ஜே.சி. குமரப்பா காந்தியின் முக்கிய சீடர், காந்தியப் பொருளாதாரத்தின் தலையாய சிற்பி. இயேசு, காந்தி என்ற இரு கண்களின் வழியாக இந்தியர்களின் வறுமையையும் பட்டினியையும் இங்கு நிலவும் சுரண்டலையும் குமரப்பா மிகச் சரியாகப் புரிந்துகொண்டார். கிராமியப் பொருளாதாரமும் வேளாண்மையும்தான் இந்த நாட்டின் உயிர்நாடி. இதை முதலில் சீர்குலைத்தது ஆங்கிலேய அரசுதான் என்ற சமூகப் பருண்மையையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.
தஞ்சையில் வசதியான, பெரிய கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் ஜே.சி. குமரப்பா. முதலில் பிரிட்டனிலும் பின்னர் மும்பையிலும் கணக்குத் தணிக்கையாளராகக் கை வழியச் சம்பளம் வாங்கி வெளிநாட்டுப் பண்பாட்டின் முழு உருவகமாகவே வாழ்ந்தவர். காந்தியச் சிந்தனைகளால் கவரப்பட்டு அவரது ஆசிரமத்துக்குப் போனார். போன இடத்தில் சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியற்ற ஓர் இடத்தில் காந்தியைச் சந்தித்து உரையாடினார். அதன் பிறகு பெரும் நீர்ச்சுழலுக்குள் அகப்பட்ட நீர்த்துளிபோல மகாத்மாவின் ஈர்ப்புப்புலனுக்குள் அவர் ஐக்கியமாகிவிட்டார்.
புனையப்பட்ட மதிப்பீடுகள்
வசதியான குடும்பப் பின்னணி, வேலை, மண வாழ்க்கை என அத்தனையையும் பழைய துணியைக் களைவதுபோல் கழற்றிப் போட்டுவிட்டு, தன் மொத்த வாழ்க்கையையும் காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டார். பொருளாதாரத்தைத் தனித்த தீவுத் துண்டாகப் பார்க்காமல் ஒட்டுமொத்த வாழ்க்கை ஓவியத்துக்குள் உறையும் நிறத் தீற்றலாகவே அவர் கண்டார். பல்வேறு நிறங்களும் மணங்களும் வடிவங்களும் குணங்களும் கொண்ட காட்டு மலர்களைப் போல மனிதர்களும் பல வகையினராகத்தான் இருக்கிறார்கள்.
உலகிலுள்ள உயிர்களின், மனிதர்களின் இந்த வண்ணமயமான வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளாதவர்களும் பன்மைத்தன்மையைப் புரிந்துகொள்ளத் தயாராக இல்லாதவர்களும்தான் இவையனைத்தையும் உருக்கி ஒற்றை வார்ப்பாக, ஒரே வகையான மதிப்பீடாக, அனைவருக்கும் ஏற்றதாக மாற்ற வலிந்து முயல்கின்றனர்.
இந்த ஒற்றை வார்ப்பானது சந்தை ஆதாய சக்திகளுக்கு மிகவும் தேவையானதும்கூட. அதனால்தான் அவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் விற்க மக்களின் மூளையைத் தின்னும் விளம்பர உத்திகளைக் கையாள்கின்றனர். மெல்ல மெல்ல மக்களின் மனதில் ஓர் ஏற்பு நிலையைப் பதித்துவிடுகின்றனர். பின்னர், அதையே எல்லாருக்குமான தவிர்க்க இயலாத ஒற்றை வாழ்க்கைத்தரமாக மாற்றுகின்றனர்.
இந்தப் படிநிலைக்கு முன்னர் மனித வாழ்க்கையின் வண்ணமயத்தையும் பன்மைத்தன்மையையும் களிப்பையும் விடுதலை உணர்வையும் மிக நுணுக்கமாக அவர்கள் அழிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகக் காலங்காலமாக இருந்துவந்த இயல்பான வாழ்க்கை நடைமுறைகளை மக்கள் இழிவாகப் பார்க்கத் தொடங்குகின்றனர். பழைய மதிப்பீட்டின்படி வாழ்பவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற பதிவை ஒட்டுமொத்த மக்களின் மனதில் ஆழமாகவும் அழுத்தமாகவும் சந்தை சக்திகள் வெற்றிகரமாகப் பதித்துவிடுகின்றன.
விலை ஏறிய சாதனங்களையும் சேவைகளையும் வாங்குவதற்கும் நுகர்வதற்கும் சராசரி வருமானம் போதாது. கூடுதல் வரும்படி வேண்டும். அந்த வரும்படியையும் எட்டிப் பிடிக்க ஆலாய்ப் பறக்க வேண்டும். இந்த வரையறைக்குள் வர இயலாதவர்கள், வர மறுப்பவர்களைக் குறித்துக் குடும்பத்திலும் சமூகத்திலும் தரம் தாழ்ந்த சித்திரம் அனிச்சையாக எழும் வகையில் எல்லாம் கட்டமைக்கப்படுகிறது.
இப்படிப் போலியான, திணிக்கப்பட்ட தவறான சமூக மதிப்பீடுகளால் ஏற்படும் பின்விளைவுகள் நம் சமூகத்தின் அடித்தளத்தை மெல்லிய நிலநடுக்கம்போலத் தொடர்ந்தும் நிரந்தரமாகவும் அலைக்கழித்துக்கொண்டே இருக்கின்றன.
இதை ‘சிக்கலான வாழ்க்கை முறை’ என்று வரையறுக்கும் ஜே.சி. குமரப்பா, மனித வாழ்க்கையானது ‘வாழ்தல்’ என்ற நிலையிலிருந்து ‘உயிரோடு இருத்தல்’ அல்லது ‘பிழைத்திருத்தல்’ என்கிற கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு்ள்ளது என்கிறார்.
இந்தச் சிக்கலை, தனித்த ஒரு விஷயமாகப் பார்க்க முடியாது. இது வாழ்விடத்தில் தொடங்கி உடை, உணவு, பண்பாடு, மொழி, விளையாட்டு என அனைத்திலுமாக விரிந்துகொண்டே செல்கிறது. இந்தப்பார்வை பொருளாதாரத்துக்குள்ளும் தனது ஆக்கிரமிப்பை நடத்தியுள்ளது.
தொலைந்துபோன அர்த்தம்
‘எல்லோரும் ஏற்றுக் கடைப்பிடிக்கிற வாழ்க்கைத் தரத்திலிருந்து சற்றே விலகினாலும் மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றியே மக்கள் கவலைப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கைகூட மேட்டுத்தர மக்களின் தொழில், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிற புறத்தோற்றங்களாலும் நடப்பு வழக்குகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.’
ஜே.சி.குமரப்பாவின் இந்த வரிகள், அப்படியே சமூக நிகழ்வாக மாற்றமடைந்திருப்பதைப் பார்க்க வேண்டும். கொஞ்ச காலத்துக்கு முன்னர் சென்னையில் நடந்த நிகழ்வு இது. அவர்கள் இருவரும் மனமொத்த இணையர். அழகான இரண்டு குழந்தைகள், உயர்ந்த படிப்பு, தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளர் வேலை, தேவைக்கும் மேலான சம்பளம், நல்ல சமூக அந்தஸ்து. திடீரென்று ஒரு நாள் கணவர் தற்கொலை செய்துகொண்டார். வாழ்வதை நிறுத்தியதற்கான காரணத்தைத் துண்டுச்சீட்டில் எழுதி வைத்திருந்தார். பல லட்சம் மதிப்புள்ள கார், ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புகொண்ட அடுக்ககக் குடியிருப்பு போன்றவற்றை அவர்கள் இருவரும் பெற்றிருந்தனர். மாதத் தவணைகளில் கடனை ஒழுங்காகத் திரும்பச் செலுத்தியும் வந்தனர்.
திடீரென ஒரு நாள் கணவனின் மாத ஊதியத்தில் கணிசமான வெட்டு விழுந்தது. திகைத்து நின்றவரிடம் ‘நிறுவனத்தின் தற்போதைய நிதிநிலையில் இதுதான் சாத்தியம். கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களை வேலையைவிட்டு ஒன்றும் நாங்கள் தூக்கிவிடவில்லையே’ என்றது நிர்வாகம்.
அடுக்ககக் குடியிருப்பு, ஊர்தி ஆகியவற்றுக்கான கடன் தவணைகள் ஒரு நொடியில் வண்ணத்துப் பூச்சியின் மேல் வைத்த பாறாங்கற்களாக மாறிப் போயின. சம்பளத்துடன் சமூக அந்தஸ்தும் வசதியான வாழ்க்கைக்கான கனவுகளும் சரிந்து விழுந்த புள்ளியில், வாழ்க்கையின் மீதான முற்றுப்புள்ளியும் வந்து இணைந்துகொண்டது.
விலை மதிக்க முடியாத கொடைகளான மனித உயிரும் வாழ்வும் தன்மானமும் நம்பிக்கையும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் நுகர்வு வேட்கைக்கும் நகர மாயையின் தரத்துக்கும் மிகத் தாழ்வாக வைக்கப்பட்ட கீழ்மையின் விளைவு இது.
எளிய போராட்டக் கருவி
நவீன பொருளாதார முறைகள் வாழ்க்கையைத் தேக்க நிலைக்குக் குறைத்து, வாழ்தலை வெறும் உயிரோடு இருத்தல் என்ற நிலைக்குக் கொண்டுவந்து விட்டன. பிற விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்தும் வாழ்க்கையின் ஆழ்ந்த அம்சங்களைப் பற்றிய எண்ணங்களுக்குத் தற்போது நிலவுகிற பொருளாதாரக் கருத்தில் சிறிதும் இடமில்லை.
மாறாக மனித, ஆன்மிக மதிப்பீடுகளைப் பற்றிக் குறிப்பிடுவதையே ஏளனமாக எண்ணும் ஆபத்தான ஒரு போக்கே நிலவிவருகிறது. தற்போதுள்ள மதிப்பீடுகளில் உள்ள முரண்பாடுகள் எப்படிப்பட்டதென்றால் ரோஜா தோட்டத்துக்குள் செல்லும் ஒரு பொற்கொல்லன் மலர்களை உரைகல் மூலம் சோதித்துப் பார்ப்பதற்கு ஒப்பாகும்.
கெடு வாய்ப்பாக பணமே அரியணையில் ஏற்றப்பட்டுள்ளது. எல்லாமே மனிதனுடைய ஆளுமையைச் சுற்றி வராமல், பணத்தையே மையமாகக்கொண்டு சுற்றிவருகிறது. நம் வாழ்வில் மதிப்புகளை எடைபோட பணத்தைவிட வேறு முக்கியமான தராதரங்கள் உள்ளன.
மனிதன் வெறும் உணவால் மட்டும் உயிர் வாழவில்லை. மாறாக, முழுமையான நிலையைச் சென்றடைய மனிதனுக்கு அவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்துக்கும் தடையேதுமின்றித் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு தரும் அனைத்தினாலுமே வாழ்கிறான்.
பண அடிப்படையை மட்டுமே கொண்ட மதிப்புகள் மாற்றப்பட்டுப் பல்வகையான பண்பாட்டு மதிப்பீடுகள் ஏற்கப்பட்டு, அவை பொது மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்படியான நிலையை ஏற்படுத்த வேண்டும்.
குமரப்பா சுட்டிக்காட்டும் மனித வாழ்வின் மீதான மதிப்பீடு என்பது ஒரு தனி மனிதனிலிருந்து கசிந்து சமூகம் முழுவதற்கும் பரவுகிறது.
வெளிநாட்டுப் பொருட்களையும் பெரும் ஆலைகளில் உருவான பொருட்களையும் நிராகரித்து, நமக்கு அருகிலிருப்பவர்கள் உருவாக்கிய பொருட்களை வாங்குவது என்ற முடிவை நாம் உறுதியாக எடுத்துவிட்டால் சந்தை ஆதாய சக்திகள் தங்களது கடையை ஏறக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற தீர்வை நமக்குச் சொல்லித் தருகிறார் குமரப்பா.
ஒரு கையில் வீழ்த்தும் குயுக்திகளுடனும் மறு கையில் பெரும் செலவிலான விளம்பர வலிமையுடனும் முரட்டுத்தனமாக எழுந்து நிற்கும் பன்னாட்டுப் பூத கணங்களுக்கு எதிராக நம் கையில் ‘ஒத்துழையாமை’ என்கிற குறி தவறாத சிறு கவண்கல். எந்தச் சாதாரண மனிதரும் ஏந்தவல்ல காந்தியப் போராட்டக் கருவி.
யார் யாருக்கு அடிமை?
பழையவை அனைத்தும் முற்றிலும் சிறந்தவை என்றோ புதியவையும் மாற்றங்களும் வளர்ச்சிகளும் முழுவதும் தீங்கானவை என்றோ ஒருபோதும் குமரப்பா வாதிடவில்லை. எத்தகைய மாறுதல்களும் வளர்ச்சிகளும் தொழில்நுட்பங்களும் மனிதத்தைக் கொண்டாடுவதாகவும் இயற்கையை விட்டு விலகாததாகவும் இருக்க வேண்டும் என்றே அவர் வலியுறுத்துகிறார்.
மனிதர்களின் வாழ்க்கையில் உள்ள கடுமையான வேலைகளை நீக்குவதற்குப் பொறிகளையும் கருவிகளையும் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், அவை மென்மேலும் தேவையற்ற கருவிகளையும் அவற்றுடன் உடன்பிறந்தவையாகப் பல்வேறு புதிய சிக்கல்களையும் நமது அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டுவருவதையே குமரப்பா எதிர்க்கிறார்.
மனித வளம் குறைவாக உள்ள இடங்களில் இயந்திரங்களின் பயன்பாட்டையும் கைவினைஞர்களுக்குத் தேவையான சிறு இயந்திரங்களையும் வரவேற்பதில் அவர் பின் நிற்கவில்லை. இயந்திரங்களின் வரவானது சிரமங்களை நீக்கலாம். ஆனால், அவை நமது வாழ்விலிருந்து மனிதத்தன்மையை நீக்கிவிடக் கூடாது. கருவிகள் நமக்கு அடிமையாக இருக்கலாமே தவிர, நமது உரிமையாளராக ஒருபோதும் அவை மாறக் கூடாது என்கிறார்.
‘வாழ்க்கையில் மகிழ்வுதான் நோக்கம்’ என்பதை அற்பப் பொருட்களையும் வசதிகளையும் அடைவதும் என்கிற வகையில் கீழான இச்சைகளின் அழுக்குக் குளத்தில் ஆன்மாவை முக்கி எடுப்பது என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.
ஒவ்வொரு நாளும் அனைத்து மனிதர்களும் மிக எளிமையாக வாழ வேண்டும். உணவு, உடை, உடல்நலன், கல்வி, களிப்பை அனைத்து மனிதர்களும் இன்றிமையாத அளவுக்குப் பெற்றிருக்க வேண்டும். மனித மனதின் ஆற்றல் அளப்பரியது. விரிவடைந்துகொண்டே செல்லும் அதன் படைப்பாற்றல் திறனை, மனிதர்களின் அறிவுடனும் செயல்திறனுடனும் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை அவனே விரும்பி நிகழ்த்தும் வாய்ப்பையும் சூழலையும் உருவாக்கிக்கொடுக்க வேண்டும். மகிழ்ச்சியான நல்லிணக்கச் சூழலில் நடைபெறும் இந்த ஒத்திசைவின் விளைவாகத் தனக்கும் மொத்த சமூகத்துக்கும் அவன் புதிய நலனை அள்ளி அள்ளி வழங்கிக்கொண்டே இருப்பான். இதைத்தான் காந்தியப் பொருளாதாரம் நாடுகிறது.
படிப்படியான வீழ்ச்சி
பண மையப் பொருளாதாரத்தின் தொடர் விளைவான கண் மூடித்தனமான நகர மயமாக்கலானது வாழ்க்கை பற்றிய உண்மையான கோட்பாட்டைப் புரட்டிப்போட்டுவிட்டு, தான் முன்வைப்பது மட்டுமே நேரானது, சரியானது என அடித்துச் சொல்கிறது.
பிறழ்ந்தவற்றை நமதாக்கிக்கொண்டு காந்தியையும் காந்தியப் பொருளாதார நிபுணர் ஜே,சி.குமரப்பாவையும் நாம் கைவிட்டதற்கான கைம்மாறை ஒரு இளம் குடும்பத்தின் வாழ்க்கைக்குள் மட்டுமல்ல சமூகத்தின் பெரும் பகுதிக்குள்ளும் செருகிவிட்டோம்.
ஜே.சி.குமரப்பா முன்வைக்கும் காந்திய கிராமியப் பொருளாதாரக் கோட்பாட்டில் மக்கள், மண், சூழலியல், கைத்திறன் தொழில், குறைந்த அளவிலான அதே நேரத்தில் எல்லாத் தனிநபர்களுக்கும் போதுமான வாழ்வாதாரம், அனைவருக்கும் வருவாய், கிராமங்களில் கால் பதித்து மேலெழும் வளர்ச்சி போன்ற அனைத்து நல அம்சங்களும் கண்ணுங்கருத்துமாய்க் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தன.
ஆனால், தேசத் தந்தை காந்தியின் கண்களின் எதிரிலேயே அவரது கிராமியப் பொருளாதாரக் கொள்கைகளை நேரு தலைமையிலான மத்திய அரசு முற்றிலுமாகக் கைவிட்டது. நாட்டுப் பிரிவினைக்குப் பின் பெரும்பாலான வட இந்திய நகரங்களில் நடந்த இடப்பெயர்வு, அகதிகள் குவியல் ஆகியவற்றால் எஞ்சி நின்ற மத, இன, மாச்சரிய கசப்பும் வெறுப்பும் திரும்பத் திரும்ப நிகழும் சாத்தியப்பாடுகளைக் கொண்ட ஊழிப்பேரலைபோல் காத்துக் கிடந்தது.
ஒருவரின் கழுத்தை மற்றவர் வெட்டியும் அறுத்தும் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும் பேரழிவுகளுக்கான எல்லா வன்செயல் நினைவுகளையும் சமதர்ம பொருளாதாரக் கொள்கை என்ற பெருந்துடைப்பான் மூலம் அழித்துவிட்டு, சராசரி இந்திய மனதைப் புத்தாக்கம் செய்ய நேரு முனைந்தார். ஆனால், அது காந்தியப் பொருளாதாரத்தை முழுமையாக நிராகரிப்பதில் போய் முடிந்தது என்கின்றனர் சமூக ஆய்வாளர்கள்.
27CHVAN_kumarappaa-Gandhi.jpgநேரு நடைமுறைப்படுத்திய சமதர்ம பொருளாதாரக் கொள்கைகளிலும் அதன் பலனாக நடந்த பெரு ஆலை உருவாக்கம் - இயந்திரமயமாக்கலிலும் அதையொட்டிய பெரு நகரங்களின் பாய்ச்சல் வளர்ச்சியிலும் வேறு பல பெரும் நன்மைகள் கிடைத்தது உண்மைதான். ஆனாலும், விவசாயத்தையும் கைத்திறன் தொழில்களையும் அவற்றையொட்டிய கிராம வளர்ச்சியையும் அவை கீழே தள்ளிவிட்டன.
விடுதலை பெற்ற இந்தியாவில் அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் சன்னஞ்சன்னமாக விவசாய - கிராமிய வளர்ச்சி என்பதை மென்மேலும் கீழ்நிலைக்குத் தள்ளின. நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் எட்டப்பட்ட ‘காட் – டங்கல் ஒப்பந்தம்’ வாயிலாக இது முழு ஆபத்து நிலையை எட்டியது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளை எட்டிப்பிடித்த நிலைமையில், இன்று பா.ஜ.க.வின் ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அந்த ஆபத்து சிகரத்தை எட்டிவிட்டது.
எது நமக்கான பொருளாதாரம்?
இன்றைய சிக்கலான பொருளாதார முறைக்கு மாற்றாக ஜே.சி. குமரப்பா முன்வைக்கும் ‘நிலைத்த பொருளாதாரம்’ என்பது எண் இலக்கங்கள், தங்கம், பணத்தாள்கள், ஆதாயம், இழப்பு போன்றவற்றை மட்டும் சுற்றிசுற்றி வரும் வறட்டுச் சித்தாந்தம் அல்ல.
நேரெதிர் நிலைப்பாடுகளுடைய முதலாளித்துவ, பொதுவுடைமைப் பொருளாதார சித்தாந்தங்களையும் கண்ணை மூடிக்கொண்டு அவர் பின் தொடரவில்லை. அவற்றை விமர்சனபூர்வமாக ஏற்றும் நிராகரித்தும் முன்செல்லும் குமரப்பா, பொதுவாக மக்களிடையே புழங்கிக்கொண்டிருக்கும் தலையாய பிரச்சினையாகப் பண மையப் பொருளாதாரத்தையே அடையாளம் காண்கின்றார். அதற்கான சான்றுகளை மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளின் குவியலிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.
விவசாயத்தையும் கைத்திறன் தொழில்களையும் கிராமத்தையும் மையமாகக் கொண்ட, வாழ்க்கையின் மற்ற துறைகளுடன் நன்கு ஒத்திசைந்து இயங்குகின்ற, நமது நாட்டின் நாகரிகத்திலிருந்தும் இங்கு நிலைநிற்கும் ஞான மரபுகளிலிருந்தும் மலரக்கூடிய மலராகவே இந்தியப் பொருளாதாரத்தை அவர் காண்கிறார்.
தத்துவவியலையும் மானிட நேயத்தையும் அறத்தையும் தார்மிக மதிப்பீடுகளையும் பிரபஞ்சத்தின் இயங்கு விதிகளையும் அதில் இணைத்ததன் வழியாக அவர் இந்தியாவுக்கான பொருளாதாரக் கொள்கையை இயற்கையின் லயத்தோடு மீண்டும் பிணைத்தார். உயிர்த்துளி மின்னும் இந்தக் கலவையிலிருந்து இந்தியப் பொருளாதாரக் கொள்கை தன் ஆன்மாவைச் சோதித்தறியும் ஒரு இதயத்தையும் சேர்த்தே பெற்றுக்கொண்டது.
‘பழையதே சிறந்தது’ என்ற பொற்காலக் கொண்டாட்ட வாதத்துக்குள்ளும் தன்னை அவர் முடக்கிக்கொள்ளவில்லை. நிகழ்காலப் பருண்மைகளைக் கண்மூடித்தனமாக குமரப்பா நிராகரித்துவிடவும் இல்லை.
கிராமிய, சர்வோதய முழுமையான பகிர்வு வாழ்வு முறையில் வலியுறுத்தப்படும் சுதேசி, அந்நியப் பொருள் புறக்கணிப்பு போன்றவற்றைத் தூய்மைவாதத்துக்கும் அதிதீவிர நிலைப்பாட்டுக்குமான கருவிகளாக, தவறாகப் பயன்படுத்த முடியாதபடிக்கு தடுப்பான் ஒன்றைப் பயன்படுத்துகிறார். சுதேசியத்தின் வழியாக சர்வதேசியத்துக்கு வந்தடைதல் என்கிற அன்பான, ஒழுக்கமான உடன்பாட்டு அணுகுமுறைதான் அந்தத் தடுப்பான்.
பின்னோக்கிய வேகம்?
பேராசை, போட்டி, ஒருசிலருக்கான வளர்ச்சி, சமூகக் கூட்டுணர்வின்மை, கொல்லும் உளச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, அவ நம்பிக்கை போன்ற எதிர்மறை அம்சங்களையும்தான் தற்போது நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெளியிலிருந்தோ ஆதிக்கம் செலுத்துவோரின் மூளையிலிருந்தோ வரக் கூடாது. அது தூய்மை யாக்கப்பட்ட அகத்தில் முளைவிட்டு சமூகத்தின் கடைக்காலிலிருந்துதான் எழ வேண்டும். பின்னர், அது கோபுரம் நோக்கி சம அளவில் வளர்ந்து, உயர்ந்து செல்ல வேண்டும். அப்படி அமைதியாகவும் உறுதியாகவும் நிலைபெறும் வளர்ச்சியில் யாருடைய தனித்தன்மையும் தளையற்ற தன்மையும் பறிக்கப்படாது. எல்லாப் பிரிவு மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இயற்கையின் எல்லாக் கூறுகளும் தங்களுக்குத் தகுதியான பங்கை எவ்வித வன்முறையோ அதீத யத்தனங்களோ இன்றி பெற உறுதியளிக்கப்படும்.
இந்தப் பொருளாதாரக் கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை.
மனித அறிவின் பரப்பு ஒரு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் கடவுளுடன் கொண்டு இணைப்பதன் வாயிலாகத் தான் செய்ததெல்லாம், பொருளாதாரத்தை அதன் இயல்பான வடிவில் மீட்டுருவாக்கம் செய்ததுதான் என ஆன்மப் பணிதலுடன் சொல்கிறார் குமரப்பா.
குமரப்பாவின் கீழ்க்கண்ட வரிகளை நமது ஆட்சியாளர்களும் முன்னேற்றம், வளர்ச்சி என்கிற தேவதைகளை நிரந்தரமாகத் தொழுது தழும்பேறியவர்களும் தங்கள் வீட்டு நிலைக் கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளட்டும். ‘நமது செயல்பாட்டின் விளைவாக பொருளாதார முன்னேற்றம் குறைவாக இருந்தாலும் நல்லெண்ணம், அமைதி, மனநிறைவு ஏற்படுமானால் நாம் முன்னேற்றத்தின் பக்கம் இருப்பதாகவே கருதலாம். நாம் நிறைய பொருள் வளம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் மனநிறைவின்மையும் மோதலும் இருக்குமானால் நாம் பின்னோக்கி போகிறோம் என்பது பொருள்.’
தண்டனையிலிருந்து தப்பிக்கிறோமா?
குருவி, மலை, நாணல் செடி, பழம், ஆறு போன்ற இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகள் தங்களுடைய இயல்பான அன்றாடச் செயல்பாடுகளின் வழியாகவே இயற்கையின் மற்ற அனைத்துக் கூறுகளுடனும் எவ்வித நெருக்குதலும் இல்லாமல் ஒத்திசைகின்றன. ஒன்று வாழ்ந்து மற்றதைச் செழிக்க வைக்கின்றன. இயற்கையின் மற்றெல்லா உயிரற்ற உயிருள்ள அசையும் அசையா படைப்புகளுக்கும் இது பொருந்தும்.
இந்த விதியிலிருந்து மனிதனும் அவனது அன்றாட வாழ்வை முன்னகர்த்திச் செல்லும் பொருளாதாரம் உள்ளிட்ட மற்ற துறைகளும் விலகிச் செல்லவும் முடியாது. இதிலிருந்து விதிவிலக்கு கோரவும் முடியாது.
மனிதர்கள் வகுக்கும் விதிகளை மனிதர்கள் மீறும்போது சில நேரம் தண்டனை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் தப்பிவிடலாம். ஆனால், இயற்கை விதிகளை மீறும்போது எவ்வளவு தாமதமானாலும் சரி, சிறு அதிர்வு தொடங்கி பேரழிவு வரையிலான எதிர்விளைவுகளை மனிதக் கூட்டம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. யாரும் எங்கும் ஓடித் தப்பிக்க இயலாது.
முரண்களும் மோதல்களும் நீக்கப்பட்ட அன்பும் அமைதியும் ததும்பும் சூழலில் இயற்கையின் உள்-வெளி லயத்துடன் பொருளாதாரத்தைக் கச்சிதமாகக் கொண்டுபோய்ப் பொருத்தி, அதற்கு நிலைத்த தன்மை என்ற அமரத்தன்மையை வழங்குவதில் வெற்றியடைந்துள்ளார் குமரப்பா.
1990-களில் இந்தியாவுக்குள் அதிரடியாக நுழைந்த ‘டங்கல் – காட் ஒப்பந்தம்’ நம் நாட்டின் பொருளாதாரத் தளத்தில் மட்டுமல்ல சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்திலும் எண்ணற்ற நேரடி, பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பேராசைகளும் முடிவற்ற பொருளியல் இலக்குகளும் வெற்றிக் குவியல்களுக்கான உரிமைகோரல்களும் முட்டுச்சந்தில் சென்று தலையை உடைத்துத் திரும்பும் காலமிது.
வண்ணமயமாகச் சிலாகிக்கப்பட்ட பெரும் ஆலைமயமாக்கமும் டங்கல் – காட் ஒப்பந்தமும் நோய்மையின் சோகை வெளிறல்களோடு தள்ளாடும் இடத்தில் காந்தியும் குமரப்பாவும் கருக்கு மாறாமல் துளிர்த்து நிற்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
23 days ago
சுற்றுச்சூழல்
24 days ago
சுற்றுச்சூழல்
24 days ago
சுற்றுச்சூழல்
24 days ago