தமிழகத்தில் முதன்முதலாக நீலகிரி வரையாடுகள் தினம் இன்று கடைபிடிப்பு

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: வரையாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதிய வனவிலங்கு பாதுகாவலரான ஈ.ஆர்.சி. தாவீதாரின் பிறந்தநாள், நீலகிரி வரையாடுகள் தினமாக இன்று முதல் கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பிறந்த டாக்டர் ஈ.ஆர்.சி.தாவீதார், 1960-களில் நீலகிரி வரையாடுகள் பற்றிய ஆய்வுகளில் முன்னோடியாக விளங்கியவர். அவர் 1963-ம் ஆண்டு நீலகிரி நிலப்பரப்பில் நீலகிரி வரையாடுகளின் முதல் கணக்கெடுப்பை மேற்கொண்டார். நீலகிரியில் 38 விலங்குகளைக் கொண்ட மிகப்பெரிய மந்தை உட்பட சுமார் 400 வரையாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.

1975-ம் ஆண்டில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் நீலகிரி வரையாடுகள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டு, காடுகளில் சுமார் 2200 வரையாடுகள் உள்ளதாக அவர் மதிப்பிட்டார். நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு பற்றி விஸ்பர்ஸ் ஃப்ரம் தி வைல்ட், தி சீட்டல் வாக் - லிவிங் இன் தி ஜங்கிள், த தோடாஸ் அண்ட் தி தஹ்ர் போன்ற பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார்.

இது தோடா பழங்குடியின மக்களுக்கும், நீலகிரி வரையாட்டுக்கும் இடையிலான தொடர்பை சித்தரிக்கிறது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராகவும், வனவிலங்கு பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட புகைப்படக் கலைஞராகவும் டாக்டர் ஈ.ஆர்.சி.தாவீதார் இருந்தார். நீலகிரி நிலப்பரப்பு மீது அவர் கொண்டிருந்த காதல், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞராக மாற்றியது.

ஈ.ஆர்.சி. தாவீதார்.

1981-ல் ஓய்வு பெற்ற பின்னர் வன விலங்குகளை பாதுகாப்பதற்காக தனது முழு வாழ்க்கையையும் தாவீதார் அர்ப்பணித்தார். இவருடன், ஜார்ஜ் தாவீதார் (உயிரியலாளர்) என்பவரும் இணைந்து வரையாடுகள் பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டனர். ஏப்ரல் 2010-ல் புதுச்சேரியில் தாவீதார் காலமானார். இவரின் பிறந்த நாளான இன்று, நீலகிரி வரையாடுகள் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் மேற்கு பகுதியில் உள்ள ஓரிடவாழ் பாலூட்டியாகும். வரையாடுகள், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டுமே காணப்படுகின்றன. தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை, களக்காடு-முண்டந்துறை, வில்லிபுத்தூர்-மேகமலை ஆகிய புலிகள் காப்பகங்கள், சிறுவாணி மலைகளில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் காணப்படுகின்றன.

‘மலைப் பாதுகாவலர்கள்’ என்று அழைக்கப்படும் வரையாடுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துவதிலும், மனித குலத்தின் உயிர்வாழ்வுக்கான முக்கிய தனித்துவமான சோலை-புல்வெளி சுற்றுச்சூழலைப் பராமரிப்பதிலும் உதவுகின்றன.

கடந்த 2023-ம் ஆண்டுமுதல் அக்டோபர் 7-ம் தேதி வனவிலங்கு பாதுகாவலரான ஈ.ஆர்.சி. தாவீதாரின் பிறந்தநாள் நீலகிரி வரையாடுகள் தினமாக கொண்டாடப்படுமென தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதன்முதலாக வரை யாடுகள் தினம் கடைபிடிக்கப் படுகிறது. நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க ‘நீலகிரி வரையாடுகள் திட்டம்’ என்ற ஐந்தாண்டு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE