காலியாகிறது தெங்குமரஹாடா? - வாழ்வாதாரம் பாதிக்கும் என பழங்குடியின மக்கள் அச்சம்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா கிராமம், ஈரோடு மாவட்டஎல்லையில் சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சென்று, அங்கிருந்து சுமார் 25 கி.மீ. அடர்ந்த வனப்பகுதி வழியாக தெங்குமரஹாடா செல்ல வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் வளமான கிராமம் இது. கோடநாடு காட்சிமுனையில் இருந்து பார்த்தால் இந்திய வரைபடம்போல மிகவும் அழகாக தெங்குமரஹாடா காட்சி தரும். கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலையில் 2 அரசுப் பேருந்துகள் மட்டும்தான் தெங்குமரஹாடா அருகே வரை செல்கின்றன.

தெங்குமரஹாடா கிராமத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு இடையில் கல்லாம்பாளையம் வழியாக ஓடும் மாயாறு குறுக்கிடுவதால் ஆற்றுக்கு முன்பாகவே பேருந்து நிறுத்தப்பட்டு விடும். ஆற்றைக் கடக்க தண்ணீர் வரத்து குறைவாக இருந்தால் மட்டுமே பரிசல் மூலமாக மக்கள் கிராமத்துக்குள் நுழைகின்றனர். இக்கிராமம் யானைகளின் வலசைப்பாதையாக உள்ளது. மாயாற்றில் முதலைகளும், மற்ற வனத்தைவிட அதிக அளவில் புலிகள், சிறுத்தை உள்ளிட்ட பல காட்டுயிர்களும் உள்ளன. கடந்தாண்டு எடுக்கப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பில், இக்கிராமத்தை சுற்றிய காட்டுப்பகுதியில் மட்டும் 33 புலிகள் இருப்பதாக வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

உணவு உற்பத்திக்காக உருவான கிராமம்: நாடு சுதந்திரம் அடைந்ததும் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு,உணவு உற்பத்தி மாதிரி கிராமங்களை உருவாக்கினார். இதில் தெங்குமரஹாடா கிராமமும் ஒன்று. 1948-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 142 விவசாயிகளுக்கு தெங்குமரஹாடாவில் 500 ஏக்கர் நிலம் வழங்கி விவசாயம் செய்ய வழி வகை செய்யப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தலா 2 ஏக்கர் நஞ்சை மற்றும் ஓர் ஏக்கர் புஞ்சை நிலம் வழங்கப்பட்டது. இந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் பணி செய்ய கோபி, ஈரோடு, சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியில் உள்ளவர்களை பணியமர்த்தினர். விவசாயத்துக்கான நிலம் மற்றும் தண்ணீர் வசதி இருந்ததால் நாளடைவில் தெங்குமரஹாடா செழிப்பான பூமியாக மாறியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய தெங்குமரஹாடா கூட்டுறவு பண்ணை சங்கம் 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சங்கம் மூலம் விளைபொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

கிராமத்தை காலி செய்ய திட்டம்: இந்நிலையில், காட்டுயிர்கள் அதிகம்உள்ள தெங்குமரஹாடா கிராமத்தை முற்றிலுமாக வனப்பகுதியாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2011-ல் குத்தகையாக வழங்கிய நிலத்தை திரும்பப்பெற்று, இங்குள்ள மக்களை இடமாற்றம் செய்து, கிராமத்தை ஒட்டுமொத்தமாக காலி செய்ய தமிழக அரசிடம் வனத்துறையினர் அனுமதி கோரியிருந்தனர்.

இதற்கான பணிக்காக வனத்துறை மற்றும் நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழுவினர், இங்குள்ள மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தியிருந்தனர். இதில், மக்கள் சிலர் கிராமத்தை காலி செய்ய ஒப்புக்கொண்டதால், 497 குடும்பங்களுக்கும் இழப்பீடாக தலா ரூ.15 லட்சம்என ரூ.74.55 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், 2 வாரங்களுக்குள் கிராமத்தினரை இடமாற்றம்செய்ய, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நிதி ஒதுக்கும்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தரவை நிறைவேற்றியது குறித்து அக்டோபர் 10-ல் அறிக்கை அளிக்கவும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தெங்குமரஹாடா ஊராட்சித்தலைவர் சுகுணா கூறியதாவது: இங்குள்ள மக்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு எந்த பணியும் தெரியாது. இங்கு வேலையில்லாத மக்கள் பலரும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றியும், கால்நடைகள் வளர்த்தும் தங்கள் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்கின்றனர். உயர்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், வங்கி, தபால் நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. மாயாற்றை பரிசலில் கடந்துதான் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அள்ளி மாயாறு மக்கள் பேருந்து வசதி பெறுகின்றனர்.

காலை 7 மணிக்கு தெங்குமரஹாடாவில் இருந்து புறப்பட்டு, இரவு 8 மணிக்கு திரும்ப வரும் வகையில் ஒரு பேருந்தும், மதியம் 1.30 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு தெங்குமரஹாடாவுக்கு திரும்ப வரும் வகையில் ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது. ஆனால் பேருந்து வசதியை பெற தெங்குமரஹாடா மக்கள் 1 கிலோ மீட்டரும், கல்லாம்பாளையம் மற்றும் அள்ளி மாயாறு மக்கள் 4 - 5 கிலோ மீட்டர் வரையில் நடக்க வேண்டியுள்ளது. தெங்குமரஹாடா கிராமத்தை காலி செய்தால், பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும், என்றார்.

பழங்குடியின மக்கள் கூறும்போது, ‘‘தெங்குமரஹாடா ஊராட்சிக்கு அருகே உள்ள அள்ளி மாயாறு, கல்லாம்பாளையம் மேலூர் மற்றும் கீழூர் ஆகிய கிராமங்களில் 260 குடும்பங்களாக, 400-க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். தெங்குமரஹாடா கிராம மக்களுக்கு இழப்பீடு கொடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தருவார்கள் என்பது குறித்து அரசுஎதுவும் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு மாயாறு ஆற்றைக் கடக்க பாலம் அமைத்துக்கொடுத்தால் போதும் எளிதாக மருத்துவம், கல்வி மற்றும் இதர வசதிகளை பெற்று நிம்மதியாக வாழ்வோம். எங்களின் கோரிக்கைகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றனர்.

அருளகம் செயலாளர் எஸ்.பாரதிதாசன் கூறும்போது, ‘‘தெங்குமரஹாடா அழிந்து வரும் கழுதைப் புலிகளின் தாயகமாக உள்ளது. நீலகிரி முழுவதிலும் சுமார் 30 கழுதைப்புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதேபோல தேவாங்குகள், உள்ளூர்மீன் இனங்கள், ஆபத்தான நிலையில் உள்ளஹம்ப்-பேக்டு மஹ்சீர் (டோர் ரெமாதேவி), முதலைகள், நீர்நாய்கள், கழுகுகளின் வாழ்விடமாக உள்ளது. ‘ஆசிய கிங்’ கழுகுகளின்ஒரே கூடுகட்டும் தளமாக இருப்பதாக நம்பப்படுகிறது’’ என்றார்.

முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ் கூறும்போது, ‘‘நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக மாறிவிடும். தெங்குமரஹாடா கிராமத்தை காலி செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அரசு உத்தரவுக்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

மேலும்