கடலூரை கலங்கடிக்கும் சிப்காட் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்கிறது?

By க.ரமேஷ்

கடலூர்: வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி, கடலூர் பகுதியில் 1982-ல் தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்சாலைகள், தற்போது காற்று மாசு, குடிநீர் மாசால் கடும் சூழியல் சீர்கேடுகளை இந்நகருக்கு அளித்து, அப்பகுதி மக்களை நோய்களில் தள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதிக மையங்கள் உள்ள 200 இடங்களில் கடலூர்நகரமும் ஒன்று’ என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், ‘கடலூர் சிப்காட் பகுதியில் இருக்கிற ரசாயன தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் அபாயகரமான வாயுக்களும், கழிவுகளும் ஒரு முக்கிய காரணம்’ என் கின்றனர் இப்பகுதியை நன்கு உணர்ந்த சூழியல் சார்ந்த சமூக நோக்கர்கள்.

“கடலூர் மாநகரைச் சுற்றி புதுச்சேரி வரை 10 புற்றுநோய் மருத்துவமனைகள் கடந்த 20 ஆண்டுகளில் வந்துள்ளன. இதிலிருந்து இதன் தீவிரத்தை புரிந்து கொள்ளலாம்” என்று அவர்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கின்றனர். கார்பன் டை சல்பைடு, புரோமின் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் இரவும், பகலும் தங்கு தடையின்றி இங்குள்ள ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி வருகின்றன. இந்த வழியாக கடந்து செல்லும் போதே, மோசமான சூழலின் நெடியை நம்மால் உணர முடியும்.

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்கூடம் ஒன்றில் கழிப்பறையில் மலம் கழிக்கச் சென்ற போது, அங்குள்ள செப்டிக் டேங்கில் இருந்து அபாயகரமான வாயுக்கள் வெளியேற சுமார் 10 தொழிலாளிகளின் ஆசனவாய், பிறப்புறுப்பு பகுதிகள் வெந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற கொடுமையெல்லாம் இங்கு நடந்துள்ளது.

சிப்காட் பாதிப்பு குறித்து பேசிய கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொது செயலாளர் மருதவாணன் கூறுகையில், “சிப்காட்டில் உள்ள ரசாயன ஆலைகளில் இருந்து, கழிவு நீரை சுத்திகரித்து, அதன் வெப்பநிலையை மாற்றி, குளிர்வித்து அதன் பிறகு கடலில் வெளியேற்ற வேண்டும். ஆனால், அதற்கு ஆகும் செலவை கருத்தில் கொண்டு, அப்படிச் செய்யாமல் கடல்வெப்பத்தை விட 5 டிகிரி முதல் 10 டிகிரி வரை கூடுதலான வெப்ப நிலையில் தொடர்ந்து வெளியேற்
றுகின்றனர்.

இப்படி ரசாயன கழிவு நீர் கலப்பதால், இங்குள்ள கடல் மீன் வளங்கள் என்ன ஆகும்? இதை உண்ணும் மனிதர்களின் நிலை என்ன?சிப்காட்டில் எந்த தொழிற்சாலை தொடங்கினாலும், மக்களைப் பாதிக்காமல் அபாயகரமான ரசாயன கழிவுகளை எப்படி கையாளப் போகிறோம் என்பதை தெளிவாக குறிப்பிட்டு, அனுமதி பெறுகின்றனர். ஆனால், அதன் பிறகு அந்த ஆலைகளில் பலவற்றை இஷ்டம் போல் செயல்பட அரசு அனுமதி அளிக்கிறது. அதன் விளைவு கடலூரில் சுமார் 75 சதுர கி.மீ அளவுக்கு நிலம், நீர், காற்று, கடல் மாசுபட்டு மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடாக உருவெடுத்துள்ளது.

கடலை மாசுப்படுத்துவதைத் தாண்டி, இங்குள்ள ரசாயன கழிவுகளை கெடிலம், பெண்ணையாறு, கடலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள குளம், குட்டை, வாய்க்கால் என்று நீர்நிலைகளை தேடித்தேடி சென்று இரவில் டேங்கர் லாரிகளில் கொட்டி வருகின்றனர். இது கடலூர் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்” என்று கூறுகிறார்.

ஒருமுறை கெடிலம் ஆற்றில் ஜவான்ஸ் பவன் சாலையில் பட்டப்பகலில் ஒரு சிப்காட் தொழிற்சாலையின் டேங்கர் நச்சுக் கழிவுகளை ஆற்றில் கொட்டும் போது, பொதுமக்கள் சூழ்ந்து அந்த டேங்கரை சிறைபிடித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் சமாதானம் பேசி விடுவித்து, அந்த டேங்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, பெரிய அளவில் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விட்டு விட்டனர்.

இங்குள்ள பாதிப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் கூறுகையில், “இங்குள்ள ஒரு தொழிற் சாலையில் இருந்து, ஃப்ளோரின் கழிவுகள் அதிகமாக கடலில் விடப்பட்டு, மீன்கள் அதை உட்கொண்டு, நாளடைவில் அதைச் சாப்பிட்டு சிப்காட் மற்றும் குடிகாடு பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களில் கால் மூட்டு எலும்பில் பாதிப்பு ஏற்
பட்டு, நடக்க முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். இப்பகுதியில் 3 கி.மீ சுற்றளவுக்கு, நிலத்தடி நீர், குளம், குட்டை என அனைத்து நீர் நிலைகளும் மாசுபட்டு கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.

இதற்கிடையே, அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி கையாள்கிற துறைமுகமாக சிப்காட் பகுதியை மாற்றுவதற்கான வேலை நடந்து வருகிறது .அப்படி மாறினால் திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் நிலக்கரியை கொட்டி வைப்பார்கள். இதனால் இப்பகுதி நிலத்தடி நீர் மேலும் மாசுபட்டு கறுப்பாக மாறப் போகிறது.

அபாயகரமான கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தாமல் ஆயிரம் அடி முதல் 3 ஆயிரம் அடி வரை வளாகத்துக்கு உள்ளேயே போர் போட்டு, பூமியில் செலுத்தி மக்களுக்கு மிகப்பெரிய நிலத்தடி நீர் அச்சுறுத்தலை இந்த தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வருகின்றன. பாய்லர் வெடித்து மட்டுமே இதுவரை 140 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் அசைவற்று முடங்கிப் போய் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையில், ரூ. 75 ஆயிரம் கோடி செலவில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் இப்பகுதியில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய ரசாயன துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்சாலைகளால் பாதிக்கப்படும் மக்களுக்காக எதுவும் செய்யப்படவில்லை. சிப்காட்டால் புற்றுநோய் பரவல் அதிகமாகிறது. அரசு சார்பில் கடலூர் பகுதியில் புற்று நோய் மருத்துவமனை ஒன்றை கடலூர் பகுதியில் ஏற்படுத்த வேண்டும்” என்று கூறுகிறார்.

சிப்காட் பகுதி சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அருள் செல்வம் கூறுகையில், “கடந்த 2007-ம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) கடலூர் சிப்காட் பகுதியில் எளிதில் ஆவியாகக் கூடியகரிம வேதிப் பொருட்களின் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அதில், மற்ற இடங்களைக்காட்டிலும் 2 ஆயிரம் மடங்கு புற்று நோய் தாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும், இந்தப் பகுதி வாழும் மக்களுக்கு, ரசாயன தொழில்சாலைகள் சார்ந்து ஏற்பட்டுள்ள உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சிப்காட் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் உள்ளூர் கண்காணிப்பு குழு கூட்டம் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. அண்மையில் தெற்கு மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், கடலூர் சிப்காட் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபாடு சம்பந்தமான வழக்கில் அளித்த தீர்ப்பில், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களை பரிந்துரைந்து, அவர்கள் மூலம் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவின் செயல்பாடுகள் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருக்க வேண்டும். உள்ளூர் மக்களின் கருத்துகளை இதில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மற்றொரு இடைக்கால உத்தரவின்படி, சிப்காட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் போதுமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார். மக்கள் போராட்டத்தால் மற்ற நாடுகளில் துரத்தி அடிக்கப்பட்ட ரசாயன தொழிற்சாலைகளின் புகலிடமாக கடலூர் சிப்காட் மாறியிருக்கிறது; தொடர்ந்து மாறிக் கொண்டே வருகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறது. சமூக அக்கறை உள்ளவர்கள் கூறும் கருத்துக்கும், பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலுக்கும் அரசு செவி மடுக்க வேண்டும் என்பதே கடலூர் மக்களின் விருப்பம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

மேலும்