வையாவூர், நத்தப்பேட்டை ஏரிகள் சரணாலயம் ஆகுமா? - பறவை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

By கோ.கார்த்திக்

காஞ்சிபுரம்: பறவைகள் கூட்டம் கூட்டமாக வசிக்கும் காஞ்சிபுரம் அடுத்த வையாவூர், நத்தப்பேட்டை ஏரிப்பகுதிகளை சரணாலயமாக மாற்ற வேண்டும். பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளபடி, அங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இப்பகுதி சரணாலயமாக மாறினால், சாயக்கழிவுகள் இல்லாத தூய்மையான நீர், பாசனத்துக்கு கிடைக்கும் என்பதால் விவசாயிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வையாவூர், நத்தப்பேட்டை ஏரிகள் அமைந்துள்ளன. இதில், நத்தப்பேட்டை ஏரிக்கு நகரப் பகுதியின் நடுவே உள்ள மஞ்சள்நீர் கால்வாய் மூலம் நீர்வரத்து உள்ளது. காஞ்சிபுரம் நகரப் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர், கழிவுநீர், மஞ்சள்நீர் கால்வாய் மூலம் நத்தப்பேட்டை ஏரிக்கு செல்கிறது.

இதேபோல, மாநகரின் பாதாள சாக்கடை திட்டம் மூலம் சுத்திகரிக்கப்படும் கழிவுநீரும் நத்தப்பேட்டை ஏரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆண்டு முழுவதும் நத்தப்பேட்டை ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படும். குறிப்பாக, மழைக் காலங்களில் ஏரிக்கு அதிக அளவில் நீர்வரத்து இருக்கும். ஏரி நிரம்பியதும் கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர், வையாவூர் ஏரியை சென்றடையும்.

இதனால், நத்தப்பேட்டை ஏரியில் பறவைகளுக்கு ஏற்ற ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும், கரைகளிலும் பனை, கருவேலம் உள்ளிட்ட மரங்கள் நிறைந்து காணப்படுவதால், வேடந்தாங்கல் சரணாலயத்தில் வசிப்பதுபோல ஏரி மற்றும் கரைகளில் உள்ள மரக்கிளைகளில் கூழைக்கடா, நீர் காகம், நீர் வாத்து, பல வகையான நாரைகள் என ஏராளமான பறவை இனங்கள் வசித்து வருகின்றன.

இதேபோல, வையாவூர் ஏரியின் நடுவே உள்ள கருவேல மரங்களிலும் பறவைகள் அதிகம் வசிக்கின்றன. அதனால், மேற்கண்ட 2 ஏரிகளையும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள், சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2 ஏரிகளையும் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பது குறித்து பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், ஏரிக்கரைகளில் பறவைகளுக்கு பயன்படும் வகையிலான மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என வனத் துறை, நீர்வள ஆதாரத் துறைக்கு பசுமை தீர்ப்பாயம் பரிந்துரைசெய்துள்ளது. ஆனாலும், இதற்கான நடவடிக்கைகளை இத்துறைகள் மேற்கொள்ளாமல் உள்ளன.

இந்த ஏரிகளை பறவைகள் சரணாலயமாக மாற்றும் முயற்சிக்கு இப்பகுதி விவசாயிகளும்வரவேற்பு தெரிவித்துள்ளனர். 2 ஏரிகளையும் பறவைகள் சரணாலயமாக அறிவித்தால், மஞ்சள்நீர் கால்வாய் மூலம் சாயப்பட்டறை கழிவுகள் ஏரியில் கலப்பது தடுக்கப்பட்டு பாசனத்துக்கு உகந்த நீர் கிடைக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து இத்துறை சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாவது: ‘விதைகள்’ தன்னார்வ அமைப்பின் தலைவர் பசுமை சரண்: பறவைகள் தங்கள் இருப்பிடங்களை எளிதில் தேர்வு செய்யாது. ஆனால், ஏரிகளை அவை பாதுகாப்பான பகுதியாக கருதுகின்றன. அருகில் விளைநிலங்கள் இருப்பதால், பறவைகளுக்கு எளிதாக இரை கிடைக்கிறது. அதனால்,பறவைகள் இங்கு தங்கியுள்ளன. எனவே, இந்தசூழலை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.

இயற்கையாகவே ஏரியை சுற்றி ஏராளமானமரங்கள் உள்ளன. அமைதியான சூழலில் ஏரி அமைந்துள்ளது. எங்களுக்கு அனுமதி கிடைத்தால், ஏரிக்கரையில் மரங்களை நட தயாராக உள்ளோம். பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத காஞ்சியில், பறவைகள் சரணாலயம் அமைந்தால் கோயில்களை சுற்றி பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் சரணாலயத்தையும் கண்டு ரசிப்பார்கள். இதன்மூலம், சுற்றுலா துறை மேம்பட்டு, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் அதிகரிக்கும்.

விவசாயி நேரு: நத்தப்பேட்டை ஏரி மூலமாககடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 800 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெற்றன. நாளடைவில், மஞ்சள்நீர் கால்வாய் மூலம் ஏரியில் சாயப்பட்டறை கழிவு கலந்து வருவதால் விளை நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது, 500 ஏக்கர் நிலங்கள் மட்டுமேபாசன வசதி பெறுகின்றன.

அதனால், பறவைகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்தல் போன்ற பணிகளை வனத்துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும். இதன்மூலம், ஏரியின் நீர் தூய்மையடைந்து விவசாயிகளின் பாசன தேவையும் பூர்த்தியாகும். சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலாத்தலமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘நத்தப்பேட்டை ஏரியில் பறவைகளுக்கான சூழலை மேம்படுத்த தயாராக உள்ளோம். ஆனால், நீர்ப்பாசனத் துறையின் கட்டுபாட்டில் ஏரி உள்ளதால், அத்துறையின் ஒப்புதல் பெற வேண்டி உள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கினால், நாளடைவில் வனத் துறையின் கட்டுப்பாட்டிலேயே ஏரி சென்றுவிடும் என்று ஒப்புதல் அளிக்க தயங்குகின்றனர்.

இது போன்ற நிர்வாக பிரச்சினைகளால், ஏரியின் மேம்பாட்டு பணி பாதிக்கப்படுகிறது. எனினும், மேற்கண்ட ஏரிகளை ஒட்டி, மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

13 hours ago

சுற்றுச்சூழல்

13 hours ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

2 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

11 days ago

மேலும்