விடைபெறும் 2017: ஜல்லிக்கட்டு எழுச்சி விவசாய வீழ்ச்சி

By நவீன்

இந்த ஆண்டு இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், வேளாண்மை சார்ந்து நிகழ்ந்த பிரச்சினைகள், போராட்டங்கள், முன்னேற்றங்கள் குறித்து ஒரு மீள்பார்வை…

மல்லுக்கட்டிய ஜல்லிக்கட்டு!

தமிழர்கள் என்றால் பொங்கலும், பொங்கல் என்றால் ஜல்லிக்கட்டும் நினைவுக்கு வருவது இயல்பு. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ‘பீட்டா’ அமைப்பால் எதிர்ப்புக் கிளம்ப, கொதித்தெழுந்தது தமிழகம். மெரினாவில் ஒரு வாரத்துக்கும் மேலாக மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் குதிக்க, அவர்களை ஆதரித்து அவர்களின் குடும்பத்தினரும், பெண்களும், திரைத்துறையினரும், அரசியல்வாதிகளும் திரண்டனர். கடற்கரையில் பற்றிய அந்தத் தீ, இதர மாவட்டங்களுக்கும் பரவியது. இறுதியில் தடை விலக்கப்பட்டது. இதுவரை ஜல்லிக்கட்டு நடைபெறாத மாவட்டங்களிலும்கூட ஜல்லிக்கட்டு நடைபெற்றது, இந்தப் போராட்டத்தின் வெற்றி!

டெல்லி போராட்டம்!

முதல் ஆண்டில் வெள்ளம் வந்தால், அதற்குப் பிறகு வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வறட்சி நிலவும் என்பது வானிலை அறிவியல். வெள்ளத்தைச் சந்தித்த தமிழகம், கடந்த இரண்டு ஆண்டுகளில் வறட்சியையும் சந்தித்தது. அதனால், விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அது தொடர்பான வழக்கு ஒன்றில், ‘வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தது மாநில அரசு.

தொடர்ந்து மத்திய அரசு அறிவித்த வறட்சி நிவாரண நிதி மிகக் குறைவு என்கிற விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. ‘அந்தத் தொகையால் பயனில்லை’ என்று கூறி, தமிழக விவசாயிகள் டெல்லியில் இருபது நாட்களுக்கும் மேலாகப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். டெல்லி ராஜபாதையில் போராட்டக்காரர்களில் சிலர் நிர்வாணமாக ஓடியது, மத்திய அரசின் பாராமுகத்துக்கு ஒரு சோறு பதம்!

கருவேலம் வில்லன் இல்லை!

அயல் தாவரங்களில் ஒன்றான சீமைக் கருவேலம், நிலத்தடி நீரைக் குறைக்கிறது, எனவே அதை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்ட உத்தரவிட்டது. உத்தரவு வந்த சில மாதங்களுக்குள், ‘சீமைக் கருவேல மரங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதற்கு அறிவியல்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை’ என்று நீதிமன்றம் நியமித்த குழுவின் அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.

பூச்சிக்கொல்லி மரணங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்திச் செடிகளுக்குப் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும்போது, அதைச் சுவாசித்த காரணத்தால் ராஜா, செல்வம், ராமலிங்கம், அர்ச்சுனன் ஆகிய நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மேலும் சில விவசாயிகள், பூச்சிக்கொல்லி தெளிக்கும்போதே மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அரசும் பெரும்பாலான ஊடகங்களும் கண்டுகொள்ளாத தீவிர பிரச்சினையாக வேளாண் அறிஞர்கள் இதை முன்வைக்கிறார்கள்.

‘காரம்’ குறைந்த கடுகு!

மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு இந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கிவிடும் என்று மான்சாண்டோ உள்ளிட்ட பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் எதிர்பார்த்தன. அந்த எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கியது, மரபணு மாற்ற கடுகுக்கு எதிரான செயல்பாட்டாளர்களின் குரல். சூழலியலாளர்கள் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்கள் மூலம் பலத்த எதிர்ப்பைச் சந்தித்த மத்திய அரசு, மரபணு மாற்றக் கடுகை வணிகமயமாக்குவதற்குத் தற்காலிகமாகத் தடை விதித்தது.

அதிக உற்பத்திக்கு விருது!

மத்திய அரசின் 2015-16-ம் ஆண்டுக்கான ‘கிருஷி கர்மான் விருது’ தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. 1 கோடி டன்னுக்கு அதிகமாக தானியங்களை உற்பத்தி செய்ததற்காகக் கிடைத்த விருது இது. இதற்கு முன்பு இந்த விருதை தமிழகம் மூன்று முறை வென்றுள்ளது.

மூங்கில் புல்!

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 123-ன் கீழ், இந்திய வனச் சட்டம், 1927-ல் ‘மூங்கில் மரம் அல்ல, புல்’ என்று வகைப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த மாற்றத்தால் காடுகள் அல்லாத பகுதியிலும் ஒருவர் மூங்கிலை வளர்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பாசன வசதிக்குப் பணம்!

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மத்திய அரசு, உலக வங்கி ஆகியவற்றுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன் மூலம் 4,800 பாசன அமைப்புகள், 477 தடுப்பணைகள், 66 துணைப் படுகைகளை மேம்படுத்த முடியும்.

தாவர வளர்ப்புக்குத் துணையாக…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாழி பகுதியில், தாவர வளர்ப்புக்கான திறன் மையம் (சென்டர் ஃபார் எக்ஸலென்ஸ்) ஒன்றை இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து மத்திய அரசு தொடங்கியுள்ளது.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க…

பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் கீழ், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க, ‘பசுமைப் பருவ நிதியம்’ (கிரீன் கிளைமேட் ஃபண்ட்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்திலிருந்து முதன்முறையாகப் பணம் பெற்று வேளாண்மை சார்ந்த பணிகளுக்குப் பயன்படுத்த ‘நபார்டு’ வங்கி முன்வந்துள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

மேலும்