குருமலை காப்பு காடு... புள்ளி மான்களின் புகலிடம்!

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே குருமலை காப்பு காடு பகுதி அமைந்துள்ளது.

சுமார் 1,254 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலைப் பகுதியில் அரியவகை மூலிகை செடிகள், புள்ளி மான்கள், கடமான், கீரி, புணுகு பூனை, நரி, முயல், கவுதாரி, மயில்கள் அதிகமாக காணப்படுகின்றன. பறவையினங்கள், ஊர்வன இனங்கள் மிகுந்த வனப்பகுதியாகவும் உள்ளது. இந்த குருமலை வனப்பகுதி கடந்த 1980-ம் ஆண்டு காப்பு காடு பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இங்கு நல்ல தண்ணீர் சுனையும் உள்ளது. இந்த காப்பு காடு பகுதிக்கு காணும் பொங்கலின் போது மக்கள் அதிகம் வருவது வழக்கம். மற்ற நேரங்களில் வனத்துறை அனுமதி பெற்ற பின்னர் தான் உள்ளே செல்ல முடியும். காப்பு காடு பகுதி முழுவதும் கோவில்பட்டி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கிருந்து வழி தவறி வரும் மான்கள் வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மான்கள் சேதப்படுத்தி விடுகின்றன. குருமலை காப்புகாடு பகுதியை வன உயிரின சரணாலயமாகவோ அல்லது புள்ளி மான் சரணாலயமாகவோ அறிவித்து, அறிவியல் முறையில் மேலாண்மை செய்து வன விலங்குகளையும், விவசாயிகளையும் காக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மதிமுக நகரச் செயலாளர் எஸ்.பால்ராஜ் கூறும்போது, “புள்ளி மான்கள் 14 மாதங்களில் 2 குட்டிகளை ஈன்றுவிடும். இதனால் தற்போது புள்ளி மான்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப அதன் வாழ்விடத்தை சரிவர மேலாண்மை செய்யாததால் புள்ளி மான்கள், மயில்கள் உள்ளிட்டவை குடிநீர், உணவு தேவைக்காக வெளியேறி பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

குருமலை காப்பு காடு பகுதியை சரணாலயமாக அறிவித்தால் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு மான்களுக்கு தேவையான தண்ணீர், உணவு மற்றும் வாழ்விடம் உருவாக்கப்படும். மேலும், வேட்டை தடுப்பு காவலர்கள், மீட்பு வாகனங்கள் மற்றும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். வனவிலங்குகள் காப்பு காட்டை விட்டு வெளியேறாமல் கண்காணிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE