கல்வராயன்மலை... மக்களுக்கு எதிராக செயல்படுகிறதா வனத்துறை?

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் அடர்ந்த வனப் பகுதியாகவும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதியாகவும் விளங்கி வருகிறது கல்வராயன் மலை. 1,095 சதுர கி.மீட்டர் பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2,000 முதல் 3,000 அடி வரை உள்ளது. இங்குள்ள 171 மலைக்கிராமங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கல்வராயன்மலை அமைந்திருக்கிறது. இங்கு 44 பெரிய மலைக்கிராமங்களும், 150-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்களும் அமைந்திருக்கின்றன. இதில் பெரும்பாலான சிறிய கிராமங்களை அணுகும் பாதை சாதாரண மண் சாலையாகவே இன்னமும் இருக்கின்றன.

எப்போதோ போடப்பட்ட இந்த மண் சாலைகள், மழையின் காரணமாக கரடுமுரடாக மாறி, ஆட்கள் நடந்து செல்லவேஇயலாத நிலைக்கு குண்டும் குழியுமாக மாறியிருக்கிறது. இந்த மலையில் அமைந்துள்ள வண்டகப்பாடி, புழுவப்பாடி, தாழ்மதூர், மேல்முருவம், வெங்கோடு என பல கிராமங்கள் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலையில் தான் உள்ளன.

இது தொடர்பாக மேல்முருவம் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கூறும்போது, “மேல்முருவம் கிராமத்துக்கு செல்லும் பாதை நடக்கவே இயலாத பாதையாக இருக்கிறது. எங்க முப்பாட்டன் காலத்திலிருந்தே இந்த கிராமத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். எங்க ஊரில் சுமார் 120 குடும்பங்கள் உள்ளன. மொத்தமாக 900 பேர் வரை வசிப்பார்கள். எங்க ஊரில் இருந்து பிரதான சாலைக்கு வர வேண்டுமென்றால் 3 கி.மீ வரை மலைப்பாதையில் நடக்க வேண்டும்” என்றார்.

வனத்துறை எதிர்ப்பு: வண்டகப்பாடியைச் சேர்ந்த அங்கம்மாள் என்பவர் கூறுகையில், “மலையில் டவுன் பகுதியாக கருதப்படும் வெள்ளிமலைக்கு போக 15 கி.மீ தூரம் செல்ல வேண்டும். பெரிய சந்தைப் பகுதிக்கு போக வேண்டுமென்றால் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல் வரை செல்ல வேண்டும். எங்கள் ஊரிலிருந்து பிரதான சாலைக்கு வருவதற்கு பாதை கிடையாது.

கரடு முரடான காட்டுப் பாதையில் தான் நடந்து வர வேண்டும். ஆம்புலன்ஸ் எழுத்தூர் பிரிவு வரை தான் வரும். உடம்பு சரியில்லை என்றாலோ, பிரசவத்துக்கு செல்வதாக இருந்தாலோ, தூளி கட்டி 3 கி.மீ தூரம் தூக்கி வர வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவமனையை சென்றடைய முடியாது. பல பேருக்கு நடுவழியில் பிரசவம் ஆகியிருக்கிறது. குழந்தையும் உயிரிழந்திருக்கிறது.

இது போன்ற கிராமங்களில் வசிப்பவர்கள் அந்தந்த கிராமங்களிலேயே விவசாய வேலையோ, காட்டு வேலைகளையோ பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், மருத்துவத்துக்கு கண்டிப்பாக வெள்ளிமலையில் உள்ள சிறிய மருத்துவமனைக்கோ அல்லது கள்ளக்குறிச்சிக்கோ தான் போக வேண்டும். சாலைகளை எளிதில் அணுக முடியாதது;

அவசர மருத்துவ உதவியை உடனடியாக பெற முடியாதது போன்ற பிரச்சினைகள் தவிர வேறு சில பிரச்சினைகளும் இந்தப் பகுதி மக்களுக்கு இருக்கின்றன. ஒரு சிறிய தார்சாலை அமைத்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் சாலை அமைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கஜேந்திரன் கூறுகையில், “இது வானம் பார்த்த பூமி. ஆழ்குழாய் கிணறுகள் கிடையாது. பெரும்பாலும் மரவள்ளிக் கிழங்கும், பருத்தியும் தான் பயிரிடுவார்கள்.

பல இடங்கள் காப்புக் காடுகளாக வரையறுக்கப்பட்டதால் அவர்களால் முழுமையாக விவசாயம் செய்யவும் முடியாது. இதனால் பலர் வேறு மாநிலங்களுக்கு விவசாயக் கூலிகளாக சென்று வருகின்றனர். பலர் வேறுமாநிலங்களுக்கு மரம் வெட்டச் செல்லும் போது சட்ட ரீதியாகவும் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்” என்கிறார்.

விலங்குகளின் வாழ்விடம்: மாவட்ட வனத்துறையினர் கூறுகை யில், “வனப்பகுதிகள் விலங்கு களுக்கான வாழ்விடம் என்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை. வன விலங்குகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து பயிரிடுவது, சாலை வசதி ஏற்படுத்துவது, கட்டிடம் கட்டுவது போன்ற செயல்கள் வனவிலங்குகளுக்கு எதிரானவை. அவர்கள் கேட்கும் வசதியை செய்து கொடுத்தால் வனவிலங்குகள் சமவெளியை நோக்கித்தானே பயணிக்கும்.

அப்போது சமவெளியில் வசிக்கும் மக்களும், வனவிலங்குகளும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். மலை முழுவதும் மனித இனம் ஆக்கிரமிப்பதால் தான் குரங்குகள் நகரப் பகுதிகளில் தஞ்சமடைய தொடங்கிவிட்டன. இதை உணராமல் வீடுகளில் குரங்குகள் அட்டகாசம்; மலையில் கரடி கடிக்கிறது; சாலை வசதி சரியில்லை என்று கூறி மலைவாழ் மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு படையெடுப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று குறிப்பிட்டனர்.

ஒய்வு பெற்ற மாவட்ட வனத்துறை அலுவலர் சவுந்திர ராஜன் கூறுகையில், “இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது வனவிலங்குகளை பாதுக்காக்க இயற்றப்பட்ட சட்டத்தால் தான் வன விலங்குகளை அழிவுப் பாதையில் இருந்து மீட்க முடிந்தது. எனவே மலையில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் மட்டும் ஒரு ஹெக்டேர் அளவுக்கு சாலை வசதிகள் செய்து கொடுக்க சட்டத்தில் இடமுண்டு. மற்றவர்களுக்கு எந்த அனுமதியும் கிடையாது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE