திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலையில் குப்பைக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலையோரங்களில் குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் உணவு கழிவுகளும், குப்பை கழிவுகளும் சாலையோரங்களில் கொட்டப்படுவதால், அப்பகுதி முழுவதும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘பாச்சல் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் ஆசிரியர் நகர் மற்றும் வள்ளலார் நகர் பகுதியில் கொட்டப்படுகின்றன. இதுதவிர ஆசிரியர் நகர் அருகே 3 திருமண மண்டபங்கள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் உணவு கழிவுகள் வள்ளலார் நகர் பிரதான சாலையின் இரு புறங்களிலும் கொட்டப்படுகின்றன.

திருப்பத்தூர் அருகேயுள்ள காய்கறி மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளை இரவு நேரங்களில் திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலையில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இந்த கழிவுகளை உண்பதற்காக ஆடு, மாடு, பன்றி மற்றும் நாய்கள் அதிகளவில் வள்ளலார் நகரில் சுற்றித்திரிந்து குடியிருப்பு பகுதி மக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றன.

பாச்சல் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகள் குப்பை மேடாக உள்ளன. மழைக்காலங்களில் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பல விதமான நோய் தாக்குதலுக்கு இப்பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பலரிடம் முறையிட்டும், குப்பை கழிவுகளை அகற்றவோ, அங்கு குப்பை கழிவுகள் சேராமல் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

அதேநேரத்தில் ஆசிரியர் நகர் மற்றும் வள்ளலார் நகர் பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைக்க வேண்டும்" என்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாச்சல் பகுதியில் அனைத்து இடங்களிலும் குப்பை கழிவுகள், சாலையில் தேங்கியுள்ள உணவு கழிவுகளை அகற்றுமாறு துப்புரவுப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தி தான் வருகிறோம்.

ஒவ்வொரு ஊராட்சி பகுதியிலும் துப்புரவுப் பணிகள் தினசரி மேற்கொண்டு வருகிறோம். அதனடிப்படையில், வள்ளலார் நகர் மற்றும் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பை கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE