எட்டிமடை அருகே ரயில்பாதையை யானைகள் அணுகாமல் இருக்க 3.50 கி.மீ-க்கு இரும்பு தடுப்பு அமைக்க ரயில்வே திட்டம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை எட்டிமடை அருகே ரயில் பாதையை யானைகள் அணுகாமல் இருக்க 3.50 கி.மீ. நீளத்துக்கு இரும்பு தடுப்பு அமைக்க ரயில்வே சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

கோவை - பாலக்காடு இடையிலான ரயில் வழித் தடத்தில் கஞ்சிக்கோடு - எட்டிமடை இடையே ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு ரயில் பாதைகள் உள்ளன. ‘ஏ’ லைன் அடர்ந்த வனப்பகுதிக்கு வெளியிலும், ‘பி’ லைன் அடர் வனப்பகுதிக் குள்ளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பாதைகளை யானைகள் கடக்க முற்படும் போது, அவற்றின் மீது ரயில் மோதும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இதனால், யானைகள் உயிரிழந்தும் உள்ளன. இவ்வாறு ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ரயில்வே, வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தண்டவாளத்தை யானைகள் அணுகாத வகையில், எந்தெந்த இடங்களில் தேவை உள்ளதோ அங்கு இருப்பு பாதைகளையே தடுப்பாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வு பணிகளை பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகளுடன் இணைந்து வனத்துறையினர் கடந்த மாதம் மேற்கொண்டனர். அதன்படி, சுமார் 3.50 கி.மீ. நீளத்துக்கு தடுப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “ஏற்கெனவே தனியார் நிறுவனம் சார்பில் அப்பகுதியில் 400 மீட்டருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை யானைகள் தண்டவாளத்தை அணுகாமல் இருக்க பயனுள்ளதாக உள்ளன. எனவே, யானைகள் அடிக்கடி கடக்கும் பகுதிகளில் இதேபோன்று தடுப்புகள் அமைக்குமாறு கோரியிருந்தோம்.

அதை ஏற்று, கோதுமை குடோன் பகுதி முதல் எட்டிமடை தனியார் பல்கலைக்கழக வளாகம் அருகே வரை தடுப்பு அமைக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்கெனவே யானைகள் மீது ரயில் மோதிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அந்த பகுதியில் ஒரு புறம் வனப்பகுதியும், மற்றொரு புறம் விளைநிலங்களும் உள்ளன. எனவே, பயிர்களை உண்ண யானைகள் அந்த பகுதியை அடிக்கடி கடக்கின்றன. தடுப்புகள் அமைக்கப்பட்டால் அங்கு யானைகள் கடப்பது குறையும். டெண்டர் இறுதியான பிறகு, தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE