உடுமலை: வேளாண்மையில் பல்லுயிர் பெருக்கத்துக்கு துணை நிற்கும் உயிர்வேலி அமைப்பை மீண்டும் விவசாயிகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
உடுமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் தென்னை, வாழை, கரும்பு, பாக்கு, காய்கறி, பயறு வகை பயிர்கள் என பல வகையான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலையை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி, விவசாய நிலப்பரப்பில் கடந்த சில ஆண்டுகளாக மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து, பயிரை அழித்து வருகின்றன. அதே அளவில் காட்டு பன்றிகளின் எண்ணிக்கையும் பலமடங்காக உயர்ந்துள்ளது. இவற்றால் வேளாண் பயிர்கள் அழிவதை தடுக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க முடியாமல் வனத்துறையும் திணறி வருகிறது.
உடுமலையில் ‘காட்டு பன்றியே போயிடு' என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கொண்ட வாட்ஸ் அப் குழு, கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. காட்டு பன்றியால் ஏற்படும் இழப்பை தடுக்கவும், அவற்றை சுட்டு அழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
» தர்மசாலாவில் ஜல்சக்தி அலுவலக சுவரில் தீட்டப்பட்ட காலிஸ்தான் ஆதரவு கோஷம்
» விரைவில் மினி விளையாட்டு அரங்கம்: புதுச்சேரி அண்ணா திடலில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
காலப்போக்கில் நவீன விவசாயத்தை கடைபிடித்ததும், பாரம்பரிய வேளாண் முறைகளை விவசாயிகள் கடைபிடிக்க தவறியதுமே, இதுபோன்ற நிலைக்கு காரணம் என சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இட்டேரிகளால் கிராமங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடி பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே, இட்டேரி அல்லது வண்டிப்பாதை என்று அழைக்கப்படும். இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை "Itteri eco-system" என்று அழைக்கலாம்.
கள்ளி வகைகள், கிளுவை போன்ற முள்ளுச்செடிகளுக்கு இடையே வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, பூவரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் உள்ளிட்ட செடி வகைகள், பிரண்டை, கோவை ஆகிய கொடி வகைகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும். இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன.
கரையான் புற்றுகள், எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும், ஈரமும், இலைக் குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால், எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.
இவற்றை உணவாக உட்கொள்ள வண்டுகள், நண்டுகள், பாப்பிராண்டிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அலுங்குகள், ஆமைகள் இப்படி பல உயிர்களும், இவற்றை உணவாக கொள்ள பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன. மனிதர்களுக்கு கோவைப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம் ஆகிய சுவையான கனி வகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும், மூலிகைகளும் கிடைத்தன.
இன்று பணமழை பொழியும் கண்வலிப் பூ காய்கள், வேலியில் தான் ஆங்காங்கு படர்ந்திருக்கும். இங்கே பலருக்கும் பள்ளி பருவத்தில் விடுமுறை நாட்களில் ஓணானை கண்டால் ஓட, ஓட விரட்டு, பாப்பிராண்டியை கண்டால் பாவம்னு விடு என்று ஓணான் வேட்டைக்குப் போன அனுபவம் நிச்சயம் இருக்கும். இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓணான்கள், தவளைகள் உள்ளிட்டவை, பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன.
பாம்புகள், ஆந்தைகள் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப் பூனைகளும் கட்டுப்படுத்தின.
ஆனால், இன்று விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியபோது, இந்த உயிர் வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகளானபோது இட்டேரிகள் மறைந்தன. கொஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு, உயிர் வேலியை அழித்து காக்கா, குருவிகூட கூடு கட்டாத கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. இதனால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ இடமின்றி போனது. அதில் முக்கியமானது குள்ளநரிகள். இவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள்.
மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும். இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு இணைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக காணப்படுகின்றன. இதன் விளைவாக, மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவிட்டன. நாம் விதைத்ததைத் தான் அறுவடை செய்கிறோம். பள்ளியில் குழந்தைகளுக்கு பல்லுயிரியல் குறித்து பாடம் எடுக்கிறோம்.
ஆனால், பள்ளிக்கு செல்லாத நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பல்லுயிர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் உயிர்வேலிகள் அமைத்தனர் என்பதை சிந்திக்க வேண்டும். மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
23 days ago
சுற்றுச்சூழல்
26 days ago