சொக்கநாதபுரம் ஊராட்சி நிர்வாகம் முயற்சியில் சோலைவனமாக மாறிய கிராமங்கள்

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: மக்களோடு இணைந்து பசுமை கிராமங்களை உருவாக்கியுள்ள சொக்கநாதபுரம் ஊராட்சி நிர்வாகம், பிற ஊராட்சிகளுக்கு முன்மாதிரியாக உள்ளது.

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் ஊராட்சியில் சொக்கநாதபுரம், கத்தப்பட்டு, கோவில்பட்டி, பைக்குடிப்பட்டி, புத்திரிப்பட்டி, முத்துப் பட்டினம், முத்தனங்கோட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமங்களில் மழை பொழிவு குறைந்து வறட்சியாக இருந்தது. மேலும் நிலத்தடிநீர் மட்டமும் அதலபாதாளத்தில் இருந்தது.

கிராமங்களை பசுமையாக மாற்ற முடிவு செய்த ஊராட்சித் தலைவர் மு.கண்ணன், மக்களின் ஒத்துழைப்போடு 42.5 ஏக்கரில் முந்திரி நடவு செய்தார். 2 ஏக்கரில் மா, பலா, நாவல், அத்தி போன்ற மரங்கள் நடவு செய்யப்பட்டன. இவற்றுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

புறம்போக்கு நிலங்களில் பல ஆயிரம் மரங்கள் நடப்பட்டு குறுங்காடுகள் உருவாக்கப்பட்டன. மேலும் நூறு நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து அவற்றுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டு வருகின்றன. இதனால் அந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள் பசுமையாக மாறியுள்ளன. அவற்றை பார்வையிட்ட சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பாராட்டினார்.

இது குறித்து ஊராட்சித் தலைவர் மு.கண்ணன் கூறியதாவது: வறட்சியை போக்கக் கூடிய தன்மை மரங்களுக்குத்தான் உள்ளது. அதனால் மரங்கள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். புறம்போக்கு இடங்களில் மரக்கன்றுகள் அருகிலேயே பெரிய குழி தோண்டி விடுவோம். அதில் தண்ணீர் ஊற்றிவிடுவதால், மரக் கன்றுகள் பட்டுப்போகாமல் நன்கு வளர்கின்றன.

புறம்போக்கு நிலங்கள் மட்டுமின்றி, வீடுகளின் முன்பும் 2 மரக்கன்றுகள் நட அறிவுறுத்தினோம். புதிதாக வீடு கட்டுவோர் கட்டாயம் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பதோடு, 2 மரக்கன்றுகளையும் நட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி கொடுப்பதில்லை. ஏற்கெனவே கட்டிய வீடுகளில் மழைநீரை சேகரிக்க உறிஞ்சுகுழி அமைத்து கொடுக்கிறோம்.

மு.கண்ணன்

இதுவரை 450-க்கும் மேற்பட்ட உறிஞ்சுகுழிகள் அமைத்துள்ளோம். சமீபத்தில் டான் அறக்கட்டளையுடன் இணைந்து, கிராமங்களின் பங்குத் தொகையுடன் 2 கண்மாய்கள், 4 வரத்துக் கால்வாய்களை தூர்வாரினோம். 100 பலா மரங்கள் காய்க்க தொடங்கியுள்ளன. மரங்கள் அதிக அளவில் இருப்பதாலும், நீர்நிலைகளை தூர் வாரியதாலும் கிராமங்கள் பசுமையாக மாறியுள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி 12.5 ஏக்கரில் அடர்வனம் அமைக்க உள்ளோம். இதற்காக எல்என்டி நிறுவனம் 5,000 மரக்கன்றுகளை கொடுத்துள்ளன. கூடுதலாக 5,000 மரக்கன்றுகளை வாங்க உள்ளோம். மரக்கன்றுகளை நடுவதற்கு தேவையான குழிகளை அமைக்க இயந்திரம் வாங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE