில் இன்றும் சிறுத்தைகளுக்கும், கழுதைப்புலிகளுக்கும் தீராப்பகை உள்ளது. ஆனால், கழுதைப்புலிகள் இன்றைக்கு விலங்குகள் சமூகத்தில் அரிதாகிவிட்டன.

கழுதைப்புலிகள் என்றாலே ஒருவிதமான அருவருப்பும், ஒவ்வாமையும் மனிதர்களுக்கு ஏற்படுவது இயல்புதானே? - ‘லியோ’ திரைப்படத்தில்கூட, ‘ஏதோ சொறி நாய் ஒண்ணு இங்கிருக்கு’ என்ற உரையாடல் வருவதை பார்க்கிறோம். புலியைபோல முகத்தோற்றமும், பின்னங்கால் வலுவற்று இருப்பதாலும் நடக்கும்போது, கழுதையைபோல கால்களை பின்னுவதாலும் கழுதைப்புலி என பெயர் வந்திருக்கலாம்.

சமீபத்தில் உயிரியலாளர்கள் கழுதைப்புலியை பூனை அல்லது புணுகு பூனை குடும்பத்தின் பிரதிநிதியாக சேர்த்துள்ளனர். ஆப்பிரிக்கா தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசிய வெப்பநிலப் பகுதிகளில் 4 வகையான கழுதைப்புலிகள் வாழ்கின்றன. ஆப்பிரிக்காவில் இருப்பவை புள்ளி கழுதைப்புலி, ஆர்ட்வுல்ப் கழுதைப்புலி, பழுப்புநிற கழுதைப்புலி. இங்கு காணப்படுபவை வரி கழுதைப்புலி.

நம் நிலப்பரப்பில் காணப்படும் வரி கழுதைப்புலிகள் குறித்து? - அடர்த்தியான கருப்பு நிறத்தில் 7 முதல் 9 கோடுகள் கொண்ட வரி கழுதைப்புலிகளை இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம், சீகூர், தெங்குமரஹடா வனங்களில் பார்க்கிறோம். இரவில் மட்டுமே வெளியே வரும். காடுகளில் பகலில் நடமாட்டம் இருக்காது. பிடரி, தோல், காதுகள், முகம் போன்றவை கருப்பு நிறத்தில் இருப்பதால் இதனை எளிதில் அடையாளம் காண முடியாது. வேட்டை நுட்பத்திலும், உடல் பலத்திலும் ஆண்களைவிட பெண் கழுதைப்புலிகளே வலிமையானவை. குழுவில் உள்ள இளம் கழுதைப்புலிகளுக்கு வேட்டையாட கற்றுத்தருபவை பெண் கழுதைப்புலிகளே!

ஒரு கானக தூய்மையாளன் என்று இதனை எப்படி சொல்கிறீர்கள்? - ஒரு நாளைக்கு சுமார் 10 மணிநேரம் உணவு தேடுகின்றன. காட்டில் பிற கொன்றுண்ணிகள் உண்ண முடியாது விட்டுச்செல்லும் எச்சங்களை உண்டு, காட்டில் எலும்புக்கூடுகள் சேராமல் பார்த்துக்கொள்கின்றன கழுதைப்புலிகள். எவ்வளவு கடினமான எலும்புகளாக இருந்தாலும், அதனை உண்டு செரிக்கும் ஆற்றல் கழுதைப்புலிக்கு மட்டுமே இருக்கிறது. கொம்புகள், நகங்கள், அடர்த்தியான கொழுப்பு படிமங்கள், ரப்பர் போன்ற தசை நார்களை மென்று கூழாக மாற்றி விழுங்குகின்றன.

தூய்மையை பெருமையாகவும், துப்புரவாளர்களை சிறுமையாகவும் நடத்தும் போக்கு மனிதர்களிடம் இப்போதும் உள்ளது. வனப்பகுதிக்குள் குவியும் இறைச்சி கழிவுகளை உண்டு அழப்பதில் கழுதைப்புலிகளின் பங்கு அளப்பரியது. விலங்குகளின் மந்தையில் நோயால் அவதியுறும் யானைகள், காட்டு மாடுகள், கடமான் போன்ற விலங்குகளை கழுதைப்புலிகளே கொன்று தின்று மற்ற மந்தைகளிலுள்ள விலங்குகளுக்கு நோய் பரவாமல் தடுக்கின்றன.

நோய் எதிர்ப்பாற்றல் இருப்பதாலும், அழுகிய உணவுகளை உண்பதாலும், சதைத்துணுக்குகள் உடலில் படிவதாலும் எப்போதும் சகிக்க முடியாத வாசனை கழுதைப்புலிகளிடம் வீசும். நிரந்தரமாக ஓரிடத்தில் வாழ முடியாது. குழுக்களின் பெருக்கமும், இரை விலங்குகளின் தட்டுப்பாடும், அவைகளை இடம்பெயரச் செய்கின்றன.

கோவை சதாசிவம்

திருப்பூரில் கழுதைப்புலிக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது? - சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் அணை சுஜ்ஜல்குட்டை பகுதியில் வழிதவறி வந்த கழுதைப்புலியை, கிராமத்து மக்கள் கடுமையாக தாக்கினர். குற்றுயிரும், குலை உயிருமாக கிடந்த கழுதைப்புலியை கோணி பைக்குள் எடுத்து வந்து, திருப்பூர் கால்நடை மருத்துவமனையில் வைத்து, 2017ம் ஆண்டு மருத்துவர் அசோகன் தலைமையில் சிகிச்சை அளித்தனர்.

18 கிலோவாக இருந்த கழுதைப்புலியை, 42 கிலோவுக்கு உடல்தேற்றப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டது. இதற்கு, திருப்பூர் இயற்கை கழகத்தினர் பக்கபலமாக இருந்தனர். இந்தியாவிலேயே முதல்முறையாக உயிரிழக்கும் நிலையில் இருந்த கழுதைப்புலியை பல கட்ட சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றியது இதுவே முதல் நிகழ்வு. மனிதாபிமானத்தை கடந்து உயிர்ம நேயம் காக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

மேலும்