நீலகிரியில் இயற்கை காரணங்களால் புலிகள் இறப்பு: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நீலகிரியில் இயற்கை காரணங்களால் புலிகள் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வனத்துறையின் தலைமை வன உயிரினகாப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: தமிழகத்தில் 2006-ம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின்படி 76 புலிகள் இருந்தன. 2022-ல் எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி தற்போது 306 புலிகளாக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், முதுமலை புலிகள் காப்பகத்தில் 2006-ல் 51 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022-ல் 114 ஆக அதிகரித்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு புலிகள் காப்பகத்திலும் “மேலாண்மை திறன் மதிப்பீடு” செய்து மதிப்பெண் வழங்குகிறது.

அதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு 2022-ம் ஆண்டில், விளைவுப் பிரிவில் 50-க்கு 50 மதிப்பெண்களை பெற்ற ஒரே புலிகள் காப்பகம் முதுமலை புலிகள் காப்பகம் மட்டுமே. அதாவது, வேட்டை தடுப்பு முகாம்களை நிறுவியது, வேட்டை தடுப்பு காவலர்களை ஈடுபடுத்தியதன் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்தியது,

அச்சுறுத்தும் உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காட்டியது போன்ற காரணங்களுக்காக 50-க்கு 50 மதிப்பெண்கள் கிடைத்தன. நீலகிரி பகுதியில் அண்மையில் 10 புலிகள் இறந்தன. அது தொடர்பாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விஞ்ஞானி கே.ரமேஷ்,

இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் மண்டல துணை இயக்குநர் கிருபாசங்கர், சென்னையைச் சேர்ந்த வன விலங்கு ஆய்வாளர் டோக்கி ஆதி மல்லையா ஆகியோர் கொண்ட குழு கடந்த செப். 25 அன்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: பொதுவாக, வயது முதிர்ந்த பெண் புலிகள் ஒரு பிரசவத்தில் 2 முதல் 3 குட்டிகளை (சில சமயங்களில் 5 வரை) பிரசவிக்கும். அதில் 50 சதவீத குட்டிகள் நோய், பட்டினி மற்றும் சிசுக்கொலை போன்ற பல காரணிகளால் இறக்கும். சீகூர் பகுதியில் 2 வார குட்டிகள் இறப்பதற்கு சாத்தியமான காரணம், 2 குட்டிகளின் உடல் நலம் குன்றியதாக இருக்கலாம்.

இது அடுத்தடுத்த பிரசவங்களில் தகுந்த குட்டிகளை வளர்ப்பதற்கான ஆற்றலைச் சேமிப்பதற்காக தாயால் கைவிடப்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் இளைய வயதில் குட்டிகள் பிரசவம் (அனுபவமற்ற தாய்) குட்டிகளை கைவிடப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். சின்ன குன்னூர் பகுதியில் உயிரிழந்த 4 குட்டிகள், 2 மாதங்களே ஆனவை என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த குட்டிகள் இறப்பதற்கு 2 முக்கிய காரணங்களை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த வயதில் குட்டிகள் தாயால் கொல்லப்படும் உணவை உண்ணத் தொடங்குகின்றன. அதனால் குட்டிகளை வளர்க்க தாய் அடிக்கடி இரையை கொல்ல வேண்டும். பின்னர் இரை அடர்த்தி குறைவாக இருந்தால் தாய் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

இது நீண்ட காலத்திற்கு குட்டிகளை கவனிக்கப்படாமல் இருப்பதற்கு வழி வகுக்கிறது. மேலும் குட்டிகள் ஈன்ற இடம் பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்டால், தாய் குட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றும். குறிப்பாக இந்த இடம் குறிப்பிடத்தக்க மனித இடையூறுகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, இந்த குட்டிகள் நீண்டகாலத்துக்கு தாயால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கலாம். எனவே, நீண்ட பட்டினியால் குட்டிகள் இறந்திருக்கலாம்.

நடுவட்டம் மற்றும் கார்குடி ஆகிய 2 இடங்களில் புலிகள் இறந்தது உட்பூசல் சண்டை காரணமாகும். அவலாஞ்சி பகுதியில் 2 புலிகள் விஷம் கலந்த, இறந்த மாட்டின் உணவை சாப்பிட்டதால் இறந்தது என தெளிவாகத் தெரிகிறது. இறந்த மாட்டில் விஷம் வைத்த நபர் ஏற்கெனவே வன துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது முற்றிலும் பழிவாங்கும் கொலை என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது.

இறந்த புலிக்குட்டிகளின் தாய்களை அடையாளம் காண அப்பகுதிகளில் புலிகளின் எச்ச மாதிரிகளை சேகரித்து, டிஎன்ஏ பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீலகிரியில் 10 புலிகள் உயிரிழந்தது பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேட்டை தடுப்பு காவலர்களை வன காவலர்களாக அரசு முறைப்படுத்தியுள்ளது.

நீலகிரி கோட்டம் மற்றும் தாங்கல் கோட்ட எல்லையில் உள்ள முதுமலை தாங்கல் பகுதிகளில் கூடுதலாக 3 வேட்டை தடுப்பு முகாம்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE