கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்துக்குள் உள்ள கிராமங்களில் நுழைந்தால் திரும்பின பக்கமெல்லாம் கறிவேப்பிலைச் செடிகள் பூத்துக் குலுங்குவதையும், அதன் கமகம மணத்தையும் வேறு எங்கும் இல்லாத வகையில் உணர்ந்து ரசிக்கலாம்.
வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம்… என பல ரகக் கறிவேப்பிலைகளும் பெல்லாதி, சிக்காராம்பாளையம், மருதூர், தேக்கம்பட்டி, ஜடையம்பாளையம், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் எனப் பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விரவிக் கிடக்கிறது கறிவேப்பிலைக் காடு. அந்த அளவுக்கு இங்கே கறிவேப்பிலை விவசாயம் செழிக்க 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய வறட்சிதான் காரணம் என்கிறார் புங்கம்பாளையத்தைச் சேர்ந்த பி.எஸ். பழனிசாமி.
09chnvk_palanisamy.jpg பழனிசாமி rightஇவர் தன் தோட்டத்தில் ஒன்றரை ஏக்கரில் கறிவேப்பிலையைப் பயிரிட்டிருக்கிறார். இந்த நிலத்தில் மட்டும் தொடர்ந்து 15 ஆண்டுகாலமாக கறிவேப்பிலை விவசாயமே நடந்துவருகிறது என்கிறார். “என் நிலத்தில் செங்காம்புக் கறிவேப்பிலைதான் போட்டிருக்கேன். இங்கே 90 சதவீதம் பேர் அதைத்தான் விளைவிக்கிறாங்க. அதுக்கு எப்பவும் மார்க்கெட் இருக்கு. அதன் மணமும் குணமும் தனி!” என்று குறிப்பிட்டவர் , கறிவேப்பிலை விவசாயத்துக்கு வரவேற்பு தந்த வறட்சி பற்றி விளக்கினார்.
20 வருடங்களுக்கு வருமானம்
“ஒரு காலத்துல இந்தப் பக்கம், கரும்பு, வாழைன்னு பயிரிட்டிருந்தாங்க. 30 வருஷத்துக்கு முந்தி கடுமையான வறட்சி. விவசாயிகள் எல்லாம் கடுமையா பாதிக்கப்பட்டு என்ன செய்யறதுன்னே புரியாமத் திண்டாடினாங்க. அப்ப கறிவேப்பிலை விவசாயத்துல ஈடுபட்டிருந்தவங்களுக்கு மட்டும் பெரிசா பாதிப்பில்லை. கறிவேப்பிலைச் செடிகள், வறட்சியிலும், கொம்பு காய்ஞ்சாலும் துளிர்விட்டன.
கொஞ்சமா மழை பெய்ஞ்சாலும் உடனே துளிர்த்து மகசூலும் கொடுத்தது. அதைப் பார்த்துத்தான் இங்குள்ளவங்க தங்களோட நிலத்துல ஒரு பகுதியைக் கறிவேப்பிலைக்குன்னே ஒதுக்கினாங்க. இப்பப் பார்த்தீங்கன்னா இந்தச் சுத்துவட்டாரத்துல 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள்ல எந்த விவசாயியோட நிலத்திலும் ஏதாவது ஒரு மூலையில கறிவேப்பிலைப் பயிர் இல்லாமல் இருக்காது.
கறிவேப்பிலைக்கு 15 நாளைக்கு ஒரு வாட்டி தண்ணீர் விட்டா போதும். அதுவும் தேங்கி நிற்கிற மாதிரி விட வேண்டியதில்லை. வருஷத்துக்கு ஒரு தடவை எரு இட்டா போதும். களை, மருந்து சரியா கொடுத்து செடிகளுக்கு இடையில் வருஷத்துக்கு 4 உழவோட்டினால், 3 மாசத்துக்கு ஒரு போகம் இலை பறிக்கலாம். நல்லா பராமரிச்சா ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 5 டன்கூட கிடைக்கிறது” என்பவர், கறிவேப்பிலைச் செடிகளைப் பராமரிக்கக் கூலி உட்பட ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம்வரை மட்டுமே செலவாகிறது என்கிறார்.
“வருஷத்துக்கு நாலு போகம் பறிச்சா குறைந்தபட்சம் 15 முதல் 20 டன்வரை எடுக்க முடிகிறது. ஒரு டன் சுமார் ரூ. 4 ஆயிரம்வரை விலைபோகிறது. ஒரு சமயம் டன் ரூ. 8 ஆயிரம்கூட எட்டிப் பிடித்தது. ஒரே செடியை 20 வருஷம்கூட வெச்சிருக்கலாம். அதுக்கு மேல வெச்சிருந்தா பெரிசா மகசூல் கிடைக்காது. அப்போது புதுசா நாற்று வாங்கி நடவேண்டியதுதான்!” என்கிறார்.
மணத்துக்கு மவுசு
வெள்ளியங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி கூறும்போது, “இங்கிருந்து கோவை, பொள்ளாச்சி, சென்னைக்கு மட்டுமின்றி கேரள மாநிலத்தில் பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு எனப் பல நகரங்களுக்கும் கறிவேப்பிலை செல்கிறது. சேலம் ஆத்தூர் பகுதிகளிலும் கறிவேப்பிலை விவசாயம் இதேபோல் நடக்கிறது. கோவை மாவட்டம் தவிர்த்து, வேறெங்கும் கறிவேப்பிலை விவசாயம் இந்த அளவுக்கு நடப்பதாகத் தெரியவில்லை.
09chnvk_murthy.jpg மூர்த்தி rightசென்னைக்கு ஆந்திராவிலிருந்து கறிவேப்பிலை வந்தாலும், காரமடையிலிருந்து செல்வதுபோல் இலை மணப்பதில்லை. எனவே, சென்னையில் சமீபகாலமாக காரமடை கறிவேப்பிலைக்கு மவுசு கூடிவருகிறது. அதற்கேற்ப இங்கே கறிவேப்பிலை பயிர் செய்பவர்களின் எண்ணிக்கையும், அதற்கான நிலப்பரப்பும் கூடிக்கொண்டிருக்கிறது!” என்கிறார்.
கறிவேப்பிலை போலத் தழைக்கட்டும் விவசாயிகள் வாழ்க்கை!
விவசாயி பழனிச்சாமி தொடர்புக்கு:9677468145
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
6 hours ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
21 days ago