மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் நிலக்கரி புகையால் மக்களுக்கு பாதிப்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் நிலக்கரி புகையால் சின்னக்காவூர், தாழையூர் பகுதி மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, சாம்பல் புகை, நிலக்கரி துகள் வெளியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குச் சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் உள்ளன.

இவற்றின் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 பிரிவுகளிலும் சேர்த்து தினமும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 2 பிரிவுகளுக்கும் தினசரி 23 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து சரக்கு ரயில் மூலம் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நிலக்கரியை நிலக்கரி அரவை இயந்திரங்கள் மூலம் பொடியாக்கப்பட்டு, கொதிக்கலன் வழியாக செலுத்துவதன் மூலம் மின் உற்பத்தி நடக்கிறது.

இதனிடையே, நிலக்கரி அரவை இயந்திரத்தில் நிலக்கரியை பொடியாக்கும் போது, அதிலிருந்து வெளியேறும் நிலக்கரி துகள் மற்றும் சாம்பல் புகை காற்றில் பறந்து, அனல் மின் நிலையம் அருகேயுள்ள சின்னக்காவூர், தாழையூர் பகுதியில் உள்ள கிராமத்தில் விழுகிறது.

இதனை அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் சுவாசிக்கும் போது, நுரையீரல், ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நிலக்கரி அரைக்கும் போது, வெளியேறும் துகள்களை காற்றில் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேட்டூர் அணை மின் நிலையத்தில் நிலக்கரி அரவையின் போது வெளியேறிய
நிலக்கரி துகள்கள் சின்னக்காவூர் பகுதியில் படர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து சின்னக்காவூர் பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் திருமுருகன் கூறியதாவது: பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு சின்னக்காவூர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தில், 1,700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிக்கு அருகேயுள்ள அனல் மின் நிலையத்தில் நிலக்கரி அரைக்கும் போது, அதிலிருந்து வெளியேறும் துகள் காற்றில் பறந்து கிராம பகுதி முழுவதும் படர்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமாக, நுரையீரல் பாதிப்பு, காசநோய், புற்று நோய் என பல்வேறு நோய்களுக்கு நேரடியாக ஆளாகி வருகின்றனர்.

பி.என்.பட்டி பேரூராட்சிக்கு, அப்பகுதி மக்கள் ஆண்டுக்கு ரூ.1.50 கோடிக்கு மேல் வரி செலுத்துகின்றனர். ஆனால், அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் புகை, நிலக்கரி துகளால் பாதிக்கும் மக்களை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அனல் மின் நிலைய நிர்வாகத்தில் பல முறை கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளவில்லை.

நிலக்கரி அரைக்கும் இயந்திரத்தில் இருந்து வெளியேறும் புகை, துகள்களை கட்டுப்படுத்த அதிநவீன வலை அமைத்தாலே போதும், ஆனால், வலை கூட அமைக்காமல் அனல் மின் நிலைய நிர்வாகம் தவிர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அனல்மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அனல் நிலையத்தில் முழுமையாக பராமரிப்பு பணி மேற்கொள்ள சுமார் ரூ.200 கோடி தேவைப்படுகிறது. ஆனால், ஆண்டுக்கு ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கப்படுவதால் முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.

அதேபோல் பராமரிப்பு பணிக்கான பொருட்களையும் முறையாக வழங்குவதில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து நிலக்கரி துகள் மற்றும் சாம்பல் புகை வெளியேறுவதை தடுக்க, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பராமரிப்பு பணிக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

மேலும்