ஆணிகளால் ஆயுளை இழக்கும் மரங்கள்!

By எஸ்.கோபு


பொள்ளாச்சி: வனப்பகுதியில் சாலையோரம் உள்ள பச்சை மரங்களில் ஆணி அடித்து அதை பட்டுப்போக செய்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையோரத்தில் புளிய மரம், வேப்பமரம், பனை, தூங்கு வாகை, மே பிளவர் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான மரங்கள் உள்ளன. ஜவுளி கடைகள், தனிப்பயிற்சி கல்வி நிலையங்கள், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்பவர்கள், ஹோட்டல் நிர்வாகங்கள், தனியார் கல்வி நிலையங்கள் சார்பில் அதிக அளவில் விளம்பர அட்டைகள் மரத்தில் ஆணி அடித்து பொருத்தப்படுகின்றன.

ஒரு மரத்தில் குறைந்தபட்சம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆணிகள் அடித்து விளம்பர அட்டைகள் வைக்கப்படுகின்றன. இது போன்று மரங்களில் ஆணி அடிப்பதால் மரங்களின் ஆயுள் குறைந்து விரைவில் பட்டுப்போகும் நிலை ஏற்படுகிறது. இதனை தடை செய்ய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தன்னார்வ அமைப்பினரும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆழியாறு வனப்பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகளை பொருத்தி இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மரங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது,‘‘வால்பாறை சாலையில் நெடுஞ்சாலை துறை, வனத்துறை, தன்னார்வ அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் ஏற்கெனவே உள்ள மரங்களில்அறிவிப்புகள், விளம்பரங்கள் அடங்கிய அட்டைகளைசுமார் 4 இன்ச் ஆணி கொண்டு அடித்து தொங்கவிடுகின்றனர். மனிதர்களைப் போல மரங்களுக்கும் உயிர் உண்டு.

மனிதனின் உள்ளுறுப்புகளை எப்படி தோல் காக்கிறதோ அப்படித்தான் மரத்தையும் அதன் பட்டைகள் காத்து வருகின்றன. இந்த பட்டைகள் காயம்படாத வரைக்கும் மரத்தினுள் கிருமியோ, பூச்சிகளோ போக துளிக்கூட வாய்ப்புகள் இல்லை. ஆனால் பட்டையில் காயம்படும் போது மரத்தினால் அதை குணப்படுத்த முடியாது. மரத்தில் ஆணி அடிப்பதால் நுண்திசுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

வேரிலிருந்து மற்ற பாகங்களுக்கு நுண்சத்துகளை கடத்துவதில் பாதிப்பு ஏற்படுகிறது. மழைக் காலத்தில் ஆணி துருப்பிடித்து தானாகவே கீழே விழுகிறது. அந்தத் துளையில் பூஞ்சாணம், பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. இதனால் நாளடைவில் மரம் பட்டுப்போய் விடுகிறது. மரங்களும் மனிதர்களைப் போன்ற தோல் அமைப்பு உடையவை, வேரிலிருந்து நீரை சைலத்தின் மூலமாக மற்ற பாகங்களுக்கு கடத்துகின்றன.

இது நீரேற்றம் எனப்படும். அதேபோல, ப்ளோயத்தின் வழியாக மேல் புறத்தில் தயாரிக்கப்பட்ட உணவை வேர்கள் உள்ளிட்ட இதர பாகங்களுக்கு கடத்துகின்றன. இது சாரேற்றம் என அழைக்கப்படுகிறது. மரத்தில் ஆணி அடிக்கும் போது அந்த ஆணி மரத்தின் உள்ளேயே இருப்பதால் மரத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்வது மிகச் சிரமம்.

சில நாட்களில் அந்த ஆணி துருப்பிடித்து சைலம் - ப்ளோயத்தின் வேலைகளை சேதப்படுத்துகிறது. இதனால் மரத்தின் இதர பாகங்களுக்கு நீர் மற்றும் உணவு ஆகியன செல்வது தடைபடுகிறது. நீர் உணவில்லாமல் தவிக்கும் மரங்கள் மெல்ல தங்கள் வாழ்நாளை இழந்து பட்டுப்போய் விடுகின்றன. வனப்பகுதியில் உள்ள மரங்களை சேதப்படுத்துவது வன உயிரின சட்டப்படி தண்டனைக் குரிய குற்றமாக கருதப்படும் நிலையில், மரத்தில் ஆணி அடித்து சேதப்படுத்தியவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE