சேலத்தின் கூவமாக மாறிவிட்ட திருமணிமுத்தாறு: கொசுக்கள் உற்பத்தி, கழிவு நீரோட்டத்தால் சுகாதார சீர்கேடு

By எஸ்.விஜயகுமார்

சேலம்: சேலத்தில், திருமணி முத்தாற்றை தூய்மைப்படுத்தும் திட்டம் பலமுறை செயல்படுத்தப்பட்டும் கூட, அது சேலத்தின் கூவம் போலவே இருப்பதால், சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன.

எனவே, திருமணி முத்தாற்றை முழுமையாக தூர்வாரி, நகரில் சுகாதாரமான நிலையை ஏற்படுத்த வேண்டும், என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்று கூறுவார்கள். ஆனால், நவீன யுகத்தில் ஆறு இருக்கும் ஊர் தான் பாழாகி வருகிறது. ஆறுகளை ஒட்டியுள்ள கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் அந்த ஊரின் ஒட்டுமொத்த கழிவுநீர் மற்றும் குப்பை ஆகியவை போடப்படும் இடமாக ஆறுகளை மக்கள் மாற்றிவிட்டனர்.

அதில் ஒன்றாக, சேலம் மாநகரின் மையத்தின் வழியாக பாய்ந்தோடும் திருமணிமுத்தாறு இருக்கிறது. திருமணி முத்தாற்றில் பலமுறை தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டும் கூட, அதில் பகுதியளவு கூட பலன் ஏற்படவில்லை என்று சேலம் மாநகர மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கழிவுநீருக்கான வடிகால்: இது குறித்து மாநகர மக்களும் சமூக ஆர்வலர்களும் கூறியது: திருமணிமுத்தாறு உள்பட, தமிழகத்தில் பல ஆறுகள் கழிவுநீருக்கான வடிகாலாக மாற்றப்பட்டு விட்டன. சேர்வராயன் மலையடிவாரத்தில் உற்பத்தியாகி வரும் வழியில் சேலம் மாநகரை தொடு வதற்கு முன்னே, திருமணி முத்தாற்றில் ஆங்காங்கே கழிவு நீர் சேரத் தொடங்கிவிடுகிறது.

இது சேலத்தை தொட்டதும் இன்னும் அதிகமாக கழிவுகள் கலக்கின்றன. குறிப்பாக, சேலம் மாநகரில் ஆங்காங்கே செயல்பட்டு வரும் சாயப் பட்டறைகளின் கழிவுநீரும் திருமணிமுத்தாற்றில் கலப்பதால், அதை ஆறு என்று கூற முடியாத அளவுக்கு, அதன் நீரோட்டம் முழுவதும் கழிவு நீராக மாறிவிடுகிறது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சி சார்பில் ‘சீர்மிகு நகரம்’ திட்டத்தின் கீழ், திருமணிமுத்தாற்றின் கரையோரங்களில் கம்பிவேலி தடுப்பு அமைத்து, அதை தூய்மைப்படுத்தி, நன்னீரை தேக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. ஆற்றின் வழித் தடத்தில் சில பகுதிகள் தூய்மையாக்கப் பட்டு குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டு வந்தது.

ஆனால், கோட்டையை அடுத்துள்ள ஆற்றின் படுகைக்குப் பின்னர் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், திருமணி முத்தாறு பாயும் கோட்டையை அடுத்துள்ள பகுதிகளான அப்சரா இறக்கம், குகை, நெத்திமேடு உள்ளிட்ட பகுதிகள், திருமணி முத்தாற்றை ‘சேலத்தின் கூவம்’ என்று கூச்சப்படாமல் உச்சரிக்கும் அளவுக்கு, வழிநெடுகிலும் கழிவு நீர் கலக்கும் இடமாக மாறிவிட்டது.

கழிவு நீர் தடையின்றி செல்வதற்கான ஆறாகவே இது மாற்றப்பட்டு விட்டதால், மக்களில் பலரும் பழைய பொருட்கள், இறைச்சிக் கழிவுகள், குப்பை என தேவையில் லாத பொருட்கள், வீட்டுக் கழிவு நீர், கடைகளின் கழிவுநீர் என சகலத்தையும் திருமணி முத்தாற்றில் தாரை வார்த்து வருகின்றனர்.

நிலத்தடி நீர் பாதிப்பு: இப்படியாக, தடையற்ற குப்பை மற்றும் கழிவு நீர் கலப்பினால், உலகின் மாசடைந்த நதிகளின் பட்டியலில் இணைவதற்கு திருமணி முத்தாறு வேகமாக தயாராகி வருகிறது. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஒட்டு மொத்த சேலம் மாநகருக்கும் கொசுக்களை பரப்பும் இடமாக திருமணி முத்தாறு மாறிவிட்டது.

மேலும், திருமணி முத்தாற்றை தூர் வாராமல் விட்டதால், அதில் பலவித செடிகளும் புதர் போல அடர்ந்து வளர்ந்து வருகின்றன. இதனால், விஷ ஜந்துகளின் புகலிடமாகவும் திருமணி முத்தாறு மாறிவருகிறது. புராண காலத்தில், திருமணிமுத்தாற்றில் குளித்தால் அது புண்ணியம் என்று கூறப்பட்டுள்ளது.

இப்போது, திருமணி முத்தாற்றில் குளித்தால், நிச்சயம் பல நோய்கள் ஏற்படும் நிலைதான் உள்ளது. சேலம் மாநகர மக்களுக்கு எதிர்காலத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணியாக, திருமணி முத்தாறு மாறி வருகிறது.

எனவே, திருமணி முத்தாற்றில் மக்கள் குப்பை கொட்டுவதை தடுத்து, சாயக்கழிவு வீட்டுக் கழிவு நீர் ஆகியவை கலப்பதை தடுத்து போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாடு வாரியம் உள்பட தொடர்புடைய அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

19 days ago

மேலும்