நீலகிரியில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் மறுமலர்ச்சி பெறும் ‘காட்டுப் பூவரசு’

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: அகன்ற இலைகளையுடைய குட்டையான மரங்கள், பெரும்பான்மை பகுதியை புல்வெளியாகக் கொண்ட வனப்பகுதிகள் சோலைக் காடுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வகை காடுகள், கடல்மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப் படுகின்றன. சோலைக்காடுகளில் குறிஞ்சி தாவர வகைகள், ‘ரோடோடென்டிரான்’ எனப்படும் காட்டுப் பூவரசு உள்ளிட்ட அரியவகை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இதில், ரோடோடென்டிரான் மரங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. இவை குட்டையான தண்டு பகுதியுடன், தடித்த தோல் போன்ற இலை அமைப்புகளுடன் அழகிய வண்ணப் பூக்களைக் கொண்டவை. இவ்வகை மரங்கள் இந்தியா, சீனா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளில் காணப்படுகின்றன.

இந்தியாவில் உத்தராகண்ட் மாநில மரமாகவும் உள்ளது. அதேபோல, ரோடோடென்டிரான் மலர் நேபாளத்தின் தேசிய மலராகவும், இமாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்தின் மாநில மலராகவும் உள்ளது. அலிஞ்சி மற்றும் காட்டுப் பூவரசு என வழக்கு பெயர்களைக் கொண்ட இவ்வகை மரங்கள், தற்போது பைன், கற்பூரம், சீகை உள்ளிட்ட அந்நிய மரங்களின் பெருக்கத்தால் அழிந்து வருவதாக, தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நீலகிரி வனங்களை ஆக்கிரமித்துள்ள அந்நிய தாவரங்களை அகற்றும் பணி நடந்து வருவதால், காட்டுப் பூவரசு மரங்கள் மறுமலர்ச்சி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “ரோடோ டென்டிரான் மரங்கள் புல்வெளிகளை ஒட்டியே வளரும் தன்மை கொண்டவை. தற்போது, தமிழகத்தில் உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு வருவதால், புல்வெளிகளின் பரப்பு அதிகரிக்கும்.

இதனால், ரோடோ டென்டிரான் மரங்களும் மறுமலர்ச்சி பெறும். அதேசமயம், அந்நிய மரங்களிடையே இந்த மரங்களை நடவு செய்தால் வளராது. அவற்றுக்கான சூழ்நிலையில் மட்டுமே வளரும். தற்போது இந்த மரங்களின் பூக்கும் பருவமாகும். டிசம்பர் முதல் மார்ச் வரை பூக்கும் போது, புல்வெளிகளிடையே சிவப்பு கம்பளம் விரித்ததுபோல் காட்சியளிக்கும்" என்றனர்.

தேநீர் தயாரிப்பு: இமயமலையில் உள்ள காட்டுப் பூவரசு மரத்தின் இலைகளிலிருந்து, அப்பகுதி மக்கள் தேநீர் தயாரிக்கின்றனர். இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இமயமலையின் அடிவாரத்தில் உள்ள மாநிலங்களில், இந்த தேநீர் மிகவும் பிரபலம். காட்டுப் பூவரசு மரங்கள் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.

இந்நிலையில், நாகாலாந்து மாநிலம் கோஹிமா மாவட்டத்திலுள்ள ஜாப்பூ மலையில் 108 அடி உயரம் கொண்ட மரம், 1993-ம் ஆண்டு கண்டறியப் பட்டது. இதுவே உயரமான ரோடோடென்டிரான் மரம் என கின்னஸில் இடம்பிடித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE