வறட்சியின் கோரம்... பசியில் பறவைகள்... - இது தூத்துக்குடி துயரம்!

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குளங்கள், ஏரிகள் நிரம்பவில்லை. அதுபோல இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்கவில்லை. மேலும் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகளும் இல்லை. அணைகளிலும் நீர் இருப்பு மிக மிக குறைவாகவே உள்ளது.

இதனால் ஏரிகள், குளங்கள் அனைத்தும் நீரின்றி வறண்டுவிட்டன. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை கீழ்குளம் என்றழைக்கப்படும் பெருங்குளத்தில் மட்டும் சிறிதளவு தண்ணீர் உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் சுமார் 200 மீட்டர் அளவுக்கு மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் நீர்வாழ் பறவைகளுக்கு சொர்க்க பூமியாக மாறியுள்ளது. வேறு எந்த குளத்திலும் தண்ணீர் இல்லாததால் சிவகளை பெருங்குளத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் குவிந்துள்ளன.

இதுகுறித்து சிவகளை காடு போதல் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வரலாற்று ஆசிரியர் ஆ.மாணிக்கம் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: சுற்றுவட்டார பகுதிகளில் எந்த குளங்களிலும் தண்ணீர் இல்லை. இதனால் அனைத்து பறவைகளும் சிவகளை பெருங்குளத்தில் குவிந்துள்ளன. சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு குவிந்திருக்க கூடும். குளத்தில் 100 முதல் 200 மீட்டர் அளவுக்கு தான் தண்ணீர் நிற்கிறது. அந்த தண்ணீரை நம்பி தான் இவ்வளவு பறவைகள் வந்துள்ளன.

வெளிநாட்டு பறவைகள்: பூநாரை, கரண்டி வாயன், நாமக்கோழி, எகிப்து கழுகு, ஆஸ்திரேலிய பறவைகள், ஆப்பிரிக்க நீர் கோழி, தென் அமெரிக்க நீர் கோழி போன்ற வெளிநாட்டு பறவைகளுடன், நாரை, கொக்கு, ராஜாளி, மீன் கொத்தி போன்ற உள்ளூர் பறவைகளும் இங்கு குவிந்துள்ளன. இதில் நாரைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக பறவைகள் பகல் முழுவதும் தண்ணீருக்குள் அப்படியே நிற்கின்றன. பெரும்பாலான பறவைகள் இரவிலும் இங்கேயே தங்கி விடுகின்றன. இந்த தண்ணீரில் காணப்படும் மீன்கள், மீன் குஞ்சுகள், மீன் முட்டைகள், புழுக்கள், பூச்சிகள், நண்டு, நத்தை, குளத்து சிப்பிகள், சங்குகள் போன்றவை பறவைகளுக்கு உணவாக உள்ளன. தண்ணீர் குறைவாக உள்ளதால் இரைக்காக மணிக்கணக்கில் பறவைகள் பசியோடு காத்திருக்கின்றன. உணவுக்காக இரவு நேரத்திலும் பறவைகள் இங்கேயே நிற்பதால் காட்டு பூனை, மரநாய் போன்ற விலங்குகளால் அவைகளுக்கு ஆபத்தும் ஏற்படுகின்றன.

வறட்சியின் கோரம் எப்படி இருக்கும் என்பதற்கு இது சான்று.
இரைக்காக காத்திருக்கும் பறவைகள். படம்: என்.ராஜேஷ்

மரங்கள் நட வேண்டும்: இந்த பறவைகள் அனைத்தும் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இன்னும் 10 அல்லது 15 நாட்கள் தான் இந்த பறவைகள் இங்கு இருக்கும். அதற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை எனில், வெளிநாட்டு பறவைகள் இங்கிருந்து சென்றுவிடும். அவ்வாறு சென்றால் வருங்காலங்களில் அந்த பறவைகள் இங்கே வருவது சிரமம்.

இங்கு வரும் பறவைகளை பாதுகாக்க வனத்துறையும், பொதுப்பணித்துறையும் இணைந்து தன்னார்வலர்களின் உதவியுடன் குளத்தின் கரையோரங்களில் அதிக மரங்களை வளர்க்க வேண்டும். குறிப்பாக வனத்துறை சார்பில் ஆவி என்ற மரத்தை அதிகளவில் வளர்க்கலாம். அது பறவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

22 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

29 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்