எல்-நினோவின் காரணமாக இந்தியாவில் 2009-2010-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் தானிய உற்பத்தியிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. இப்போது மீண்டும் இந்தியாவில் எல்-நினோவின் பாதிப்புகள் தீவிரமாகும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், எல்-நினோ குறித்து தற்போது நாம் பேச வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் 80 சதவீதம் பகுதிகள் தென்மேற்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது. இந்த ஆண்டு, எல்-நினோ நிகழ்வால் இந்தியாவில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யும் என அஞ்சப்படுகிறது.
எல்-நினோ என்றால் என்ன? - முதலில் எல்-நினோவை பற்றி தெரிந்துகொள்வோம். எல்-நினோ என்பது காலநிலை நிகழ்வு. இது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பமயமாதலுடன் தொடர்புடைய காலநிலை மாற்றமாகும். எல்-நினோ காலத்தில் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் கடுமையான வறட்சி ஏற்படும். குறைந்த நேரத்தில் அதீத மழை, திடீர் புயல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். எல்-நினோ நிகழ்வு சராசரியாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்று வானிலை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எல்-நினோ நிகழ்வால் உலக நாடுகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான தாக்கத்தை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வானிலை ஆராய்ச்சி அமைப்பு (US National Oceanic and Atmospheric Administration – NOAA) எச்சரித்துள்ளது. எல்-நினோ தாக்கம் இடத்துக்கு இடம் வேறுபட்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா, அமெரிக்கா, சோமாலியா மற்றும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலான மழைப் பொழிவு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, எல்-நினோவினால் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் தெற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் கடுமையான வறட்சி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
» மின் கட்டண உயர்வு எதிரொலி: சேலத்தில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!
» ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ்!
எல்-நினோ தாக்கம் இந்தியாவில் எப்படி இருக்கும்? - இந்தியாவைப் பொறுத்தவரை எல்-நினோ பாதிப்பு ஏற்பட 70 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல்-நினோவின் தாக்கம் ஜூலை 2023 முதல் இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மருத்துவத்தில் எல்-நினோ தாக்கம் எவ்வாறு இருக்கும்? - மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பமயமாதல் விளைவால் உண்டான எல்-நினோவினால் 2015-2016 ஆண்டுகளில் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் எத்தியோப்பியா, எரித்திரியா , சோமாலியா மற்றும் ஜிபூட்டி கென்யா, சூடான், உகாண்டா போன்ற நாடுகள் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியது நினைவிருக்கும்.
அப்போது, கடுமையான வறட்சி மற்றும் வெள்ளத்தால் தீவிர உணவு தட்டுப்பாட்டை அவை சந்தித்தன. இதில், குறிப்பாக பூமியின் வெப்பநிலை உயர்வு காரணமாக கடல் மட்டம் உயர்ந்தன. இவை பல்வேறு நோய் பரவலுக்கு காரணமாகின. மேலும் இதனால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுவாச நோய்கள் உட்பட பலவிதமான உடல்நலப் பிரச்சினைகள் உருவாகின. அத்துடன், எல்-நினோ டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன் குனியா போன்ற வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அரசியலில் எல் நினோவின் தாக்கம்: இந்தியாவின் அரசியலை தீர்மானிப்பதில் வானிலை எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்-நினோவின் வருகையுடன், 2023-24 காலநிலையும் அரசியலும் ஒரு முக்கிய ஆண்டாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.
இந்தியாவின் வரலாற்றில் தேர்தல்கள் எப்போதும் எல்-நினோ ஆண்டோடு ஒத்துப் போகின்றன என்பதை நீங்கள் கவனித்து உள்ளீர்களா? உதாரணத்துக்கு, 1979-ல் எல்-நினோ காரணமாக இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட மிக மோசமான வறட்சி, உணவுப் பற்றாக்குறை இருந்தது. இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக இந்த வீழ்ச்சி 1980-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு காலநிலை சவால்களுக்கு இந்தியாவின் ஆளும் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்தே அதன் தேர்தல் முடிவுகள் அமைகின்றன. அடுத்த ஓராண்டுக்குள் இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களும், மே 2024-ல் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளன. இதில் காலநிலை மாற்றமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
விவசாயத்தில் எல்-நினோவின் தாக்கம்: எல்-நினோ குளிர்காலத்தில் இந்தியாவில் வெப்பமான வானிலை மற்றும் கோடையில் வறண்டும், போதுமான பருவமழைக்கும் வழிவகுக்கிறது. இது, விவசாயத்தை மேலும் பாதிக்கிறது. வறட்சி போன்ற சூழ்நிலை பயிர்கள் இழப்புக்குக்கூட வழிவகுக்கும்.
2001 முதல் 2020 வரையில், இந்தியா 6 முறை எல்-நினோ நிகழ்வை எதிர்கொண்டது. இவற்றில், நான்கு ஆண்டுகள் வறட்சிக்கு வழிவகுத்தது. இதனால் கோடையில் பயிர் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. இதில் தமிழகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
எல்-நினோவின் விளைவு பற்றி ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் பிரபாகரன் கூறும்போது, “ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளும் எல்-நினோ வருவதை 90% உறுதி செய்துள்ளார்கள். இந்த நிகழ்வுகள் வரும்போது மழைப்பொழிவு குறையும். ஆனால் 2015-ம் ஆண்டு எல்-நினோ வந்தபோது மாறாக பெருமழை பெய்தது. எனினும் வரும் ஆண்டுகளில் வறட்சியும் ஏற்பட வாய்ப்பு இருக்கும். அதேபோல் குறைந்த மணி நேரத்தில் அதிக மழைப் பொழிவு இருக்கும். அந்த மாதிரியான சூழலை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்கிறமோ என்றால், அதற்கு சாத்தியம் குறைவு.
கடந்த 1950-ம் ஆண்டு முதல் தற்போது வரை 12 முறை இந்தியா வறட்சியை சந்தித்து இருக்கிறது. அதில் 8 முறை எல்-நினோவினால் ஏற்பட்டது. அதனால் இப்போதும் அதிக வறட்சியும், அதிக மழையையும் எதிர்பார்க்கலாம். பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை 0.5 டிகிரி அதிகரித்தால் அதைத்தான் எல்-நினோ என்று குறிப்பிடுகிறார்கள்.
நமது பூமியின் சராசரி வெப்ப நிலை இப்போது 1.2 டிகிரி சென்றுள்ளது. இது 2030-ம் ஆண்டில் 1.5 டிகிரி செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த புதைபடிவ எரிபொருள் (fossil fuel) பயன்பாட்டை குறைக்க வேண்டும். எரிபொருள் உற்பத்தி முறையை முழுவதும் மாற்றம் வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இதை செய்தால் காலநிலை மாற்றத்தை குறைக்க முடியும்” என்று கூறினார்.
எல்-நினோ தீவிரம் அடைந்து வருகிறது. அதன் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. குறிப்பாக, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2.5 முதல் 3 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சக் கூடிய அளவுக்கு காடுகள் மற்றும் மரங்களை வளர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 50 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக 2022ல் நடைபெற்ற பாரீஸ் கால நிலை ஒப்பந்த மாநாட்டில் இந்தியா உறுதி அளித்திருக்கிறது.
பூமி வெப்பநிலை அதிகரிப்பு என்பது தற்போது தீவிர பேசுபொருளாகி இருக்கிறது. அந்த வகையில் அதன் தீவிரத்தை உணர்ந்து நமது எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியான சுற்றுச்சூழலை தருவது தனிமனித கடமை என்பதை நாம் உணர வேண்டும். அத்துடன், உலக நாடுகள் வெறும் பேச்சளவில் மட்டும் காலநிலை மாற்றத்துக்கு தீர்வுகளை வைக்காமல் செயல்பாட்டு அளவிலும் இறங்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
8 days ago