உலகை காக்கும் சதுப்புநிலங்கள் | இன்று சர்வதேச சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்

By செய்திப்பிரிவு

இந்திய கடற்கரையை சதுப்புநிலங்கள் பாதுகாக்கின்றன. சூறாவளி, புயல்களுக்கு எதிரான பாதுகாப்பு, நீரின் தரத்தை மேம்படுத்துதல், மீன்வளம் உட்பட ஆரோக்கியமான கடல் மற்றும் கடலோர பல்லுயிர் பெருக்கம் எனசதுப்புநிலங்களால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. சதுப்புநில சூழலை பாதுகாத்து நிர்வகிப்பதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கலாம். 9 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களின் கடற்கரையோரத்தில் காணப்படும் 14 குடும்பங்கள் மற்றும் 22 இனங்களை சேர்ந்த 46 உண்மையான சதுப்புநில வகைகளுடன் இந்தியா 3-வது பணக்கார சதுப்புநில பன்முகத் தன்மையை கொண்டுள்ளது. அதிக நன்னீர் வரத்து, அலைவீச்சு காரணமாக சுந்தரவனம் மற்றும் பிடர்கனிகா போன்ற இடங்களில் பன்முகத் தன்மை நிறைந்துள்ளது. அதே நேரம், தமிழகம் போன்ற மாநிலங்களில் இது குறைவாக உள்ளது.

சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் சதுப்புநிலங்கள் தாங்களாகவே மீள்உருவாக்கம் செய்துகொள்ளும். அலைநீரால் கொண்டு வரப்படும் சதுப்புநில விதைகள் சாதகமான பகுதிகளில் செழித்து வளரும். அலை நீரோட்டம் இல்லாத சீரழிந்த பகுதிகளுக்கு கால்வாய்கள் வழியாக நீரோட்டத்தை எளிதாக்குவதன் மூலம் சதுப்புநிலங்களை மீட்டெடுக்க வேண்டும். முறையான மறுசீரமைப்பு, பாதுகாப்பு இல்லாவிட்டால் சதுப்புநிலக்காடுகள் குறைந்துவிடும். ஐ.நா. பொதுச்சபை 2021-2030 காலகட்டத்தை ‘சுற்றுச்சூழல் அமைப்பு மறு சீரமைப்புக்கான ஐ.நா தசாப்தம்’ என்று அறிவித்தது.

மாசுபாடு, வாழ்விட ஆக்கிரமிப்பு, நகரமயமாக்கல் போன்றவற்றால் சதுப்புநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சதுப்புநிலங்களை மீட்டெடுத்தல், பராமரித்தல், நிர்வகித்தலில், கடற்கரையோரங்களில் வசிக்கும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவது அவசியம். அவர்களது வாழ்க்கையும், வாழ்வாதாரங்களும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தை முற்றிலும் சார்ந்துள்ளன,

மும்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள சதுப்புநிலங்களை பாதுகாக்க மகாராஷ்டிர அரசு 2012 ஜனவரியில் ஒரு ‘மாங்குரோவ் செல்’அமைத்தது. இதையடுத்து, 7 மாவட்டங்களில் அரசு நிலத்தில் உள்ள சதுப்புநில காடுகளும், 15,088 ஹெக்டேர் சதுப்புநிலங்களும் ரிசர்வ் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சிதைந்த பகுதிகளில் சதுப்புநில தோட்டத்தையும் இந்த செல் அமைக்கிறது. கேரளாவில் 2014 மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம், வனத் துறை இணைந்து ‘மிஷன் மாங்குரோவ் கண்ணூர்’ திட்டத்தில் 236 ஹெக்டேர் சதுப்புநிலங்களை ரிசர்வ் காடுகளாக அறிவித்தது. தனியார் உரிமையாளர்களிடம் இருந்து 1,200ஏக்கர் சதுப்புநிலங்களை கையகப் படுத்தும் பணியும் தொடங்கப்பட்டது.

உள்ளூர் சமூகங்கள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில வனத் துறைகளுடன் இணைந்து சதுப்புநிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையால் (MSSRF) 1990-களின் முற்பகுதியில் கூட்டு சதுப்புநில மேலாண்மை மாதிரி தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் 3 மாநிலங்களில் 2,500 ஹெக்டேர் சீரழிந்த சதுப்புநிலங்கள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டன. உள்ளூர் சமூகங்கள் தீவிரமாக பங்கேற்பது மற்றும்நண்டு கொழுத்துதல், ஒருங்கிணைந்த சதுப்புநில மீன் வளர்ப்பு முறை, துடுப்பு மீன்களின் கூண்டு வளர்ப்பு மற்றும் மீன்வளப் பொருட்களின் மதிப்பு கூட்டல் போன்ற பிற சதுப்புநில அடிப்படையிலான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவையே இந்த வெற்றிக்கு அடிப்படை. இதேபோல, குஜராத் சூழலியல் ஆணையம், குஜராத் கடற்கரையில் 9,000 ஹெக்டேர் பரப்பளவில் சமூக அடிப்படையிலான மறுசீரமைப்பு மற்றும் சதுப்புநிலங்களை நிர்வகிப்பதையும் செயல்படுத்தியது.

மாநில வனத் துறைகள், உள்ளூர் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி, ‘கரையோர வாழ்விடங்கள், உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (MISHTI)’ என்ற திட்டத்தை பிரதமர் கடந்த ஜூன் 5-ம் தேதி தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளில் (2023-28) ரூ.1,250 கோடி பட்ஜெட்டில் 540 சதுர கி.மீபரப்பளவை உள்ளடக்கியது இத்திட்டம். இது 4.5 மில்லியன் டன் கார்பன் மூழ்குவதுடன் சுமார் 22.8மில்லியன் மனித நாட்கள் வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

மாநில வனத் துறையின்கீழ் உள்ள சதுப்புநிலக் காடுகள் சட்டப்பூர்வ பாதுகாப்பை பெற்றுள்ளன. அதேநேரம், வருவாய் அளவீடு செய்யப்படாத நிலங்கள், உப்பளங்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சதுப்புநிலங்கள், காடு மற்றும் வனவிலங்கு சட்டங்களின்படி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இது மாற வேண்டும். அப்போதுதான் சதுப்புநிலங்கள் மற்ற நில பயன்பாட்டுக்காக மாற்றப் படுவதை தடுக்க முடியும்.

சில உண்மைகள்..

> சதுப்புநிலங்கள் மற்ற நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளைவிட 4 மடங்கு கார்பனை பிரிக்கின்றன.

> உலக அளவில் சதுப்புநிலங்கள் ஆண்டுக்கு 24 மில்லியன் டன் கார்பனை பிரித்தெடுக்க முடியும்.

> உலக அளவில்1990-2020 காலகட்டத்தில் சதுப்புநிலங்களின் பரப்பளவு 1.04 மில்லியன் ஹெக்டேர் குறைந்துள்ளது.

> இந்தியாவில் 2019-2021 இடையே சதுப்புநில பரப்பு 17 சதுர கிமீ அதிகரித்துள்ளது. இதில் ஒடிசாவும் (8 சதுர கி.மீ.), மகாராஷ்டிராவும்(4 சதுர கி.மீ.) குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன.

கட்டுரையாளர்கள்:

டாக்டர் ஆர் ராமசுப்ரமணியன், சீனியர் ஃபெலோ - கடலோர அமைப்புகள் ஆராய்ச்சி

டாக்டர் சௌமியா சுவாமிநாதன், தலைவர்

(எம்.எஸ்.சுவாமிநாதன்ஆராய்ச்சிஅறக்கட்டளை - MSSRF)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

13 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

23 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

மேலும்