ஆதார வள பயன்பாடு, சுழற்சி பொருளாதார தொழில் கூட்டணி - மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தொடங்கிவைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதில் சுழற்சி பொருளாதார தொழில் கூட்டணி முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

ஜி20 மாநாட்டின் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம், சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதார தொழில் கூட்டணி’ தொடக்க விழா,கிண்டியில் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய வனம்,சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பங்கேற்று தொழில் கூட்டணியை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அறிவுப் பரிமாற்றம், புதிய கண்டுபிடிப்புகளை அதிகரித்தல், நிதி வாய்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளின் பரிமாற்றம் ஆகியவற்றில் ஆதார வளங்கள் பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதார தொழில் கூட்டணி முக்கிய பங்கு வகிக்கும். இந்தக் கூட்டணியில் இணைவதற்கு 39 நிறுவன உறுப்பினர்கள் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் 9 மாத முயற்சிகள் நிறைவடையும் நிலையில், ஆதார வளங்கள் பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதார தொழில் துறை கூட்டணி தொடங்கி இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

நிறுவனங்களுக்கு இடையேயான மகத்தான ஒத்துழைப்பை அதிகரித்தல், துறைகள்தோறும் திறன் கட்டமைப்பு, கூட்டணியில் உள்ள உறுப்பு நாடுகளின் பல்வகையான, உலகளாவிய அனுபவங்களை கற்றறிதல், ஆதார வளங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்த தனியார் துறைக்கு கூடுதல் வாய்ப்பளித்தல், சுழற்சி பொருளாதார மாற்றத்தை அதிகரித்தல் ஆகி யவை இந்தக் கூட்டணியின் செயல்பாடாக இருக்கும்.

உலகளாவிய இலக்குகள், ஜி20 மற்றும் சர்வதேச அமைப்புகள் முன்வைத்துள்ள முன்னுரிமை அம்சங்களில் முன்னேற்றம் காண்பதற்கு பங்களிப்பு செய்வதும் இந்தக் கூட்டணியின் நோக்கமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE