தருமபுரி: தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட ராமாக்காள் ஏரி, குடியிருப்புகளின் கழிவு நீராலும், இறைச்சிக் கழிவுகளாலும் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.
தருமபுரி நகராட்சி எல்லையில் கிருஷ்ணகிரி சாலையில் ராமாக்காள் ஏரி அமைந்துள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் படகு இல்லம் அமைத்து தருமபுரி நகர் மக்களின் பொழுது போக்கு மையமாக மாற்ற வேண்டும் என்பது தருமபுரி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்கிடையில், மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் நிறைவேற்ற ஆய்வுகள் மேற்கொண்டன. ஆனால், அதற்கு பின்னர் இந்த திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் கிடப்பில் விடப்பட்டன. இதற்கிடையில், தருமபுரி நகரின் குறிப்பிட்ட பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் இந்த ஏரியில் பல ஆண்டுகளாக கலந்து வருகிறது. இதனால் ஏரியின் சுகாதாரம் பாதிப்படைந்து வருகிறது. மழையில்லாத ஆண்டுகளில் ஏரிக்குள் கழிவுநீர் மட்டுமே தேங்கி நிற்கிறது.
கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் ஏரி முழுமையாக நிரம்பியது. ஏரி நிரம்பிய நிலையிலும் தொடர்ந்து கழிவுநீர் கலந்து வருகிறது. இது தவிர, இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதாலும் ஏரியின் சுகாதாரம் பாதிப்படைந்து வருகிறது. இதை தடுத்து ஏரியை சுகாதாரம் மிக்கதாக மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தருமபுரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது: தருமபுரி நகரில் இருந்து ராமாக்காள் ஏரிக்குள் அனுமதிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வெளியேற்றுவதன் மூலம் ஏரியின் சுகாதாரம் காக்கப்படும். இதன்மூலம் சுற்று வட்டார பகுதி நிலத்தடி நீரும் மாசுபடாமல் இருக்கும். இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தியபோதும் அரசு சார்பில் நடவடிக்கை இல்லை. இது தவிர, இந்த ஏரியில் வளர்க்கப்படும் மீன்கள் அண்மைக் காலமாக பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில், மிஞ்சும் இறைச்சிக் கழிவுகளை ஏரிக்குள்ளேயே கொட்டி விடுகின்றனர்.
» சத்தியில் ஆண் யானை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை
» 10 ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு பறவைகள் வருகை களைகட்டிய ஓசூர் ராமநாயக்கன் ஏரி
அதேபோல, தருமபுரி நகரில் செயல்படும் கோழி இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட சில கடைகளின் இறைச்சிக் கழிவுகளும் ஏரியில் தினமும் கொட்டப்படுகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள சிலர் குப்பைகளையும் ஏரிக் கரையையொட்டி வீசிச் செல்கின்றனர். இது பற்றி கேள்வி எழுப்பினால், ‘இறைச்சிக் கழிவுகள் ஏரியில் உள்ள மீன்களுக்கு இரையாகி விடுகிறது’ என்று மிரட்டலாக பதில் வருகிறது.
ஏற்கெனவே, கழிவுநீர் கலப்பதால் மாசடைந்துள்ள ஏரி, தற்போது இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதாலும் மாசடைந்து வருகிறது. அப்பகுதி அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. இந்த நாற்றத்துக்கு மத்தியில் அப்பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள் உள்ளிட்ட சிறு உணவகங்களும் நடத்தப்படுவது மேலும் வேதனை தருகிறது. தருமபுரி நகருக்கு அருகில் எழில் மிகுந்த சூழலுடன் பரந்து விரிந்து காணப்படும் ராமாக்காள் ஏரி மாசடையாமல் தடுத்து, படகு இல்லம், சிறுவர் பூங்கா போன்றவற்றை அமைத்து சிறு சுற்றுலா தலமாக மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 min ago
சுற்றுச்சூழல்
20 hours ago
சுற்றுச்சூழல்
21 hours ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
10 days ago