பருவநிலை மாற்றத்துக்கும், படைப்புழுவுக்கும் தொடர்பு உண்டு - இங்கிலாந்து வேளாண் விஞ்ஞானி தகவல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: பருவநிலை மாற்றத்துக்கும், படைப்புழுவுக்கும் தொடர்பு உண்டு என இங்கிலாந்து வேளாண் விஞ்ஞானி தெரிவித்தார்.

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பயிர் நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் மக்காச் சோளத்தில் சென்சார் தொழில்நுட்ப உதவியுடன் படைப்புழுவை கண்காணித்தல் தொடர்பான செயல் விளக்க கருத்தரங்கம் புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி டெரெக் ஸ்கபெல் பேசியது:

மக்காச்சோளத்தில் சேதத்தை ஏற்படுத்தும் படைப்புழுவை கட்டுப்படுத்த அதிகப்படியான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையும் குறைகிறது. வளமான மண்கூட மலடாக மாறுகிறது.

எனவே, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சென்சார் இனக்கவர்ச்சி பொறி மூலம் தினசரி எத்தனை, எந்த விதமான புழு வருகிறது என்பதை வெளியூர்களில் இருந்து கண்காணிக்க முடிகிறது. அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒரு சிறந்த மின்னணு உணர்திறன் கொண்ட இனக்கவர்ச்சி பொறி உருவாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பருவநிலை மாற்றத்துக்கும், படைப்புழுவுக்கும் தொடர்பு உள்ளது. உலகில் முன்பு வெப்ப மண்டலம், குளிர் பிரதேசம் என பருவம் சார்ந்த எல்லைகள் சரியாக இருந்தன. தற்போது அவ்வாறு பிரிக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டன. இத்தகைய பருவநிலை மாற்றத்தை சாதகமாக வைத்துக்கொண்டு படைப்புழு இடம்மாறி இந்தியாவை வந்தடைந்துவிட்டது.

5 ஆண்டுகளாக ஆராய்ச்சி: வட அமெரிக்காவில் குளிர் அதிகமாக இருப்பதால் அங்கு புழுவின் வளர்ச்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவில் அதன் பெருக்கத்துக்கு சாதகமாக இருப்பதால் புழு பெருக்கம் அடைந்து வருகிறது. படைப்புழு குறித்து 5 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில், இங்கிலாந்து நாட்டு பயிர் நலன் மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி அலுவலர்கள் ஜென்னா ரோஸ், எலிசபெத் ஹன்னா, ஜேம்ஸ் காட்பர், வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் விஞ்ஞானி ராஜா ரமேஷ், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ்.வினோத்குமார் ஆகியோர் பேசினர். இக்கருத்தரங்கில் விவசாயிகள் திரளானோர் பங்கேற்றனர்.

முன்னதாக, புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யாவை அவரதுஅலுவலகத்தில் சந்தித்து, புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி குறித்து விஞ்ஞானிகள் விளக்கினர். அப்போது, மாவட்ட வேளாண் இயக்குநர் மா.பெரியசாமி உடன்இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE