விநாயகர் சிலை கரைப்பதை கண்காணிக்க சுற்றுச்சூழல் துறை செயலர் தலைமையில் குழு: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தியின்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளைப் பின்பற்றி சிலைகள் கரைப்பதைக் கண்காணிக்க சுற்றுச்சூழல் துறைச் செயலர் தலைமையில் குழு அமைத்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளின்போது, சிலைகளைக் கரைப்பதன் மூலம் நீர்நிலைகளை மாசுபடுத்த அனுமதிக்கக் கூடாது. இதற்காக செயற்கை குளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சிலைகள் கரைப்பின்போதுமத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி புஷ்பாசத்தியநாராயணா, கே.சத்ய கோபால் பிறப்பித்த உத்தரவு:

தமிழகம் முழுவதும் சிலைகரைப்பின் போது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் எளிமைப்படுத்தப் பட்ட விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதனை செயல்படுத்த சுற்றுச்சூழல் துறைச்செயலர் தலைமையில் பொதுத்துறைச் செயலர்,வருவாய் நிர்வாக ஆணையர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

மேலும், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான புலிகாட் ஏரி, சதுப்பு நிலம், முகத்துவாரம் போன்ற பகுதிகளில் சிலைகள் கரைப்பதை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE