பெருகும் ஆக்கிரமிப்புகள்... பெருக்கெடுக்கும் கழிவுநீர்... - பொலிவை இழக்கும் செம்பாக்கம் ஏரி!

By கி.கணேஷ்

சென்னை: நிலத்தடி நீர் சேர்மானப் பகுதியாக இருந்த செம்பாக்கம் ஏரி, கழிவுநீர் நிறைந்து மாசுபட்டுள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், சிட்லபாக்கம் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது செம்பாக்கம் ஏரி. ஒருகாலத்தில் 150 ஏக்கருக்கு மேல் இருந்த இந்த ஏரியின்பரப்பு தற்போது ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி100 ஏக்கருக்குள் சுருங்கிவிட்டது. சுற்றிலும் குடியிருப்புகளை கொண்ட இந்த ஏரிக்கு, குரோம்பேட்டை பகுதியில் உள்ள பச்சைமலை, சிட்லபாக்கம் ஏரி, அஸ்தினாபுரம், சேலையூர், கிழக்கு தாம்பரம், ராஜகீழ்ப்பாக்கம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நீரே ஆதாரமாக உள்ளது. முன்பெல்லாம், மழைநீர் பச்சைமலையில் இருந்து ஜிஎஸ்டி சாலையை கடந்து வந்து, சிட்லபாக்கம் வழியாக ஏரியை வந்தடையும். இதுபோல பல்வேறு பகுதிகளிலும் இருந்துஏரிக்கு நேரடியாக கால்வாய்கள் இருந்தன. நீரும் சுத்தமாக இருந்தது.

ஆனால், சமீபத்தில் சிட்லபாக்கம் பாபு தெருவில் அமைக்கப்பட்ட கால்வாய்கூட கழிவுநீர் பாதையாக மாறிவிட்டது. ஏரியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள், சுற்றிலும் உள்ள சில குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீர் முழுமையாக ஏரியில் வந்து கலக்கிறது. இதனால், ஏரி தற்போது கழிவுநீரால் மாசடைந்து வருகிறது.

பல்லாவரம் நகராட்சியாக இருந்தபோது, சிட்லபாக்கம் மற்றும் பல்லாவரத்தின் எல்லையாக இருந்த அரிதாஸ்புரம் பிரதான சாலை வரை பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. ஆனால், சிட்லபாக்கம் உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் இதுவரை பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை. இதனால், சிட்லபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்துகழிவுநீர் செம்பாக்கம் ஏரிக்கு வந்துவிடுகிறது.

குறிப்பாக, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 8 மில்லியன் லிட்டர் கழிவுநீர், செம்பாக்கம் ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால்ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

வெங்கட்ராமன்

இதுகுறித்து இப்பகுதியினர் கூறியதாவது: ஏரி அருகே உள்ள சர்வமங்களா நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் வெங்கட்ராமன்: இப்பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறேன். முன்பு செம்பாக்கம் ஏரி மிகவும் சுத்தமாக இருந்தது. தற்போது சிட்லபாக்கம், தாம்பரம் உள்ளிட்ட 22 பகுதிகளில் இருந்து மழைநீர் கால்வாய்கள் மூலம் வரும் கழிவுநீர், செம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.

தவிர, ஆக்கிரமிப்புகளால் ஏரி 150 ஏக்கரில் இருந்து 80 ஏக்கராக சுருங்கிவிட்டது. ஏரியை சுத்தம் செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் மனுக்கள் தரப்பட்டன. ஆனால், இதுவரை ஏரி அளவீடும் செய்யப்படவில்லை. சுத்தமும் செய்யப்படவில்லை, கழிவுநீரும் சுத்திகரிக்கப்படவில்லை.

தனியார் நிறுவனம் ஒன்று, ஏரியை சுத்தம் செய்யும் பணியை தொடங்கியது. 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை. பச்சைமலையில் இருந்து சிட்லபாக்கம் ஏரி வழியாக, செம்பாக்கத்துக்கு உபரிநீர் செல்லும் பாதையும் தடைபட்டுள்ளது. எனவே, ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மட்டுமின்றி, ஏரிக்கு வரும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி ஏரியை சுத்தப்படுத்த வேண்டும்.

சிட்லபாக்கத்தை சேர்ந்த வசந்தா ஸ்ரீதர்: செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. இதுதவிர, ஏரியில் கால்நடைகள் அதிக அளவில் சென்று மேய்கின்றன. அவற்றின் கழிவுகளாலும் ஏரி மாசு அடைகிறது. சிட்லபாக்கம் ஏரிபோல, செம்பாக்கம் ஏரியையும் ஆழப்படுத்தி, தூய்மையான நீர் கிடைக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதவிர, ஏரியின் மேற்கு பகுதியில் கரைகள் சரியாக அமைக்கப்படாததால், அப்பகுதியில் குப்பைகள் அதிகம் கொட்டப்படுவதாகவும், ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க வந்த பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதவிர, ஏரியின் வடக்கு பகுதியில் திருவிக நகர்பின்புறம் குப்பை பிரிக்கும் கிடங்கு ஒன்றைதாம்பரம் மாநகராட்சி தற்போது அமைத்துள்ளது. இதனாலும், ஏரியின் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எம்.ரவி

இதுகுறித்து சர்வமங்களா நகர் குடியிருப்போர் சங்கத்தின் செயலாளர் எம்.ரவி கூறியதாவது: இந்த ஏரியின் உபரிநீர், கலங்கல் வழியாக வெளியேறி, நன்மங்கலம் சென்று, அங்கிருந்துபள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக கடலை அடையும். ஏரியை பாழ்படுத்தும் வகையில் முன்புகுப்பை கொட்டும் கிடங்கு இருந்தது. நாங்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த கிடங்கு வேங்கடமங்கலத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது இங்கு குப்பை பிரிக்கும் அலகை அமைத்துள்ளனர். இதை அப்புறப்படுத்தவும் கோரியுள்ளோம்.

மேலும், அஸ்தினாபுரம் பகுதியில் ஏரியின் ஒரு புறத்தில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதுதொடர்பாக கடந்தநவம்பர் மாதம் அரசு சார்பில் நோட்டீஸ் அளித்ததோடு சரி, அதன்பிறகு, ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, சிட்லபாக்கம் பகுதியிலும் ஒருசில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக எம்எல்ஏ வந்து அளந்து பார்த்து, அகற்றுமாறு தெரிவித்துள்ளார். இதுவரை அகற்றப்படவில்லை.

பாபு தெருவில் இருந்து வரும் கால்வாய், ஏரியில் சேரும் இடத்தில் ரூ.25 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. அதுதற்போது செயல்படவில்லை. எனவே, ஏரிக்குள் கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஏரியை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழைய நிலைக்கு ஏரியை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘செம்பாக்கம் ஏரிக்கு கடப்பேரி ஏரியில் இருந்து மழைநீர் கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இதில், பல்வேறு பகுதிகளில் வீடுகளில் பயன்படுத்தப்படும் நீரும் சேர்ந்து கலந்துவருகிறது.

நீர்வளத் துறை சார்பில் ஏரி நீரை சுத்தப்படுத்த கேர் எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

பம்மல், அனகாபுத்தூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டபணி தற்போது நடந்து வருகிறது. மற்ற பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் செயல்படுத்தப்பட உள்ளது.

இது மட்டுமின்றி, விரைவில் மாநகராட்சியுடன் இணைய உள்ள 15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து மொத்தமாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் மட்டுமே ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும்’’ என்றனர்.

என்னதான் செய்யலாம்? - செம்பாக்கம் ஏரியில் கழிவுநீரை அகற்றி, ஏரியை சுத்தப்படுத்துவது குறித்து சிட்லபாக்கத்தை சேர்ந்த பொறியாளர் தயானந்த் கிருஷ்ணன் கூறும்போது, ‘‘பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் கலப்பதுதான், செம்பாக்கம் ஏரி மாசுபடுவதற்கு முக்கிய காரணம். முதலில் இதை தடுக்க வேண்டும்.

செம்பாக்கம் ஏரியின் புறக்கரையை ஒட்டி கழிவுநீர் தடுப்பு கால்வாய் அமைத்து, கழிவுநீரை கிணற்றில் சேமித்து, அருகில் உள்ளகழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

ஏரியின் உள்வாய்களில் தடுப்பு கதவுகள் அமைக்க வேண்டும். இவற்றை செய்தால் ஏரி மாசுபடுவதை தடுக்கலாம். மழை காலங்களில் மட்டும் ஏரி உள்வாய் தடுப்பு கதவுகளை திறப்பதால் மழைநீர் மட்டும் ஏரியில் சேமிக்கப்படும். இதனால் நிலத்தடி நீர் செறிவூட்டல் மூலம் அருகில் உள்ள வீடுகள் பயன்பெறும்’’ என்றார்.

15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து மொத்தமாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் மட்டுமே ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும்’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

மேலும்