தி.மலை - படவேட்டில் பற்றி எரியும் குப்பை கழிவுகள்: நச்சுப் புகையால் பக்தர்கள் அவதி

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் ஆடி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் சாலையோரம் மற்றும் கமண்டல நதிக்கரையில் குவியல், குவியலாக குப்பை, பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுவதால் பொதுமக்களும், பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பிரசித்திப்பெற்றது “படவேடு ரேணுகாம்பாள் கோயில்” திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் (வேலூர் நெடுஞ்சாலை) அருகே அமைந்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் மக்கள், ரேணுகாம்பாளை ‘குல தெய்வமாக’ வணங்கி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் ஆடி மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி, படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் கடந்த 15 நாட்களாக, ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், கொங்கு மண்டலம், தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தவர்களும் படவேடுக்கு வருகின்றனர்.

மக்களின் வருகை அதிகளவில் உள்ள நிலையில், படவேட்டில் சுகாதாரச் சீர்கேடு அதிகரித்துள்ளது. சாலையோரம் மற்றும் கமண்டல நதிக்கரையில் குப்பை கழிவுகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் நிலை தொடர்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால், நச்சுப் புகை வெளியேறி சுவாச பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

இது குறித்து கிராம மக்களும், பக்தர்களும் கூறும்போது, “படவேடு ஊராட்சியில் உள்ள ரேணுகாம்பாள் கோயிலில், ஆடி மாத திருவிழா ஒரு மாதம் நடைபெறும். இவ்விழா கடந்த 15 நாட்களாக நடைபெறுகிறது. உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபடுகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், குப்பை கழிவுகளும் குவியல், குவியலாக சேருகிறது.

திருமண மண்டபங்கள், உணவகங்களில் இருந்து உணவு கழிவுகள், வாழை இலைகள் கொட்டப்படுகின்றன. மேலும், இவற்றுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டுகின்றனர். சாலையோரம் மற்றும் கமண்டல நதியிலும் கொட்டி வருகின்றனர். அம்மன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றுவதாக கூறி ஆடு மற்றும் கோழிகள் பலியிடப்படுகின்றன.

இந்த கழிவுகளும், கடை வீதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகளையும் கமண்டல நதியில் கொட்டி வருகின்றனர். இதனால் நதியும் மாசடைந்து வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், மாசடைந்துள்ள நதியில் நீராடி வருகின்றனர். மேலும் குவியல், குவியலாக கொட்டப்படும் குப்பையை தீயிட்டு எரித்து விடுகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகளும் எரிக்கப்படுவதால், நச்சுப்புகை வெளியேறி பக்தர்களுக் கும், கிராம மக்களுக்கும் சுவாச பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆடி மாத திருவிழா தொடங்குவதற்கு முன்பாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்யாமல் உள்ளனர். தீயிட்டு கொளுத்தப்படும் குப்பை, தொடர்ந்து எரிகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆடி திருவிழாவில் கட்டண வசூலில் கவனம் செலுத்தும் படவேடு ஊராட்சி நிர்வாகம், குப்பையை அகற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை மற்றும் படைவீடு ஊராட்சி இணைந்து குப்பையை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

மேலும்