ஒரே நேரத்தில் 12,000 பறவைகளை காணும் வாய்ப்பு: மதுரையின் முதல் சரணாலயம் ஆகுமா சாமநத்தம் கண்மாய்?

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை சாமநத்தம் கண்மாய் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாற்று அறிஞர்கள் கூற்றுப்படி, மதுரையின் தென்பகுதியில் உள்ள கீழடியுடன் தொடர்பு படுத்தி சொல்வதால் முக்கியமானதாக திகழ்கிறது. இந்த கண்மாயில் ஆண்டு முழுவதுமே 2 ஆயிரம் பறவைகள் காணப்படும். வலசை வரக்கூடிய குளிர்காலத்தில் இந்த கண்மாயில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பறவைகளை ஒரே நேரத்தில் பார்க்கலாம்.

இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை நிர்வாகியும், பறவையியல் ஆர்வலருமான ரவீந்திரன் நடராஜனும், அவரது குழுவினரும் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நீர்நிலையில் வாழ்விட பறவைகள், வலசை வரும் பறவையினங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். மொத்தம் 155 பறவையினங்கள் சாமநத்தம் நீர்நிலையை தேடி வந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையை மூத்த இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்களிடம் வழங்கி, அதன் அடிப்படையில் இந்த நீர்நிலையை மதுரையின் முதல் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 530 பறவை இனங்கள் உள்ளன. இதில் காடுகளை தவிர்த்து, மருத நிலத்தில் 200 பறவைகள் வாழுகின்றன. அதில், 150 பறவைகள் ஆண்டுதோறும் இந்த நீர்நிலைக்கு வந்து செல்வது முக்கிய மானது. இதில், 50 சதவீத பறவைகள் வாழ்விட பறவைகளாக இங்கேயே கூடு கட்டி வசிக்கின்றன. இதுபோக 28 சதவீதத்துக்கும் மேற்பட்ட பறவைகள், வலசை காலங்களில் வடதுருவங்களில் இருந்து இடம்பெயர்ந்து உணவு தேவைக்காக இங்கு வந்து செல்கின்றன. 22 சதவீத பறவைகள், மிக மிக அரிதாக இந்த பகுதிக்கு ஒரு சில கால கட்டத்துக்கு வந்து செல்கின்றன. பூ நாரைகள், சங்கு வலை நாரை, நத்தை கொத்தி நாரை, பாம்பு தாரா, கரண்டி வாய் இனம், ரீவர் டர்ன் போன்றவை முக்கியமானவை.

இமயமலையில் இருந்து இடம்பெயரக் கூடிய கழுகினங்களும் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றன. ஐரோப்பா கண்டத்தில் உள்ளான் வகையினங்கள், கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் இருந்து வரக்கூடிய கழுகினங்கள் இங்கு வந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது. அழிவின் தொடக்கத்தில் இருக்கக்கூடிய பறவைகளில் இந்திய பெரும் புள்ளி கழுகு, மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா நாடுகளில் இருந்து வருகின்றன.

இதுபோக உலகத்தில் நீண்ட தூரம் பறந்து போகக் கூடிய அரிவாள் மூக்கன், பட்டை வால் மூக்கன் போன்ற பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன. அதனால், அக்டோபர் முதல் ஏப்ரல் வரை சாமநத்தம் பகுதியையும், அதனை தொடர்ந்துள்ள கரிசல்குளம், அவனியாபுரம், கூத்தியார்குண்டு நீர்நிலைகளிலும் எண்ணற்ற பறவைகள் வந்து செல்கின்றன. மங்கோலியாவில் இருந்து இமயமலை தொடரை தாண்டி கன்னியாகுமரி வரை வரக்கூடிய வரித்தலை வாத்து பறவைகள் இந்த கண்மாயில் தங்கியிருந்து செல்கின்றன. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வலசை வாத்தினங்கள் இந்த கண்மாயில் தங்கியிருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு பிரிந்து செல்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த கண்மாயை சரணாலயமாக அறிவிப்பதால் இங்கு இருக்கக் கூடிய மக்கள், பறவைகள் வாழ்வாதார சூழல் மேம்படும். தற்போது மதுரை மாநகராட்சியின் ஒட்டு மொத்த கழிவு நீரும் அவனியாபுரம் கழிவு நீரேற்று நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு இந்த கண்மாயில் விடப்படு கிறது. விவசாயத்துக்கு விடப்படுவதாக கூறப்படும் இந்த சுத்திரிக்கப்பட்ட கழிவு நீர், அடிக்கடி சுத்திகரிக்கப்படாமலேயே விடப்படுகிறது. அதனால், சாமநத்தம் மட்டுமில்லாது இந்த தண்ணீர் விடப்படும் அவனியாபுரம், வெள்ளக்கல், கரிசல் குளம் நீர்நிலைகளில் துர்நாற்றம் வீசுகிறது.

தற்போது விடப்படும் கழிவுநீரால் இந்த நீர்நிலைகளில் ஏராள மான மரங்கள் பட்டுப் போய் விட்டன. சாமநத்தம் கண் மாயை சரணாலயமாக அறிவித்தால் சூழல் சார்ந்த பொறுப்புணர்வு மேம்படும். நீர்நிலை பராமரிப்பு முறைப்படுத்தப்படும். சீமை கருவேல மரங்கள் இந்த கண்மாயின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இவற்றை அகற்றி விட்டு நாட்டு கருவேல மரங்ளை நட்டால் பறவைகள் கூடு கட்டி வாழ உதவும்.

இந்த மண்ணுக்கேயுரிய மரங்களை நீர்நிலையின் கரையோரங்களில் நட்டால் மக்களுக்கு தீங்கு இல்லாத சூழலை தரும். மேலும் பறவைகள் வந்து வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தும். பறவைகள் சரணாலயமாக அறிவித்தால் மட்டுமே இது நடக்கும். இந்த பகுதி மதுரையின் முக்கிய சுற்றுலாத்தலமாக மாறும். மக்கள் அதிகம் பேர் வந்து செல்வர். பள்ளி, கல்லூரி மாணவர் களை அழைத்துச் சென்று காட்டக் கூடிய இயற்கை சார்ந்த இடமாக மாறும். இவ்வாறு அவர் கூறி னார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE