குமரியில் கன மழையால் 800 குளங்கள் நிரம்பின

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 800-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பின. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 33 அடியாக உயர்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 4 நாட்கள் தொடர்ச்சியாக கனமழை கொட்டியது. மழையால் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணை, நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன.

தற்போது மழை நின்றுள்ள நிலையில் மலையோரப் பகுதிகளில் மிதமான சாரல் பொழிந்து வருகிறது. அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 47 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது.

மழையால் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தோவாளை உட்பட பல பகுதிகளில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைவிட்டு வயல்களிலேயே முளைத்து கிடக்கிறது. தற்போது வயல்களை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 33 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1,432 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 282 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61 அடியை எட்டியது. அணைக்கு 1,353 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

முக்கடல் அணையின் நீர்மட்டம் 14.10 அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்கள் மற்றும் கோயில் தெப்பக்குளங்கள், தனியார் குளங்கள் என 800-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன. 1,000-க்கும் மேற்பட்ட குளங்கள் பாதி நிரம்பியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE