சென்னை: சென்னை மாநகரில் தற்போதுள்ள 80 லட்சம் மக்கள்தொகைக்கு நாளொன்றுக்கு 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் குளங்கள் இருந்தாலும், மாநகரின் குடிநீர் தேவையை அவை துளி கூட பூர்த்தி செய்வதில்லை.
காஞ்சி மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திராவில் இருந்து வரும் நீரை தேக்கி வைக்கும் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரி, பூண்டி மற்றும் புழல் ஏரிகள், கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி போன்றவையும், மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் தான் மாநகரின் தண்ணீர் தாகத்தை போக்கி வருகின்றன.
மாநகரில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுநீர் கலப்பால் மாசடைந்து கிடக்கின்றன. அவ்வாறு மாசடைந்துள்ள ஏரிகளில் மணலி - மாத்தூர் ஏரியும் ஒன்று.
இந்த ஏரி மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி, மணலி - மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரி, இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த ஏரியின் குறுக்கே சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரட்டை ஏரியாக இருந்து வருகிறது.
வடக்கில் உள்ள ஏரி 62 ஏக்கர் பரப்பளவும், தெற்கில் உள்ள ஏரி 145 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. வடக்கில் உள்ள ஏரியில் 50 சதவீதபகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும், தெற்கில் உள்ள ஏரியும் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசு துறைகளின் கண்காணிப்புகள், நடவடிக்கைகள் ஏதும் இன்றி, தடையின்றி சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடப்பட்டு மாசடைந்தும் காணப்படுகிறது. ஏரிக் கரையோரத்தில் இறப்பு காரிய சடங்குகள் நடத்தி, அதில் பயன்படுத்தப்படும் பொருட்களும் குப்பையாக கொட்டப்பட்டுள்ளன. வீட்டுகுப்பையும் அங்கு கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ஏரி கடுமையாக மாசடைந்து காணப்படுகிறது.
இதுதொடர்பாக மாத்தூர் எம்எம்டிஏ மக்கள் நலச் சங்க செயலாளர் ஆர்.எஸ்.பாபு கூறியதாவது: இந்த ஏரியில் பல ஆண்டுகளாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடப்பட்டு வருகிறது. குப்பையும் கொட்டப்பட்டு வருகிறது. இரு ஏரிகளிலும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளன. எப்போதும் துர்நாற்றம் வீசி வருகிறது. எப்போதாவது இயந்திரங்களைக் கொண்டு தூர் வாரப்படும். அந்த இயந்திரமும் பிரதானமாக உள்ள செடிகளையே அகற்றுகிறது. கரையோரங்களில் உள்ள செடிகளையும் முற்றாக அகற்றுவதில்லை.
இதனால் மிக விரைவாக செடிகள் மீண்டும் வளர்ந்து ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்கின்றன. இதனால் ஏரி நீரின்தரம் கெட்டுப்போய், நிலத்தடி நீரும் நாசமாகிறது. ஆகாயத் தாமரை செடிகளால்கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து, அவற்றின் தொல்லையும் அதிகமாகிவிடுகிறது.
மாசடைந்த இந்த ஏரிகளை சீரமைத்து நந்தவனமாக மாற்றக்கோரி மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், வருவாய்த் துறை, கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் போன்றவற்றுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மணலி -மாத்தூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி குடியிருப்போர், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நலச்சங்க தலைவர் எம்.ராஜராஜன் கூறும்போது, "இந்த ஏரியின் அருகில் உள்ள ஆவின் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், ஏரியில் விடப்படுகிறது. இந்த ஏரியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்தும் கழிவுநீர் விடப்படுகிறது. இதனால் மாசுபட்டுள்ள இந்த ஏரியை சீரமைக்க வேண்டும். ஏரியை தூர் வாரி, ஆழப்படுத்தி நீர் கொள்திறனை அதிகரிக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது: இந்த இரு ஏரிகள், முன் நுழைவு அனுமதி அடிப்படையில் வருவாய்த் துறை மூலமாக இப்பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டது. இதில் தெற்கில் உள்ள ஏரியில் தேங்கியுள்ள நீரை எடுத்து தான், பல்கலைக்கழகம் வளர்க்கும் கால்நடைகளுக்கான தீவனம் வளர்க்கப்பட்டு வருகிறது. இவ்விரு ஏரிகளையும் பல்கலைக்கழக சொத்தாக மாற்ற கருத்துரு அனுப்பப்பட்டு, தற்போது மாதவரம் தாலுகா அலுவலகத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பெயர் மாற்றிய பிறகு, வடக்கில் உள்ள ஏரியை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து பராமரிக்க இருக்கிறோம். தெற்கில் உள்ள ஏரியை பல்கலைக்கழகமே பராமரிக்கும். கழிவுநீர் விடுவது, குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி, குடிநீர் வாரியத்தின் உதவியை கோர இருக்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மழைநீர் வடிகால் வழியாக ஏரியில் கழிவுநீர் விடப்படுவதை தடுப்பது, ஏரியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் பொறுப்பு மாநகராட்சியுடையது. இதைத் தடுக்கவும், ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவும், ஏரியை மேம்படுத்தவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டபோது, யாரும் பதிலளிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
10 days ago