கடந்தாண்டு நிரம்பி வழிந்த நிலையில் குட்டைபோல் காட்சியளிக்கும் வாணியாறு அணை

By எஸ்.செந்தில்

அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை நீர்மட்டம் குறைந்து குட்டைபோல் காட்சியளிப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணை 65 அடி கொள்ளளவு கொண்டது.

இந்த அணையின் மூலம் பாப்பி ரெட்டிப்பட்டி தாலுகாவில் உள்ள வெங்கட சமுத்திரம், பாப்பி ரெட்டிப்பட்டி, தேவராஜ பாளையம், மெணசி, பூத நத்தம், தென்கரைக்கோட்டை, அலமேலுபுரம், அதிகாரப்பட்டி, பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 17 கிராமங்களில் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதோடு அப்பகுதி செழிப்பாகவும் இருக்கும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியான ஏற்காடு மலைப் பகுதியில் கனமழை பெய்தது.

இதனால் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு கால்வாய் களில் நீர் திறந்து விடப்பட்டது. ஆனால், நிகழாண்டில் தற்போது வரை போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 28 அடியாக இருந்தது.

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 39 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் மிகக் குறைவாக இருப்பதால் அணையின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் பாக்கு, மஞ்சள், கரும்பு, நெல் சாகுபடி செய்துள்ள நிலையில், அதிக மழை இல்லாததாலும், அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளதாலும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மேலும், பயிர் சாகுபடி பரப்பளவும் குறைந்து விவசாய நிலங்கள் தரிசு நிலமாக உள்ளது. பயிர்களை காக்க இனிவரும் நாட்களிலாவது அணைக்கு போதிய நீர் வரும் வகையில் மழை வருமா என எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE