கோவை வன எல்லையில் யானை உயிரிழப்பு எதிரொலி: நாட்டுவெடிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் உதவியுடன் ரோந்து

By செய்திப்பிரிவு

கோவை: கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட தடாகத்தை அடுத்த எண்.24 வீரபாண்டியில் செங்கல் சூளை அருகே கடந்த 5-ம் தேதி அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடியை கடித்ததால் நாக்கு, தாடை சிதறி காட்டுயானை உயிருக்கு போராடுவது வனப்பணியாளர்களுக்கு தெரியவந்தது.

வனத்துறையினர் சிகிச்சை அளித்தும், பலன் இன்றி அந்த யானை உயிரிழந்தது. அதனை தொடர்ந்து வன எல்லையை ஒட்டியுள்ள நிலங்கள், சந்தேகப்படும்படியான நபர்களின் தோட்ட பகுதிகள் என சுமார் 35 கி.மீ தொலைவுக்கு மோப்ப நாய் உதவியுடன், வனச்சரக பணியாளர்கள் 45 பேர் கடந்த நான்கு நாட்களாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “காரமடை வனச்சரகம் கட்டாஞ்சி மலை முதல் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் குழிக்காடு, சீலியூர், கூடலூர், சிஆர்பிஎஃப், கோவை வனச்சரகத்துக்குட்பட்ட தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, மருதமலை, கெம்பனூர் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் வனவிலங்கு வேட்டைக்கு பயன்படுத்தப்படும் அவுட்டுகாய் எதுவும் தென்படவில்லை. மேலும் தொடர்ந்து அப்பகுதிகளில் களப்பணியாளர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE