எங்கும் பிளாஸ்டிக்... எதிலும் பிளாஸ்டிக்... - தென்காசியில் காற்றில் பறந்த அரசின் உத்தரவு!

By செய்திப்பிரிவு

தென்காசி: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 1.1.2019 முதல் அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்த உத்தரவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்ட்து.

உணவுப் பொருட்களுக்கு உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் பைகள், கொடிகள், உணவு அருந்தும் மேஜையில் விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது, தீவிர சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் காலப்போக்கில் இந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருகிறது.

சாலைகளிலும், குப்பை கிடங்குகளிலும், நீர்நிலைகளிலும், வயல்வெளிகளிலும் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. இவை மண்ணை மலடாக்கி வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் அதில் இருந்து எழும் புகை சுற்றுச்சூழலை பாதிக்கிறது. பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தென்காசியில் உள்ள சீவலப்பேரி குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பாவூர்சத்திரம் பழைய சந்தை அருகே சாலையோரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

தென்காசியில் உள்ள சீவலப்பேரி குளத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்.

பல்வேறு கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மதுக்கடைகள் அருகில் உள்ள மதுக்கூடங்களில் பிளாஸ்டிக் குவளைகள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான மதுபான கடைகள் வயல்வெளியை ஒட்டியே உள்ளன. மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் குவளைகளை வயல்வெளிகளில் வீசிச் செல்கின்றனர். இவை மண்ணில் தேங்கி வயல்வெளியை மலடாக்குகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை உத்தரவை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து புளியங்குடியைச் சேர்ந்த வாசகர் ஆதிகா என்பவர் ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசும்போது, “தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE