ஊருக்குள் விலங்குகள் வருவதை தடுக்க சேரம்பாடி வனப்பகுதியில் தடுப்பணைகள்

By செய்திப்பிரிவு

பந்தலூர்: கோடை காலங்களில் குடிநீர் தேடிவன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க, சேரம்பாடி வனப் பகுதியில் தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகளை வனத் துறையினர் அமைத்துள்ளனர்.

கூடலூர் வனக்கோட்டத்தில் குடிநீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க, 2022-23-ம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் கூடலூர் வனத்துக்குள் வன விலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதிகளைக் கண்டறிந்து, தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகளை வனத் துறையினர் அமைத்துள்ளனர்.

அதன் படி, பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.3 அருகே உள்ள வனப் பகுதி மற்றும் கோட்டமலை உட்பட 7 இடங்களில் மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம் காரம் தலைமையில் புதிய தடுப்பணைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகள், குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், பழைய கசிவுநீர் குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் பராமரிக்கப்பட்டுள்ளன.

தற்போது, நீர் நிலைகளில் நீர் நிரம்பியுள்ளதால், யானை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிப்பதும், குளிப்பதும் அதிகம் காணப்படுகிறது. இதனால், வன விலங்குகள் ஊருக்குள் வருவது கட்டுப்படுத்தப்படுவதுடன், மனித - விலங்கு மோதலும் தடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE