குப்பையாகிப்போன குப்பைத் தொட்டிகள்: கோவை வீதியெங்கும் கழிவுகள் சிதறி கிடப்பதால் சுகாதார சீர்கேடு

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை மாநகரில் தினமும் சராசரியாக 1,100 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்பட்டு, வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு 650 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

இங்கு கொட்டப்படும் குப்பை மற்றும் வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள உரம் தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் குப்பை ஆகியவை தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை உரமாக தயாரிக்கப்பட்டு, மக்காத குப்பை பயோ மைனிங் முறையில் அழிக்கப்படுகிறது.

குப்பை சேகரிப்புக்காக மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில், சாலையோரங்களில் அரை டன், ஒரு டன், 2 டன் என வெவ்வேறு கொள்ளளவுகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல தொட்டிகள் உடைந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்செந்தில் குமார் கூறியதாவது: வீடு வீடாகச்சென்று தரம் பிரித்து குப்பை சேகரிக்கும்பணி முழுமையாக மேற்கொள்ளப்படுவதில்லை. பல்வேறு இடங்களில் தினசரி குப்பை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் சரிவர வருவதில்லை. இதுபோன்ற காரணங்களால் மக்கள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில்தான் குப்பையை கொட்டுகின்றனர்.

பல்வேறு இடங்களில் குப்பைத் தொட்டிகளின் மேல் பகுதி மூடி இல்லாமலும், கீழ் பகுதி மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் உடைந்த நிலையிலும் காணப்படுகின்றன. பீளமேடு, ஆவாரம்பாளையம், காந்திபுரம், சிங்காநல்லூர், உடையாம்பாளையம், கணபதி, நவ இந்தியா, பீளமேடு புதூர், ரத்தினபுரி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் இதே நிலை தான் காணப்படுகிறது.

இதனால் குப்பை சாலை முழுவதும் பரவிக் காணப்படுகிறது. காற்றின் வேகத்துக்கு குப்பை பறந்து வாகனங்களில் செல்வோர், வீடுகள், கடைகளின் மீது விழுகிறது. குப்பை படர்ந்து காணப்படுவதால் அந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது.

கோவை புலியகுளத்தில் குப்பை நிரம்பிக் காணப்
படும் தொட்டி.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நான்கு நாட்களுக்கு ஒருமுறை, சில இடங்களில் ஒரு வாரத்துக்கு ஒருமுறை என குப்பை அகற்றப்படுகிறது. சில இடங்களில் குறுகிய சாலையில் பெரிய குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கும். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பழுதடைந்த குப்பைத் தொட்டியை உடனடியாக மாநகராட்சி மாற்றியமைக்க வேண்டும்.

குப்பையை தினமும் அகற்றவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் குப்பைத் தொட்டியை வைக்கவும் மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,‘‘மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீடு வீடாகச் சென்று தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சேதமடைந்த குப்பைத் தொட்டிகள், அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன’’என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE